Ad Widget

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குற்றச்சாட்டை நிராகரித்தார் ஹத்துருசிங்க!

Mahintha-hathturusinga-armyவலிகாமம் வடக்கில் சிறிலங்கா படையினருக்கு வீடுகளை அமைப்பதற்காக தமிழ் மக்களின் வீடுகள் அழிக்கப்பட்டு வருவதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறியுள்ள குற்றச்சாட்டை யாழ்.படைத்தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க நிராகரித்துள்ளார்.

வலிகாமம் வடக்கில் தமிழ் மக்களின் வீடுகளை அழிக்கும் நடவடிக்கைகளை சிறிலங்கா படையினர் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் கவனத்துக்கு கொண்டு சென்றிருந்தார்.

இதையடுத்து, வீடுகளை அழிக்கும் நடவடிக்கைகளை சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச உத்தரவிட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

எனினும், அந்த உத்தரவை மீறும் வகையில் தொடர்ந்தும் வீடுகளை அழிக்கும் பணிகள் வலிவடக்கில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.

இதுகுறித்து சிறிலங்கா அதிபர் தம்மிடம் விசாரித்தார் என்பதை சிறிலங்கா இராணுவத்தின் யாழ் படைத்தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க, ஒப்புக்கொண்டுள்ளார்.

“யாழ்.குடாநாட்டில் அத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சிறிலங்கா படைகளின் பெயரைக் கெடுக்கும் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார் என்றும் நான் ஜனாதிபதிக்கு எடுத்துக் கூறினேன்.

நாம் பலாலிப் படைத்தளப் பகுதியில் புதிய முகாம்களை மட்டுமே நிறுவுகிறோம். சிறிலங்கா இராணுவத்துக்கு எதிராக அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் யாழ்ப்பாணத்திலுள்ள ஊடகங்களும் கூச்சல் போடுகின்றன.

யாழ்.குடாநாட்டில் உள்ள எல்லா சிறிய முகாம்களையும் மூடிவிட்டு, பலாலி பெருந்தளப் பகுதிக்குள் புதிய முகாம்களை நிறுவுகின்றோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts