Ad Widget

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொழும்பில் போட்டியிடுவது குறித்து இன்னமும் முடிவில்லை!

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் கொழும்பில் போட்டியிடுவது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னமும் முடிவு எதனையும் எடுக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து அக்கட்சியின் சார்பில் விடுக்கப்பட்ட அறிக்கை முழுமையாக அப்படியே வருமாறு:

வரும் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் தமிழரசுக் கட்சி போட்டியிடப் போகிறதா? இல்லையா? எனும் முடிவு எடுக்கப்படாத நிலை தொடர்ந்து இருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் இது பற்றிய எமது உண்மை நிலையை கொழும்பு வாழ் தமிழர்களுக்குத் தெளிவுபடுத்தவேண்டிய கடப்பாடு எமக்கு இருப்பதாக உணர்கின்றோம்.

கொழும்பு மாவட்டத்தில் வாழும் வட-கிழக்குத் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தக் கூடியவாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தமிழரசுக் கட்சி வேட்பாளர்களை நிறுத்த வேண்டும் என்ற தொடர்ச்சியான அழுத்தங்கள் எமக்கும் தலைமைப் பீடத்திற்கும் கடந்த சில மாதங்களாகவே விடுக்கப்பட்டு வந்தன.

இது குறித்து தமிழரசுக் கட்சியின் பல செயற் குழுக் கூட்டங்களில் இவ் விடயம் விரிவாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. பிரதிநிதி ஒருவர் தேர்ந்தெடுக்கப்படக்கூடிய அளவிற்கும் மேலதிகமாகவே கொழும்பில் வட-கிழக்குத் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றார்கள் என்பதுவும். அதை விடவும் அந்த வாக்குகள் தேசியப்பட்டியல் மூலமாக மேலும் ஒரு பிரதிநிதியையும் நாம் பெற்றுக் கொள்ளக்கூடிய வாய்ப்பைக்கூட ஏற்படுத்தக்கூடியதாக இருப்பதுவும் இந்த அழுத்தம் மேலோங்கக் காரணமாகும்.

கடந்த கால தேர்தல்களில் இந்த வாய்ப்புக்கள் தெளிவாகக் கவனிக்கப்படக் கூடியவாறு இருந்தமை குறிப்பிடத்தக்கது. இதன்போது, நேசசக்தியாக மனோகணேசனையும் சேர்த்துக் களம் இறங்குவதற்கான யோசனையும் சாதகமாகப் பரிசீலிக்கப்பட்டது.

இந்த நிலைமை இன்றுவரை நீடிக்கின்றபோதும் மனோ கணேசன் ஐக்கிய தேசியக் கட்சிப் பட்டியலில் களமிறங்குகிறார் என உறுதியான செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் இங்கு தமிழர்கள் குழப்பமடைந்துள்ள நிலைமை யதார்த்தமானதே.

சுமந்திரனின் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தூதுக்குழு மனோ கணேசனுடன் இந்த வார முற்பகுதியில் இதுபற்றி மேலும் ஆலோசனை நடத்தியது. இந்த சந்திப்பு தொடர்பான மேலதிக விவரங்களைத் தற்போது வெளியிடுவது ஏற்றதாக இருக்கும் என நாம் கருதவில்லை.

இருந்தபோதும், இலங்கைத் தமிழரசுக் கட்சியும் அது சார்ந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் கொழும்பு மாவட்டத் தேர்தல் தொடர்பில் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள், யாருக்கு எமது மக்கள் ஆதரவை வழங்கவேண்டும். தமிழர் வாக்குப்பலம் சிதறுண்டுபடாதவாறு ஒட்டுமொத்தத் தமிழருக்கும் நன்மை பயக்கக்கூடியவாறு அது எவ்வாறு பிரயோகிக்கப்படலாம் என்பன போன்ற விடயங்கள் பற்றி மக்களுக்கு விரைவில் தெளிவுபடுத்துவோம்.

முடிவுகள் எதுவாகவிருப்பினும் அவை நிச்சயம் எமது மக்களது எதிர்கால நலன்களை முன்னிறுத்தி எடுக்கப்படுவனவாகவே அமையும் என்பதை உறுதியாக சொல்லிக்கொள்ள விரும்புகிறோம்.

Related Posts