Ad Widget

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து புதிய அரசாங்கத்தை அமைக்க முயல்கிறார் ரணில்!

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து புதிய அரசொன்றை உருவாக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முயற்சிக்கின்றார்” எனத் தெரிவித்த முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ஸ, “இந்த அரசு உருவாகிவிட்டால், வடக்கில் ஒரு இராணுவ முகாம்கூட இருக்காது. அனைத்தும் அகற்றப்படும்” என்றும் கூறினார்.

இதேவேளை, “அன்று ஆயுதத்தால் வடக்கு, கிழக்கை மட்டும் கைப்பற்ற திட்டமிட்டிருந்த புலிகள் இன்று டொலரால் முழு நாட்டையும் கைப்பற்ற முயற்சிக்கின்றனர்” எனத் தெரிவித்த புதிய ஹெல உறுமயவின் தலைவரும் மேல் மாகாணசபை உறுப்பினருமான உதய கம்மன்பில, புலிகளுக்குவருடாந்த வருமானம் 300 மில்லியன் அமெரிக்க டொலர் தற்போது கிடைத்துக்கொண்டுதான் இருக்கின்றது. இலங்கையின் பொருளாதார மத்திய நிலையங்களைக் கைப்பற்ற இவர்கள் முயற்சிக்கின்றனர் என்றும் குற்றஞ்சாட்டினார்.

நாரஹேன்பிட்டியிலுள்ள அபயராம விகாரையில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

இதன்போது கருத்து வெளியிட்ட முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ஸ, “வடக்கில் இராணுவத்தினரால்தான் போதைப்பொருள் பரப்பிவிடப்பட்டுள்ளது என முதலமைச்சர் விக்னேஸ்வரன கூறியுள்ளார். கடந்த 5 வருடங்களாக வடக்கில் போதைப்பொருள் இல்லை. தற்போதுதான் தென்னிந்தியாவிலிருந்து வடக்கிற்கு போதைப்பொருள் கடத்தப்படுகிறது. இவ்வாறான நிலையில், இராணுவத்தினர் மீது குற்றஞ்சாட்டி, அவர்களை அங்கிருந்து வெளியேற்ற இவர்கள் முயற்சிக்கின்றனர்.

இந்த அரசு அடுத்த தேர்தலில் வெற்றிபெற்றால் வடக்கில் ஓர் இராணுவ முகாம்கூட இருக்காது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து புதிய அரசை உருவாக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முயற்சிக்கின்றார். இதற்கு நாம் இடமளிக்க முடியுமா” – என்றார்.

இதன்போது கருத்து வெளியிட்ட மேல் மாகாணசபை உறுப்பினர் உதய கம்மன்பில, “கடந்த காலங்களில் புலிகளுக்கு வருடாந்தம் 300 மில்லியன் அமெரிக்க டொலர் கிடைத்தது. அந்தப் பணம் தற்போதும் கிடைக்கின்றது. இதனூடாக இலங்கையின் பொருளாதார மத்திய நிலையங்களைக் கைப்பற்ற அவர்கள் முயற்சிக்கின்றனர். இன்னும் சில காலத்தில் யாழ்ப்பாண வங்கியும் வரும்” – என்றார்.

Related Posts