Ad Widget

தமிழர்களின் முதுகில் குத்தியது இந்தியா – சிவாஜிங்கம்

Sivaji-lingamஜெனீவாவில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு வாக்களிக்காமல் இந்தியா விலகி மீண்டும் ஒரு தடவை இலங்கைத் தமிழர்களின் முதுகில் குத்திவிட்டது என்று வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிங்கம் தெரிவித்தார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ‘ஜெனிவா கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு 23 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன.

ஆதரவாக வாக்களித்த நாடுகளுக்கும் வாக்களிக்காமல் விலகிக்கொண்ட முஸ்லீம் நாடுகளுக்கும் தமிழ் மக்கள் சார்பாக எங்கள் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஆனால் இந்தியா இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாதது மீண்டும் ஒரு தடவை இலங்கைத் தமிழ் மக்களின் முதுகில் குத்திவிட்டது’ என்றார்.

‘ஜெனீவாவில் அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை ஒத்திவைப்பது தொடர்பிலான வாக்கெடுப்பின் போது ஆதரவு தெரிவித்தும், இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள விடயத்தை நீக்க வேண்டும் என்று பாகிஸ்தான் பிரேரித்த போது அதற்கு எதிராகவும் இந்தியா வாக்களித்திருந்த நிலையில் இறுதி வாக்கெடுப்பில் கலந்துகொள்ளதது கவலையளிக்கின்றது’ என சிவாஜிலிங்கம் கூறினார்.

‘தனது பூலோக நலன்களை கருத்திற்கொண்டு இதனை இந்தியா செய்ததாக தெரிவித்தாலும் இந்தியாவை நாங்கள் என்றும் நேசிக்கின்றோம். இந்திய அரசாங்கம் தான் தொடர்ச்சியாக தவறுகளைச் செய்து வருகின்றது’ என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இந்தியா சில வேளைகளில் இலங்கையில் நிலைகொள்ள வேண்டிய தேவை ஏற்படலாம் அவ்வாறு ஏற்படும் பட்சத்தில் வடக்கு கிழக்கு தமிழர்களின் ஆதரவு இல்லாமல் அதனை மேற்கொள்ள முடியாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts