Ad Widget

தமிழர்களின் எண்ணங்களையும் உள்வாங்கி புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் – சிறீதரன் எம்.பி

தமிழர்களின் எண்ணங்களையும் உள்வாங்கி புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

புதிய அரசியலமைப்பும் தமிழர்களின் முன்மொழிவும் எனும் தலைப்பில் தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் இணைய வழி மூலமான கலந்துரையாடல் நேற்று நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தலைமையில் நடைபெற்றது. குறித்த நிகழ்வில் தலைமையுரை ஆற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதுவரை உருவாக்கப்பட்ட அரசியல் அமைப்புக்கள் யாவும் தமிழர்களின் கருத்துக்களையும் உணர்வுகளையும் பிரதிபலிக்காது சிங்கள அரசியல் தலைவர்களின் எண்ணங்களுக்கும் சிங்கள மக்களைத் திருப்திப்படுத்தும் வகையிலுமே அரசியல் அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது.சிங்களத் தலைவர்களால் முன்மொழியப்பட்ட தமிழர்களின் உரிமை சார்ந்த விடயங்கள் கூட உள்வாங்கப்படவில்லை. அரசியல் அமைப்பிலும் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டதால்த்தான் எமது இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி போராடினார்கள். தமிழ் தலைவர்களினதும் தமிழ் புத்திஜீவிகளினதும் தமிழ் மக்களினதும் கருத்துக்களை கேட்டு அறிய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் இல தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா பதில் பொது செயலாளர் சத்தியலிங்கம் பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன் , சாணக்கியன், கலையரசன் பிரதேச சபைகளின் தவிசாளர்கள் உறுப்பினர்கள் பிரதேச அமைப்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்

Related Posts