தமிழர்களின் இனப்பிரச்சனைக்கு இந்த ஆண்டுக்குள் தீர்வு!!– சம்பந்தன்

தமிழர்களின் தேசிய பிரச்சனையான இனப்பிரச்சனைக்கு இந்த ஆண்டுக்குள் தீர்வு கிடைத்துவிடுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா சம்பந்தன் தெரிவித்துள்ளதுடன் இந்நடவடிக்கையைக் குழப்ப முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ஷ முயன்று வருவதால் தமிழ்மக்களை நிதானமாகவும் பக்குவமாகவும் நடந்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

புதிய அரசியல் சாசனத்தை நிறைவேற்றுவது, தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுப்பது ஆகிய விடயங்களில் தற்போதைய அதிபர் மைத்திரிபாலசிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரில் நம்பிக்கையுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். எனினும் நல்லாட்சி அரசில் அங்கம் வகிக்கும் சில அரச அதிகாரிகள், மற்றும் அரசியல்வாதிகள் இப்போதும் மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாகவே செயற்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், அரசியல் சாசன தயாரிப்பு நடவடிக்கைகள் துரித கதியில் நடைபெறுகின்றன.

இந்த நடவடிக்கையைக் குழப்புவதற்கு சிறீலங்காவின் முன்னாள் அதிபர் முயன்றுவருவதாகவும், அதற்காகவே, எதிர்வரும் 28ஆம் திகதி கண்டியிலிருந்து கொழும்புக்கு பாதயாத்திரை நடாத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஜெனீவாத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்தல், அரசியல் கைதிகள் விடுதலை உட்பட சில பிரச்சனைகளைத் தீர்ப்பதில் அரசாங்கம் தாமதிப்பதை ஏற்றுக்கொண்ட அவர் அதற்கு மகிந்தராஜபக்ஷவும் மைத்திரி அரசாங்கத்துக்கு விசுவாசமல்லாத இராணுவமுமே காரணம் எனவும் தெரிவித்துள்ளார்.

Related Posts