Ad Widget

தமிழரின் பிரச்சினைக்கு உடனடித் தீர்வுவேண்டும்!சம்பந்தன் வலியுறுத்து!!

தமிழ் மக்களின் நீண்டகாலப் பிரச்சினையானது அவசர விடயமாகக் கருதப்பட்டு தீர்க்கப்படவேண்டும் என்று புதிய அரசிடம் நாடாளுமன்றில் வைத்து கோரிக்கை விடுத்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் எம்.பி.

sampanthan

தமிழ் மக்களின் பிரச்சினைக்கு வழங்கப்படும் தீர்வானது நியாயமானதாகவும், பயனுடையதாகவும் நீடித்து நிலைக்கக் கூடியதாகவும் இருக்கவேண்டும் என்றும், பிளவுபடாத இலங்கை என்ற கட்டமைப்புக்குள்ளேயே தாம் இதனை எதிர்பார்க்கின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.

புதிய அரசு ஆட்சிபீடமேறிய பின்னர் நேற்று கூடிய முதலாவது நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-

“ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள மைத்திரிபால சிறிசேனவுக்கும், பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்கிரமசிங்கவுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

குறிப்பாக, அண்மையில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின்போது ஜனாதி பதி வேட்பாளராகப் போட்டியிட்ட தற் போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியிருந்தது.

ஆதரவு வழங்குவ தற்கு நாம் எந்தவொரு பதவியையும் கோரவில்லை. எமது மக்களுக்கும் எமது தேர்தல் பிரசார நடவடிக்கை பற்றி தெளிவாக விளக்கினோம். எனினும், சில தரப்பு இனவாத கோணத்தில் பிரசாரத்தை முன்னெடுத்தது. இறுதியில் அது பயனளிக்கவில்லை.

வடக்கு, கிழக்கிலும் அதேபோல் முழு நாட்டையும் சேர்ந்த தமிழ், முஸ்லிம் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானத்துக்கு ஒருமித்த பதிலை தேர்தலில் வழங்கியிருந்தனர். அவர்களுக்கு நாம் நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம்.

நாட்டின் அனைத்து மக்களுடனும் இணைந்து தமிழ் பேசும் மக்களும் 100 நாள் வேலைவத்திட்டத்துக்கு இணங்கி, நாட்டுக்கு பயனளிக்கக் கூடிய ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்துவதற்கு செயற்பட்டனர்.

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு ஐக்கிய இலங்கைக்குள் நிரந்தரமானதும் – நியாயபூர்வமானதும் – பயனளிக்கக்கூடியதும் – நீடித்துக் நிலைக்கக்கூடியதுமான தீர்வு வழங்கப்படவேண்டும்.

60 வருடங்களாக இந்தப் பிரச்சினை தீர்க்கப்படாதுள்ளதால் இந்த நாட்டுக்கு பாதிப்புகளே ஏற்பட்டுள்ளன. எனவே, முழு நாட்டினதும் நலன் கருதி தமிழ் மக்களின் பிரச்சினையை அவசர விடயமாகக் கருதவேண்டும். அந்த இலக்கை அடைவதற்கு நாம் எமது பூரண ஆதரவையும் வழங்குவோம். பெரும்பாலான இலங்கை மக்கள் இதற்கு ஆதரவை வழங்குவார்கள் என்று நம்புகின்றோம்” – என்றார்.

Related Posts