Ad Widget

தமிழகத்தின் அறவழிப் போராட்டங்கள் மீது காவல்துறையினரால் நடாத்தப்பட்ட தாக்குதல்களுக்கு கண்டனம்

தமிழகத்தின் அறவழிப் போராட்டங்கள் மீது காவல்துறையினரால் நடாத்தப்பட்ட தாக்குதல்களுக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த 8 ஆம் திகதி முதற்கொண்டு இடம்பெற்று வரும் அகிம்சை வழிப் போராட்டங்கள் மீது 23 ஆம் திகதி அன்று தமிழக காவல்துறையினர் மேற்கொண்ட தாக்குதல்களை தமிழ் தேசிய மக்கள் முன்னணி வன்மையாக கண்டிக்கின்றது.

இலட்சக்கணக்கான தமிழர், நாள் கணக்கில் கூடி அமைதியான முறையில் தமது போராட்டத்தை நடாத்தியிருந்த போதும், போராட்டத்தில் ஈடுபட்டோரை மாத்திரமின்றி போராட்டத்தையும் குற்றமாக்கி (criminalize) அவர்கள் மீது அரச இயந்திரம் வன்முறையை பிரயோகித்தது கடுமையான கண்டனத்துக்குரியது. இவ்வாறு இலங்கைத்தீவில் கூட தமிழரின் நியாயமான போராட்டங்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் ஊடாக மாத்திரமின்றி, அரசியல், பொருளாதார பலம்பொருந்திய சக்திகளுக்கு ஆதரவாக நிற்கும் ஊடகங்களாலும் முடக்கப்பட்டு வந்துள்ளன. தமிழரின் பண்டைய பண்பாட்டு அடையாளங்களில் ஒன்றான ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்ததற்கு எதிராக தமிழக மாணவர்களினால் சுய முனைப்போடு ஆரம்பிக்கப்பட்ட போராட்டம், படிப்படியாக பரவலடைந்து தமிழர் மீதான அடையாள திணிப்பிற்கு எதிராகவும், தமிழ் நாட்டின் நலன்கள் மீது தொடர்ந்தும் இழைக்கப்பட்டு வரும் அநீதிகளுக்கு எதிராகவும், வியாபித்தமையை நாம் ஆழமான கரிசனையோடு அவதானித்து வருகின்றோம்.

இலங்கைத்தீவில் இடம்பெற்று வரும் தமிழரின் உரிமைப் போராட்டங்களுக்கு தமிழக உள்ளங்கள் என்றும் தம்மை அர்ப்பணித்து, துணை நின்றிருந்தனர் என்பதனை நாம் நன்றியுணர்வுடன் இவ்விடத்தில் நினைவு கூருகின்றோம். பலத்த இராணுவ / அரச இயந்திர கெடுபிடிகள், இராணுவப் புலனாய்வு நடவடிக்கைகள், மற்றும் தமிழ்ச் சமூகத்தினிடையே திட்டமிட்ட தேசிய அரசியல் நீக்கச் செயற்பாடுகளின் மத்தியில் இலங்கைத்தீவில் தமிழர் கூட்டாக ஜனநாயக ரீதியாக ஒன்று கூடுவது நிரந்தரமாக இல்லாதொழிக்கப்படுமோ என்று நாம் அஞ்சியிருக்கும் நிலையில், தமிழக உள்ளங்களுக்கு ஆதரவாக இலங்கையின் தமிழர் தாயகப் பிரதேசங்களிலும், தென்னிலங்கையிலும் தமிழர் திரள்வது நமக்கு நம்பிக்கையும் பூரிப்பும் அளிக்கிறது.

ஒரு மக்கள் குழுமம் மீது பெரும்பான்மை அரச கட்டமைப்புக்கள் தமது அடையாளத்தை திணித்தல் எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழக நெஞ்சங்களும் இலங்கைத் தீவின் தமிழரும் தொன்றுதொட்டு இதனையே வலியுறுத்தி வந்துள்ளனர். மேலும், ஒரு சமூகக் குழுமம் அரச கட்டமைப்புக்களின் சமமற்ற அடையாள படிநிலைகளினால் வரலாற்று ரீதியாக எவ்வாறு ஒடுக்கப்பட்டுள்ளது என்பதனை முற்றாக உதாசீனம் செய்து, மீட்போர் மனநிலையுடன் அச்சமூகத்தை ‘இரட்சிக்க’ முயலும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், அதே அரச கட்டமைப்புக்கள் பக்கம் சார்ந்து நிற்பதும், அறிந்தோ அறியாமலேயோ அந்த அடையாள ஒடுக்குமுறைகளுக்கு துணை நிற்பதும் நமக்கு வியப்பானதொன்றல்ல.

எனவே, தமிழரின் அடையாளங்கள் முதற்கொண்டு அவர்களின் கூட்டு அரசியல், சமூக, பொருளாதார நிலைப்பாடுகளும் விழுமியங்களும் சமூக உரையாடல்கள் மூலம் அவர்களாலேயே நிர்ணயிக்கப்பட வேண்டியவை என்பதனை நாம் மீண்டும் வலியுறுத்தி நிற்கின்றோம். இதனடிப்படையில் தமிழகமெங்கும் அறப் போராட்டங்களில் ஈடுபடும் அனைவருடனும், தமிழக உள்ளங்களுக்கு ஆதரவாக இலங்கையில் திரண்ட / தொடர்ந்து ஆதரவளித்து வரும் தமிழ் நெஞ்சங்களுடனும் நாம் தோழமையுடன் இணைந்துகொள்கிறோம். தமிழக இளைஞர்கள், யுவதிகள் இணைந்து முன்னெடுக்கும் தமிழர்களின் பாரம்பரிய அடையாளங்களை பாதுகாப்பதற்கான ஜனநாயக ரீதியான போராட்டங்களுக்கு எமது தார்மீக ஆதரவை தெரிவித்துக் கொள்கின்றோம்.

Related Posts