Ad Widget

தனியார் காணிகளை சுவீகரிக்க அனுமதி வழங்க முடியாது – தென்னக்கோன்

thennakkon-jankana-pandaraதனியார் காணிகளை சுவீகரிப்பதற்கு அனுமதி வழங்க முடியாதென பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளதாக காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனகபண்டார தென்னக்கோன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் மேற்கொண்ட அமைச்சர் யாழ். மாவட்டச் செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், பிரதேச செயலர்கள், முப்படைகளின் அதிகாரிகள், வடமாகாண காணிப் பணிப்பாளர் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடினார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

காணிப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு யாழ். மாவட்டத்தில் 12 பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு காணிப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான விழிப்புணர்வுகளை வழங்க வேண்டுமெனவும் அவர் கூறினார்.

பொதுமக்கள் காணிகள் குறித்த முறைப்பாடுகளை பிரதேச செயலரிடம் தெரிவித்து வருவதற்கு அமைய, யாழ். மாவட்டத்தில் 7,566 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு அமைய காணிகளை அடையாளப்படுத்துதல், காணிப் பிரச்சினையின் முழு எண்ணிக்கையை தெரிவுசெய்தல், காணி அற்றோர்களின் விபரங்களை திரட்டுதல் போன்ற விபரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

அந்த வகையில், 2014ஆம் ஆண்டில் காணிப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு 77 கோடியே 71 இலட்சத்து 37 ஆயிரத்து 755 ரூபா (777,137,755) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் இதற்குரிய அனைத்து செலவுகளையும் அமைச்சு ஏற்றுக்கொள்ளுமெனவும் அவர் கூறினார்.

காணி அற்றவர்களை மருதங்கேணியிலுள்ள அரசாங்கக் காணியில் மீள்குடியேற்றுவதற்கு அனுமதி வழங்கப்படுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், காணிப் பிரச்சினைகள் தொடர்பான மதிப்பீட்டை பெப்ரவரி 22ஆம் திகதிக்கு முன்னர் காணி அமைச்சுக்கு அனுப்பி வைக்குமாறு பிரதேச செயலர்களிடம் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

Related Posts