Ad Widget

தங்குமிட விடுதிகளில் பொலிஸ் சோதனை

யாழ். நகரிலுள்ள தங்குமிட விடுதிகள் அனைத்தும் இன்றிலிருந்து தொடர்ச்சியாக பொலிஸாரால் சோதனைக்கு உட்படுத்தப்படும் என யாழ். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எப்.யு.கே. வூட்லர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாண பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆண், பெண் பிள்ளைகளின் ஒழுக்கத்தினையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக யாழ். நகரிலுள்ள ஹோட்டல், தங்குமிட விடுதி உரிமையாளர்களுடனான கலந்துரையாடல் ஒன்று நேற்று முன்தினம் யாழ். பொது நூலகத்தில் நடைபெற்றது.

இதில் யாழ். நகரில் உள்ள 35 விடுதிகளில் 24 விடுதி உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.இதில் 18 வயதிற்கு குறைந்த எந்தவொரு ஆண், பெண் பிள்ளைகள் விடுதியில் தங்குவது குறித்து தெரிய வந்தால் எமக்கு விடுதி உரிமையாளர்கள் உடனடியாக அறிவிக்க வேண்டும்.

சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுக்கும் நோக்கில் நாம் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். எனவே, சந்தேகத்திற்கிடமான முறையில் விடுதிகளில் தங்குபவர்கள் குறித்து பொலிஸாருக்கு தகவல்களை வழங்க வேண்டும்.

அத்துடன் போதைப் பொருட்கள் விநியோகமும் விடுதிகளில் நடைபெற்று வருவதாக எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. இவ்வாறான செயற்பாடுகளை தடுப்பதற்காக விடுதி உரிமையாளர்கள் எமக்கு உதவி செய்ய வேண்டும்.

தகவல்களை எமக்கு தெரியப்படுத்துமிடத்து நாம் எந்த வித பாகுபாடுமின்றி உடனடியாக நடவடிக்கைகள் மேற் கொள்வோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts