Ad Widget

தங்கள் உறுப்பினர்களில் ஐவருக்கு காயம் – ஈ.பி.டி.பி

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இடம்பெற்ற கைகலப்பில் தமது தரப்பைச்சேர்ந்த உறுப்பினர்கள் ஐவர் காயமடைந்துள்ளதாக ஈழமக்கள் ஜனநாயக கட்சி அறிவித்துள்ளது.

EPDP flag

இது தொடர்ப்பில் அக்கட்சி விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் தாக்குதலில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் இணைப்பாளர் இராஜ்குமார், அமைச்சரின் வடமராட்சி இணைப்பாளரும், பருத்தித்துறை பிரதேச சபை எதிர்க்கட்சித் தலைவருமான சிறிரங்கேஸ்வரன் உள்ளிட்ட ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்றைய தினம் (16) இணைத்தலைவர்களான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தின் ஆரம்பத்திலேயே இணைத்தலைமைக்கு கட்டுப்படுமாறு இணைத்தலைவர்களால் கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் அதனை மீறி கூட்டமைப்பினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து இணைத்தலைமைக்கு கட்டுப்பட்டு கூட்டத்தை தொடர்வதற்கு உதவுமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனும் வேண்டுகோள் விடுத்த போதிலும் அதனை நிராகரிக்கும் வகையில் கூட்டமைப்பினர் கூச்சலிட்டு குழப்பத்தை ஏற்படுத்தினர்.

இதில் கூட்டமைப்பினருக்கும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினருக்கும் இடையே தர்க்கம் ஏற்பட்டது.

இதன்போது இணைத்தலைவர் டக்ளஸ் தேவானந்தாவை தாக்கும் வகையில் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் முன்னோக்கிச் சென்ற போது அதனை தடுத்து நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் இணைப்பாளர் ராஜ்குமார், பருத்தித்துறை பிரதேச சபை எதிர்க்கட்சித் தலைவர் சிறிரங்கேஸ்வரன், வேலணை பிரதேச சபைத் தவிசாளர் சிவராசா, வலி.தெற்கு பிரதேச சபை எதிர்க்கட்சித் தலைவர் அரிகரன், கடற்றொழில் சங்கத்தைச் சேர்ந்த ரட்னகுமார் ஆகியோர் காயங்களுக்குள்ளாகினர்.

இத்தாக்குலை கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன், மாகாண சபை அமைச்சர் ஐங்கரநேசன், மாகாண சபை உறுப்பினர்களான கஜதீபன், சிவாஜிலிங்கம், சர்வேஸ்வரன், ஆனோல்ட், சுகிர்தன், காரைநகர் பிரதேச சபை தவிசாளர் ஆனைமுகன் ஆகியோர் நடத்தினர்.

இருதரப்பினருக்கும் இடையே இந்த நிகழ்வால் இணைத்தலைவர் விக்னேஸ்வரன் தாம் நிற்க விருப்பவில்லையெனக் கூறிவிட்டு வெளியேறியிருந்த நிலையில் ஏனைய கூட்டமைப்பு பிரதிநிதிகளும் கூட்டத்தை குழப்பிக் கொண்டு வெளியேறினர்.

கூட்டத்தின் ஆரம்பத்தில் உரையாற்றிய இணைத்தலைவர் விக்னேஸ்வரன் எனது கருத்துக்களை பிரஸ்தாபித்த போது இணைத்தலைவர் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்டோர் செவிமடுத்ததை போன்று அவரது கருத்துக்களுக்கும் மதிப்பளித்து செவிமடுக்குமாறு கூட்டமைப்பினருக்கு வேண்டுகோள் விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts