Ad Widget

தகுதியற்ற எவரையும் ஆசிரியர் பதவிக்கு நியமிக்க முடியாது – கல்வி அமைச்சர்

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் இடைவிடாத முயற்சியின் பயனாகவே வடக்கு மாகாணத்தில் கடந்த பதினைந்து வருடங்களுக்கும் மேலாக கடமையாற்றிய தொண்டர் ஆசிரியர்களுக்கு உதவி ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டன. அவர்களுக்கு ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் பயிற்சிகள் வழங்கப்பட்டு ஆசிரியர்காளாக பதவி உயர்வு வழங்கப்படும் என கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

bandula2

நேற்று யாழ்ப்பாணத்தில் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் நடைபெற்ற கல்வி முறைமை மீளாய்வு மாநாட்டில் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அதிபர், ஆசிரியர் சேவை பிரமானக் குறிப்புக்களின்படி தகுதியற்ற எவரையும் ஆசிரியர் பதவிக்கு நியமிக்க முடியாது. அதாவது ஆசிரியர் நியமனம் பெறும் ஒருவர் இலங்கை தேசிய கல்வி நிறுவனம் ஒன்றில் ஆசிரியர் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். ஆனால், இதற்கு மேலதிகமான ஒரு முறைமையும் இருக்கின்றது. அதாவது மிகவும் மோசமாக ஆசிரியர் ஆளணி பற்றாக்குறை இருக்கின்ற பிரதேசங்களுக்கு அமைச்சரவை தீர்மானத்தின்படி ஆசிரியர் உதவியாளர்களை ஆறாயிரம் ரூபா சம்பளத்தின் அடிப்படையில் நியமிக்க முடியும். இருப்பினும், இந்த உதவி ஆசிரியர் தரத்திற்கான நியமனத்திற்கும் அமைச்சரவை தீர்மானத்தின்படி நியமனம் பெறும் ஒருவர் க.பொ.த உயர்தரத்தில் சித்தி பெற்றிருக்க வேண்டும். அத்தோடு நீண்ட நாள் கற்பித்தல் அனுபவம் உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்ட அவர்,

அதனடிப்படையில் வடக்கு மாகாணத்தில் கடந்த பதினைந்து வருடங்களுக்கும் மேலாக தொண்டர் ஆசிரியர்களாக கடமை புரிந்த ஆசிரியர்களுக்கு ஆசிரியர் உதவியாளர்கள் எனும் பதவி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அவர்கள் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் ஆசிரியர் பயிற்சி நெறிகளை முடித்த பின்னரே ஆசிரியர் பதவி நிலைக்கு உயர்த்தப்படுவார்கள். இந்நிலையில் இவர்களுக்கு ஆசிரியர் பயிற்சிகளை வழங்குவதற்காக நாம் யாழ்ப்பாணத்தில் உள்ள இரண்டு ஆசிரியர் பயிற்சி கலாசாலைகளையும் தொடர்ந்தும் இயக்குவதற்கு தீர்மானித்துள்ளோம். அத்தோடு, இவ் ஆசிரியர் உதவியாளர்களுக்கு இப்பகுதிகளில் நிலவும் பாடரீதியான வெற்றிடங்களுக்கமைவாக பயிற்சிகள் வழங்கப்படும் எனவும் குறிப்பிட்ட அவர்.

இதேவேளை இலங்கை பாராளுமன்றின் கல்வி மேம்பாட்டுக் குழுவில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான மு.சந்திரகுமார் அவர்கள் வடக்கு மாகாண மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்கான உதவித்திட்டங்களை வழங்குவது தொடர்பில் தொடர்ச்சியாக குரல் கொடுத்து வருபவர். அவரது முயற்சியின் பயனாகவும் மற்றும் கல்விசார் செயற்பாட்டாளர்களின் முயற்சியின் அடிப்படையிலும் தற்போது வெளியாகியுள்ள க.பொ.த சாதாரணதர பரீட்சை பெறு பேறுகளின் அடிப்படையில் வடக்கு மாகாணம் இலங்கையில் மூன்றாம் இடத்தை பெற்றுள்ளது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

bandula1

இம்மாநாட்டில் வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் விக்கினேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான மு.சந்திரகுமார், வடக்கு மாகாண ஆளுனர் சந்திரசிறீ, வடக்கு மாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா, வடக்கு மாகாண சபையின் பிரதம செயலாளர் விஜய லட்சுமி மற்றும் கல்வி அமைச்சி செயலாளர் மத்திய மாகாண கல்வி அமைச்சுக்களின் பிரதிநிதிகள் கல்விசார் உயர் அதிகாரிகள். ஆசிரியர்கள் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி

தகைமையற்ற தறுதலைகளை ஆசிரியர்களாக்குவதைக் தவிர்ப்போமாக – முதலமைச்சர்

Related Posts