Ad Widget

டக்ளஸ் மீது நடவடிக்கை எடுக்க என்னால் முடியாது – சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்

daklasஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிராகச் செய்யப்பட்ட முறைப்பாட்டில் அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்று பகிரங்கமாகத் தெரிவித்திருக்கிறது பொலிஸ். தேசிய பொலிஸ் சேவை ஆணைக்குழுவுக்கு எழுதிய கடிதம் ஒன்றில் யாழ்ப்பாணம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் விமலசேன இதனைத் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் டக்ளஸ் தலைமையிலான ஈ.பி.டி.பி. குழுவினர் தனது வீட்டை விட்டு வெளியேற மறுக்கின்றனர் என்று அதன் உரிமையாளர் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்திருந்தார்.

மானிப்பாயில் உள்ளது அவரது வீடு அதனை ஈபிடிபியினர் வலுக்கட்டாயமாகத் தன்னிடம் இருந்து பறித்தெடுத்தார்கள் என்றும் அதற்கு வாடகை கூட அவர்களால் தரப்படவில்லை என்றும் அவர் தனது முறைப்பாட்டில் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததன் காரணத்தாலேயே அவர் தேசிய பொலிஸ் சேவைகள் ஆணைக்குழுவை நாடி இருந்தார்.

கடந்த வருடம் நவம்பர் மாதம் இந்த முறைப்பாடு தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் முன்கொண்டுவரப்பட்டது. அது குறித்து ஆராய்ந்து உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் விமலசேனவுக்கு ஆணைக்குழு பரிந்துரைத்திருந்தது.

கடந்த சில நாள்களுக்கு முன்னர் அதற்கான பதில் ஆணைக்குழுவுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது.

அதில் அமைச்சர் டக்ளஸ்க்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது என்று விமலசேன தெரிவித்திருக்கிறார்.

இந்த விடயம் தொடர்பில் தன்னால் எதுவுமே செய்ய முடியாது என்றும் பாதிக்கப்பட்ட நபரே அமைச்சரை நேரில் சென்று சந்தித்து பேச முடியும் என்றும் இல்லையேல் நீதிமன்றத்தையே நாட வேண்டும் என்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தனது கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் ஈ.பி.டி.பி கட்சிக்கு எதிராக முறைப்பாடு

Related Posts