Ad Widget

ஜ.நா. மனித உரிமைகள் ஜெனீவா பிரேரணையை த.தே.ம.மு. எதிர்ப்பு

Kajentherakumarதமிழ் மக்களின் பெயரில் தமிழ் மக்களின் நலன்களை பிரதிபலிக்காத ஜ.நா. மனித உரிமைகள் ஜெனீவா பிரேரணையை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எதிர்க்கின்றதாக அக்கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

ஜெனீவா தீர்மானம் தொடர்பான தமிழ் மக்களின் நிலைமை பற்றி ஊடகவியலாளர்கள் சந்திப்பு யாழ்ப்பாணத்திலுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘கடந்த 2012ஆம் 2013ஆம் ஆண்டுகளில் ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தமிழ் மக்களின் வாழ்வியலில் எந்தவித முன்னேற்றத்தையும் ஏற்படுத்தாததோடு, இவர்களின் அரசியல் பிரச்சினைக்கு எத்தகைய முற்றுப்புள்ளியையும் வைக்கவில்லை. மாறாக கடந்த 02 தீர்மானங்களும் ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்டபோதும், இலங்கை அரசாங்கமானது தமிழ் மக்களுக்கு எதிரான தனது இன அழிப்பு நிகழ்ச்சி நிரலை திட்டமிட்டு தீவிரப்படுத்தியே வருகிறது.

நிலைமைகள் இவ்விதமிருக்க இம்முறையும் வெளிவந்துள்ள உத்தேச வரைபானது வடமாகாணசபைக்கு 13ஆம் திருத்தச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் அதிகாரங்களை முழுமையாக வழங்க வேண்டுமென்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டுமென்றும் மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமானச் சட்ட மீறல்கள் தொடர்பிலான விசாரணையை இலங்கை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டுமெனவும் கோருகின்றது.

13ஆம் திருத்தச் சட்டத்தின் கீழான வடமாகாணசபை என்பது தமிழ் மக்களது இனப்பிரச்சினைக்கு தீர்வாகாது என்பதாலும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் மிகப் பிரதானமாக தமிழ் தேசத்தின் இருப்பை இல்லாது ஒழிக்கும் சரத்துக்கள் காணப்படுவதனாலும் நல்லிணக்க ஆணைக்குழுவானது சர்வதேச சமூகத்தின் அழுத்தங்களிலிருந்து தம்மைக் காப்பாற்றுவதற்காக அரசாங்கத்தால் கண்துடைப்பிற்காக உருவாக்கப்பட்ட ஆணைக்குழு என்பதனாலும் உள்ளக விசாரணை என்பதும் குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களையே அவர்கள் செய்த குற்றங்களை விசாரிக்க கோரும் அடிப்படை நியாயமற்ற இயற்கை நீதிக்கோட்பாட்டிற்கு மாறான செயல் என்பதனாலும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஏற்கெனவே நிராகரித்திருந்தது.

குறித்த உத்தேச வரைபானது வடமாகாண சபைக்கு அதிகாரங்களை வழங்கக் கோருமாறு கோரியிருப்பதுடன், கிழக்கு மாகாணம் பற்றி எதுவும் பேசாது தவிர்த்திருப்பதும் தமிழ் என்ற ஒரு வார்த்தை கூடப் பயன்படுத்தப்படாமல் தவிர்த்திருப்பதும் அரசியல் தீர்வு பற்றி எதுவும் குறிப்பிடாதிருப்பதும் தமிழ் மக்களது அரசியல் பிரச்சினைக்கான தீர்வை 13ஆம் திருத்தச் சட்டத்தினுள் மட்டுப்படுத்திவிடும் செயற்பாடா என நாம் நியாயமாக சந்தேகிக்கிறோம்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானமானது தமிழ் மக்களினுடைய அரசியல் பிரச்சினைக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கக்கூடிய வகையில் அவர்களது சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்தல், இலங்கைத் தீவில் தமிழ் மக்களுக்கு எதிராக நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற இனப்படுகொலைக்கு சர்வதேச பக்கச் சார்பற்ற விசாரணை ஒன்றை நடத்துதல் தொடர்ந்து கொண்டிருக்கின்ற கட்டமைப்புச் சார் இன அழிப்பை தடுத்து நிறுத்துவதற்காக ஓர் இடைக்கால நிர்வாகக் கட்டமைப்பை ஐ.நா. சபையின் கண்காணிப்பின் கீழ் உருவாக்குதல் போன்ற தீர்மானங்களை உள்ளடக்க வேண்டும் என்ற கோரிக்கையை நாம் விடுத்திருந்தோம்.

இதேபோன்ற கோரிக்கையை அண்மையில் தமிழக சட்டசபை நிறைவேற்றியிருந்ததுடன், புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் பலவும் இத்தகைய கோரிக்கைகளை சர்வதேச சமூகத்தை நோக்கி முன்வைத்தும் இருந்தன. எனினும், கடந்த 65 ஆண்டுகால இனப்பிரச்சினையினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட தமிழர்களது தரப்பிலிருந்து விடுக்கப்பட்ட தொடர்ச்சியான கோரிக்கைகள் சிறிதளவேனும் கருத்தில் எடுக்கப்படாமல் தமிழ் மக்களின் அபிலாஷைகளையோ நலன்களையோ எந்தவிதத்திலும் பிரதிபலிக்காத ஓர் வரைபானது மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்டிருப்பதானது எம்மை மிகவும் வேதனை அடையச் செய்துள்ளதுடன், கடும் ஏமாற்றத்தையும் தந்துள்ளது.

எனவே, அமெரிக்கா தலைமையிலான மேற்கு நாடுகளினால் ஐ.நா. சபையில் முன்வைக்கப்படவுள்ள இறுதித் பிரேரணை தமிழ் மக்களின் அபிலாஷைகளை பிரதிபலிக்கக் கூடியவாறும் அவர்களின் நலன்களை பேணக்கூடியவாறும் இலங்கை அரசாங்கத்தினால் தமிழ் தேசத்தின் மீது தொடர்ந்தும் புரியப்படுகின்ற இனவழிப்பு, மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமானச் சட்ட மீறல்கள் என்பவற்றை நிரந்தரமாக நிறுத்தப்படக் கூடியவாறானதுமான ஓர் தீர்மானமாக அமைய வேண்டுமென்று நாம் கோருகின்றோம்.

மேலும், இத்தகைய கோரிக்கைகள் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைத் தீர்மானத்தில் உள்ளடக்கப்படுவதற்காக தொடர்ந்தும் தாயகத்தில் வாழும் உறவுகளும் தமிழக உறவுகளும் புலம்பெயர் தமிழ் உறவுகளும் போராட வேண்டுமென்று அழைப்பு விடுக்கின்றோம்’ என்றார்.

Related Posts