கிளிநொச்சியில் நேற்று மாலை ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடைக்கெதிரான போராட்டத்தில் கலந்துகொண்டுவிட்டு வீடுதிரும்பிய ஊடகத்துறை மாணவன் ஒருவன் விபத்தில் பலியானார்.
ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி தமிழகம் முழுவதுமாக போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. தமிழகத்துக்கு ஆதரவாக கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டுவிட்டு உந்துருளியில் வீடுதிரும்பிக்கொண்டிருந்த சுப்ரமணியம் முரளீதரன் என்ற ஊடகத்துறை மாணவன் பார ஊர்தி மோதியதில் அந்த இடத்திலேயே மரணமானார்.
புளியம்பொக்கணை பகுதியில் நேற்றிரவு 7.45 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றது. குறித்த மாணவன் கடந்த ஆண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தனது ஊடகக் கற்கை நெறியைப் பூர்த்தி செய்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
