Ad Widget

ஜனாதிபதி முறைமை ஒழிப்பு, அதிகார பகிர்வு தொடர்பில் வழங்கிய வாக்குறுதிகளை ஜனாதிபதி நிறைவேற்றவில்லை – சுமந்திரன்

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை ஒழிப்பு,அதிகார பகிர்வு தொடர்பில் வழங்கிய வாக்குறுதிகளை ஜனாதிபதி நிறைவேற்றவில்லை.

சமஷ்டி தொடர்பில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து விட்டு தற்போது குட்டிக்கரணம் அடித்ததை போல் ஒற்றையாட்சிக்குள் தீர்வு என்கிறார்.

ஒற்றையாட்சிக்குள் அதிகார பகிர்வு என்பது சாத்தியமற்றது,சமஷ்டி முறைமையில் அர்த்தமுள்ள அதிகார பகிர்வை கோருகிறோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (09) இடம்பெற்ற ஜனாதிபதி முன்வைத்த அரசாங்கத்தின் கொள்கை பிரகடனம் மீதான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும்கூறுகையில் ,

நாட்டு மக்கள் வேறுபாடுகளின்றி ஒருமித்து செயற்படும் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அந்த மக்களை விமர்சிக்கும் வகையில் கொள்கை உரை ஆற்றியுள்ளார்.ஐக்கிய தேசியக் கட்சி வழங்கிய வாக்குறுதிகள் ஏதும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை காலம் காலமாக பிரதான பேசுபொருளாக காணப்படுகிறது. 1996 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் சம்மேளனக் கூட்டத்தில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை ரத்து செய்யப்படும் என குறிப்பிடப்பட்டது.

நல்லாட்சி அரசாங்கத்தில் பிரதமர் பதவி வகித்த தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசியலமைப்பு பேரவை கூட்டத்தில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை இரத்து செய்யப்படும் என பலமுறை குறிப்பிட்டார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை ரத்து செய்யப்படும் என ஐக்கிய தேசியக் கட்சி வழங்கிய வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.

கடந்த வருடம் அரசியல் நெருக்கடி தீவிரமடைந்த போது அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் ஊடாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்படும்.அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தின் ஜனநாயக இலட்சினங்கள் மீள அமுல்படுத்தப்படும் என குறிப்பிடப்பட்டது.

அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தத்தில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகார தத்துவங்கள் மட்டுப்படுத்தப்படவில்லை,அதிகாரங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மகிழ்வுடன் பதவி வகிக்கிறார்.ஆகவே நிறைவேற்று அதிகாரம் ஒழிக்கப்படும் அல்லது நிறைவேற்று அதிகாரம் மட்டுப்படுத்தப்படும் என்ற வாக்குறுதியால் நாட்டு மக்கள் ஏமாற்றமடைந்துள்ளார்கள்.

ஜனாதிபதி கொள்கை உரையில் தேசியப் பிரச்சினை தொடர்பில் முக்கியமாக எதனையும் குறிப்பிடவில்லை ஒருசில விடயங்களை மாத்திரம் தொட்டுச் சென்றுள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தனும்,தானும் ஒன்றாக பாராளுமன்றத்திற்கு தெரிவானதாகவும்,பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயற்சித்ததாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் முறைமையை அவர் தெளிவாக குறிப்பிடவில்லை.

இராணுவத்துடன் இடம்பெறும் காணி விடுவிப்பு தொடர்பான விடயங்களை ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.1985 ஆம் ஆண்டு வரைபடத்திற்கு அமைய காணி விடுவிப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளதை வரவேற்கிறோம்.தமிழ் மக்களுக்கு சொந்தமான காணிகள் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

பாரதுரமாக கருதப்படும் காணாமல் போனோர் விவகாரத்தை ஜனாதிபதி ஓரிரு வரிகளில் சொல்லி முடித்துள்ளார்.2011 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவில் 3000 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இராணுவத்தில் ஒப்படைக்கப்பட்டதாகவும் பின்னர் அவர்கள் காணாமலாக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகிறது.

இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள் காணாமலாக்கப்பட்டமை தொடர்பில் ஆணைக்குழுக்களின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள போதும் எவ்வித சட்ட நடவடிக்கைகளும் இதுவரை எடுக்கப்படவில்லை.

அதிகார பகிர்வு தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தைகளின் போது பிரதானமாக குறிப்பிடப்பட்ட ஐந்து விடயங்களை ஜனாதிபதி தொட்டுச் சென்றுள்ளார்.

பொலிஸ் அதிகாரத்தில் எவ்வித மாற்றமும் இல்லை,உள்ளவாரே இருக்கும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.இதனை அவர் மேலும் தெளிவுப்படுத்த வேண்டும்.

பொலிஸ் அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம்.அதிகூடிய அர்த்தமுள்ள சமஷ்டி முறையிலான அதிகார பகிர்வே சிறந்த தீர்வாக அமையும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2005 ஆம் ஆண்டு தேர்தல் காலத்தில் சமஷ்டி முறைமையிலான அதிகார பகிர்வு தொடர்பில் பிரசாரங்களை முன்னெடுத்தார்.ஆனால் தற்போது குட்டிக்கரணம் அடிப்பது போல் ஒற்றையாட்சிக்குள் அதிகார பகிர்வு என்று குறிப்பிடுகிறார்.

நாட்டை பிளவுப்படுத்துமாறு நாங்கள் ஒருபோதும் குறிப்பிடவில்லை.சமஷ்டி முறையில் அர்த்தமுள்ள அதிகார பகிர்வை கோருகிறோம்.வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் ஜனாதிபதியின் கூற்று அமையவில்லை,ஆகவே அவரது சிம்மாசன உரையை நிராகரிக்கிறோம் என்றார்.

Related Posts