Ad Widget

ஜனநாயக ரீதியில் வீட்டுக்கு அனுப்பப்பட்டார் மஹிந்த – மாவை

தமிழ் மக்களின் இருப்பை இல்லாதொழிக்க முற்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வாக்கு என்னும் ஜனநாயகத்தால் ஜனாதிபதி தேர்தலில் தோற்கடிக்கப்பட்டு, அவரும் அவரது குடும்பத்தினரும் வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர் என தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார்.

mavai

கிளிநொச்சி, கரைச்சி பிரதேச சபை உறுப்பினர்களின் 4.5 மில்லியன் ரூபாய் நிதியுதவியில் அமைக்கப்பட்ட வட்டக்கச்சி பொதுநூலகத்தை செவ்வாய்க்கிழமை (03) திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே மாவை இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ‘கால், கைகளை இழந்து போரின் வடுக்களுடன் பலர் எம்மத்தியில் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். போரை முடிவுக்கு கொண்டு வந்து, மக்களையும் ஒடுக்க முடியும் என நினைத்து சர்வதிகார ஆட்சியை நிகழ்த்தி வந்த மஹிந்த குடும்பத்துக்கு தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டியுள்ளனர்’ என்றார்.

‘அம்பு எய்தவனுக்கே அம்பு மீண்டும் சென்று தாக்கியுள்ளது. இதன்மூலம் நாட்டில் நல்லாட்சியொன்று ஏற்பட்டுள்ளது. இந்த நல்லாட்சி நீடித்து தமிழ் மக்களுக்கு விடுதலை கிடைக்கவேண்டும்’ என அவர் கூறினார்.

கரைச்சி பிரதேச சபை உறுப்பினர்களான வி.சுவீஸ்கரன், அ.செல்வராசா, சி.சிவச்செல்வன் ஆகியோரின் நிதியுதவியில் கடந்த 2014 மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட நூலகத்தின் கட்டிடப் பணிகள் கடந்த 2014ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முடிவுற்று இன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், வடமாகாண கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராஜா, கிளிநொச்சி வலயக் கல்விப்பணிப்பாளர் அ.முருகவேள், கரைச்சி பிரதேச சபை தவிசாளர் நா.வை.குகராசா ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.

Related Posts