Ad Widget

சொந்த நிலங்களை எமக்கு தாருங்கள்; இடம்பெயர்ந்த மக்கள் கோரிக்கை

J01(94)உயர் பாதுகாப்பு வலயமாக இருக்கும் தையிட்டி மற்றும் மயிலிட்டி பிரதேச மக்கள் தமது சொந்த நிலங்களில் தம்மை குடியமர்த்துமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் வடமாகாண கடற்றொழிலாளர் கூட்டமைப்பில் நேற்று மதியம் 1.30 மணியளவில் பத்திரிகையாளர் சந்திப்பு இடம்பெற்றது.

இச்சந்திப்பின் போது, 1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் தையிட்டி, மயிலிட்டி, காங்கேசன்துறை பகுதியில் இருந்து இடம்பெயர்ந்த மக்களின் சொந்த நிலங்கள் தமக்கு வேண்டுமென்றும் தமது பிரச்சினைகள் வெளிவருவதில்லை என்றும், மீள்குடியமர்த்த அரசாங்கம் தயக்கம் காட்டுவதாக அப்பகுதி மக்களின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மயிலிட்டி மற்றும் காங்கேசன்துறை, தையிட்டி பிரதேச மக்கள் 20 வருடங்களுக்கு மேலாக அகதி முகாம்களில் வாழ்க்கை நடத்தி வருகின்றனர். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை உட்பட பல்வேறு தரப்பினரும் அப்பகுதி மக்களை வந்து பார்வையிட்டு வாழ்வாதாரங்கள் மற்றும் பல்வேறு விடயங்கள் குறித்து ஆராய்ந்து செல்கின்றனர்.

ஆனால் தம்மை தமது சொந்த நிலங்களில் குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அரசாங்கமோ அரசியல் கட்சிகளோ முன்வருவதில்லை. தேர்தல் காலங்களில் அரசியல்வாதிகள் வந்து வாக்களிக்குமாறு கோரிக்கை விடுகின்றனர். வாக்களித்த பின்னர் தம்மை திரும்பி பார்ப்பதில்லை என்றும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

அத்துடன், 90 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெயர்ந்த மக்கள் 6 அகதிமுகாம்களிலும், 56 நலன்புரி நிலையங்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அவ்வாறு வாழ்ந்து கொண்டிருக்கும் எம்மை காணிக்கு சொந்தமானவர்கள் இரண்டு மாதங்களில் அங்கிருந்து வேளியேறுமாறு தெரிவித்துள்ள நிலையில், இந்த இடத்தினை விட்டு தாம் எங்கு சென்று இருப்பதென்றும் அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

20 வருடங்களுக்கு மேலாக சொத்துக்களை இழந்து போரின் மத்தியில் வாழ்ந்த நாம், யுத்தம் முடிவடைந்த பின்னர் எமது சொந்த நிலங்களில் மீள்குடியமர்த்தப்படுவோம் என்ற எதிர்பார்ப்புடன் இருந்த போதிலும், எமது எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை என்றும், அத்துடன் எமது உரிமைகள் மீறப்படுகின்றன என்றும் கூறினர்.

அவர்கள் மேலும் கூறுகையில் எமது முதாதையர்களினால் எமது கலாசாரம் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. கலாசாரம் சீரழிக்கப்பட்டால் எம்மை எவரும் மதிக்க மாட்டார்கள் என்றும் எங்களின் நிலங்களை மனிதாபிமான ரீதியில் வழங்க வேண்டுமென்றும் அவர்கள் குறிப்பிட்டார்கள்.

அதேவேளை கடந்த 2 வருடங்களாக நிவாரணம் இன்றி வாழ்க்கை நடத்தி வருகின்றோம். எமக்கு அரசாங்கத்தின் உதவிகள் எதுவும் தேவையில்லை, எமது சொந்த நிலங்களில் குமடியர்த்துமாறும், தமது நிலங்களில் தாம் வாழாவிட்டாலும் தமது பிள்ளைகளை வாழ வழி அமைத்து தருமாறும் இடம்பெயர்ந்த மக்கள் கோரிக்கை முன்வைத்தனர்.

Related Posts