Ad Widget

யாழ் எழுக தமிழ் பேரணிக்கு அலைகடலாய் அணிதிரள்வீர்! தொல். திருமாவளவன் அழைப்பு

இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டின் முதல் இன அழிப்புக்கு முகங்கொடுத்த எம் தமிழ்ச் சொந்தங்களே! வணக்கம்.

336

2009 மே மாதம் மௌனிக்கப்பட்டது ஆயுதங்களை தான், எங்கள் ஜனநாயக போராட்டத்தை அல்ல என்பது உலகச் சமூகத்திற்கு எடுத்துச் செல்ல நமக்கு கிடைத்திருக்கின்ற ஒரு வாய்ப்பு தான் ‘எழுக தமிழ்’ போராட்டம்.
இனப்படு கொலையாக்கப்பட்டவர்களுக்காக நியாயம் கேட்போம். சுயநிர்ணய உரிமைக்காக நியாயம் கேட்போம் ஒன்று கூடுவோம் யாழ் நகர்லே. வென்று காட்டுவோம் தமிழரின் சுயநிர்ணய உரிமையை.

முள்ளிவாய்க்காலிலேயே உங்கள் போராட்டத்தை உயிரோடு புதைத்து விட்டதாக எண்ணிக் கொண்டிருக்கும் போர்க் குற்றவாளிகளின் கனவைக் கலைத்தாக வேண்டும். பெண் என்றும் குழந்தை என்றும் முதியோர் என்றும் பாராமல் முப்படை கொண்டு முழுப்படுகொலை செய்த கொடியவர்களைக் கூண்டிலேற்றி சர்வதேச விசாரணைக்கு உட்படுத்தியாக வேண்டும்.

உங்கள் அன்புக்கும் எங்கள் அன்புக்கும் உரியவர்களை ஆயிரக்கணக்கில் தொலைத்துக் கட்டி விட்டுத் தொலைந்து போனதாகக் கணக்குக் காட்டி வரும் மோசடியைக் காணாமலடிக்க வேண்டும். அனைவரும் அநேகமாய்ச் செத்து விட்டனர் என்று சர்வசாதாரணமாகச் சொல்லிச் சென்றோர் அவர்களின் மாய மறைவுக்குப் பொறுப்புக் கூறியாக வேண்டும்.

எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்த எம் சொந்த மண்ணில் வந்து குந்திய வன்பறிப்புப் பட்டாளத்துக்கு இனியும் இங்கென்ன வேலை? எனக் கேட்க வேண்டும். நிலம் மீட்க வேண்டும்.

இனத்தின் வாழ்வில் ஒளி தேடியதன்றி வேறு குற்றமறியாமல் இருட்சிறைக்குள் வாடிக் கிடக்கும் தமிழ் இளைஞர்களை – அல்லது இளைஞர்களாகச் சென்று சிறைக்குள்ளேயே முதுமை கண்டு விட்டவர்களை – விடுதலை செய்வித்தாக வேண்டும். நடந்தவை நடந்தவையே, இனி இக்கொடுமை நிகழாது என்பதை உறுதி செய்யும் படியான அரசியல் தீர்வு வேண்டும். புறாச் சிறகு போர்த்திய வல்லூறுகளின் பசப்பு வார்த்தைகளைப் புறந்தள்ள வேண்டும். எமக்கு உறுதியானதொரு காப்பு வேண்டும், அதற்கு இறைமையும் உரிமையும் வாய்ந்த அரச யாப்பு வேண்டும்.

இறுதியாக ஒன்று. புதுமக் கால சிங்கப்பூரின் சிற்பி அந்நாட்டின் முதல் தலைமை யமைச்சர் லீ-குவான்-யூ சிறுபான்மையினரான தமிழர்களை வெல்லும் தகுதியும், துணிச்சலும் சிங்களாவர்களிற்கு இல்லை. என்றும் ‘தமிழர்கள் நீண்ட காலம் பொறு மையோடு காத்திருக்கமாட்டார்கள்’ என்று சொன்னாரே, அந்த எச்சரிக்கையை உங்கள் ஆட்சியாளர்களுக்கு நினைவூட்ட வேண்டும்.

நம்மினத்துக்காக விதையுண்ட பல்லாயிரம் மாவீரர்களின் மூச்சுக்காற்று உலவி நிற்கும் யாழ்ப்பாணத்தில் உங்கள் கோரிக்கை முழக்கங்கள் ஓங்கி ஒலிக்கட்டும். கடல் கடந்து தாய்த் தமிழகத்திலும் புவிப்பரப்பிலும் போராடி வாழும் தமிழ் மக்களின் இதயங்களில் எதிரொலிக்கட்டும்!

நன்றி! வணக்கம்.

தொல். திருமாவளவன்,
தலைவர்,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
சென்னை 21.09.2016.

Related Posts