Ad Widget

சென்னை போராட்டத்திற்கு யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் ஆதரவு

Jaffna-University1முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் விடுதலைக்கு இந்திய மத்திய அரசு ஏற்படுத்திய முட்டுக்கட்டையைக் கண்டித்தும் இவர்களை விடுதலை செய்யக் கோரியும் சென்னையில் இன்று திங்கட்கிழமை (24.02.2014) மாணவர்களால் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்திற்கு யாழ்.பல்கலைக்கழக மாணவர் சமூகம் பூரண ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது. இந்தப் போராட்டத்துடன் தாங்கள் உணர்வுபூர்வமாகப் பங்கெடுப்பதாகவும் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை தொடர்பான வழக்கு விசாரணைகள் அனைத்தும் முடிவடைந்துள்ள நிலையிலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். இவர்களுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில் அதனை மறுபரிசீலனை செய்யுமாறு இந்திய குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்த மனுவை மாறி மாறி ஆட்சிக்கு வந்த குடியரசுத் தலைவர்கள் 11 ஆண்டுகளாக கிடப்பில் போட்டிருந்தனர். இந்த நிலையில் குற்றம் சாட்டிருந்தவர்கள் 23 ஆண்டுகளாக தண்டனை அனுபவித்துவிட்டனர்.

அவர்களை மரண தண்டனையிலிருந்து உச்ச நீதிமன்றம் விடுவித்த நிலையில் தமிழக அரசும் அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. அவர்கள் சுதந்திரக் காற்றை அனுபவிக்க முற்பட்டபோது இந்திய மத்திய அரசு மீண்டும் இந்த விடயத்தில் ஏன் தலையிட வேண்டும். இவர்கள் தமிழர்கள் என்பதால் தான் இப்படி மத்திய அரசு முரட்டுத்தனமாக, இரண்டாந்தாய் மனப்பான்மையுடன் நடந்துகொள்கின்றது. ஈழப் பேராட்டத்தில் இந்திய மத்திய அரசின் எல்லையற்ற தலையீடு காரணமாகவே எங்கள் இலட்சக்கணக்கான மக்கள் கொன்றொழிக்கப்பட்டனர். எமது மக்களைக் கொன்றதற்கு தாங்கள் பொறுப்பாளிகள் இல்லையென்று இந்திய அரசு மறுப்புக் கூறுமா என்றும் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

இந்தியாவின் தேசத்தந்தை என்று போற்றப்படுகின்ற மகாத்மா காந்தியைக் கொன்ற கோட்சே என்பவனுக்கு சிலை எழுப்பியுள்ள இந்தியா 23 வருடம் தண்டனை அனுபவித்தவர்களை விடுதலை செய்வதற்கு ஏன் பின்னடிக்கின்றது? தமிழர்களை எப்படியும் தண்டிக்கலாம், கேட்க யாரும் இல்லை என்ற மமதையுடனேயே இந்திய மத்திய அரசு இவ்வாறு செயற்படுகின்றது. இது முற்றிலும் உண்மை. இதை எதிர்த்து சென்னையில் மாணவர்கள் போராட்டம் நடத்துவது அவசிய தேவை. இந்திய மாணவர்கள் கடந்த காலங்களிலும் காலத்தின் தேவையறிந்து செயற்பட்டார்கள். அதேபோன்று, இப்போதும் காலத்தின் தேவையறிந்து போராட்டம் நடத்துவதற்கு தயாராகிவிட்டனர்.

இந்தப் போராட்டத்திற்கு நாங்கள் எமது பூரண ஆதரவை வெளிப்படுத்துகின்றோம். போராட்டம் வெற்றிபெறும் என்று நாம் நம்புகின்றோம். மாணவர் சக்தி மாபெரும் சக்தி என்பதை முன்னர் பல தடவை இந்திய மத்திய அரசுக்கு உணர்த்தியதைப் போன்று மீண்டும் ஒரு தடவை உணர்த்துவதற்கு முற்பட்டுள்ள உங்கள் செயற்பாட்டை நாங்கள் பாராட்டுகின்றோம். அங்கே வர முடியாவிட்டாலும் உங்கள் போராட்டங்களுடன் நாங்கள் ஈழத்திலிருந்தவாறு உணர்வுபூர்வமாக இணைந்துகொள்கின்றோம் என்று யாழ்.பல்கலைக்கழக மாணவர் சமூகம் தெரிவித்துள்ளது.

Related Posts