Ad Widget

சென்னையின் எஃப்சி சாம்பியன்

ஐஎஸ்எல் கால்பந்துப் போட்டியின் இறுதிச் சுற்றில், 3-2 என்ற கோல் கணக்கில் கோவாவை வீழத்தி, சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது சென்னையின் எஃப்சி.

இரண்டாவது இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டி, கடந்த அக்.3-ஆம் தேதி சென்னையில் தொடங்கியது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்ற இப்போட்டியில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா 2 முறை மோதின.

லீக் போட்டிகளின் முடிவில் கொல்கத்தா, மும்பை, தில்லி, சென்னை அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன. இரண்டு கட்டங்களாக நடந்த அரையிறுதிச் சுற்றில் எஃப்சி கோவா, சென்னையின் எஃப்சி அணிகள் இறுதிச் சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தன.

ரசிகர்களிடையே கடந்த 3 மாதங்களாக மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த சீசனின் சாம்பியன் யார் என்பதை தீர்மானிக்கும் இறுதி மோதல் கோவாவில் உள்ள ஃபடோர்டாவில் ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு தொடங்கியது.

ஆட்டத்தின் 6-ஆவது நிமிடத்தில் கோவா வீரர் டுடுவுக்கு காயம் ஏற்பட்டதால் களத்திலிருந்து வெளியேறினார். அவருக்குப் பதிலாக லூக்கா அணியினருடன் இணைந்தார். தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் 18-ஆவது நிமிடத்தில் சென்னையின் எஃப்சி வீரர் மெஹ்ரஜுதீன் ஃபவுல் செய்ததால் அவருக்கு நடுவர் மஞ்சள் அட்டை காண்பித்தார்.

இரு அணி வீரர்களும் கோல் முயற்சியில் மும்முரம் காட்டினாலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை உடனடியாக பூர்த்தி செய்யமுடியவில்லை.

இந்த நிலை, முதல் பாதி முழுவதும் நீடித்தது. இதனால், ஆட்டத்தின் மறுபாதியில் பரபரப்பு கூடியது. கோவா அணியில் லியோ மௌராவுக்குப் பதிலாக (46-ஆவது நிமிடம்) தங்கோசிம் ஹாகிப் மாற்றப்பட்டார்.

53-ஆவது நிமிடத்தில் சென்னை அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதனை பயன்படுத்தி பெளிசாரி பந்தை இலக்கை நோக்கி உதைத்தார். கோவா கோல்கீப்பர் லஷ்மிகாந்தால் அதனை எதிர் திசையில் தட்டிவிட்டி கீழே விழுந்தார். உடனே சுதாரித்த பெளிசாரி, மீண்டும் வலைக்குள் பந்தை உதைக்க, சென்னைக்கு முதல் கோல் கிடைத்தது. சூடாக இருந்த உள்ளூர் ரசிகர்களை கோவா வீரர்கள் அடுத்த 4 நிமிடங்களில் குளுமைப்படுத்தினர்.

58-ஆவது நிமிடத்தில் கோவா வீரர் வலதுபுறத்திலிருந்து மின்னல் வேகத்தில் பாஸ் செய்த பந்தை துல்லியமாக வலைக்குள் புகுத்தினார். இதனால் இரு அணிகளும் மீண்டும் சமநிலை வகித்தன. 87-ஆவது நிமிடத்தில் கோவாவின் ஜோஃப்ரி ஒரு கோல் அடிக்க சென்னை ரசிகர்களை சோக மேகம் சூழ்ந்தது. இந்நிலையில் ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் ஒரு அதிசயம் நிகழ்ந்தது.

கோல் வலையை நோக்கி வேகமாக வந்த பந்தை பிடிக்க முயன்ற கோவா கீப்பர் லஷ்மிகாந்த், துரதிருஷ்டவசமாக தனது வலைக்குள்ளே தவறவிட்டார். இதனால் 90-ஆவது நிமிடத்தில் இரு அணிகளும் மீண்டும் சமநிலை பெற்றன.

வெற்றி தேடித்தந்த மெண்டோஸா: ரசிகர்கள் மிகுந்த பரபரப்பு நிலவிய இந்த சூழலில் சென்னை அணியின் நட்சத்திர வீரர் மெண்டோஸா, கனநேரத்தில் மீண்டும் ஒரு கோல் போட முடிவில் 3-2 என்ற கோல் கணக்கில் சென்னையை வெற்றி மாலை தழுவியது. சாம்பியன் ஆன மகிழ்ச்சியில் சென்னை வீரர்கள் மைதானத்தில் ஆர்ப்பரித்தனர். சாம்பியன் கோப்பை வென்ற சென்னை அணிக்கு ரூ.8 கோடியும், 2-ஆவது இடம்பிடித்த கோவா அணிக்கு ரூ.4 கோடியும் பரிசாக வழங்கப்பட்டது. அதிக கோல் அடித்த வீரருக்கான தங்க ஷுவை சென்னை அணியின் மெண்டோஸாவுக்கும் (13 கோல்கள்), சிறந்த கோல் கீப்பருக்கான தங்க கையுறையை சென்னையின் அபுலா எடலும் பெற்றனர்.

அதிக கோல்கள்
1.ஸ்டீவன் மெண்டேஸா -சென்னை -13
2. இயான் ஹியூமி -கொல்கத்தா -11
3.ரெனால்டோ -கோவா -7
4.சுனில் சேத்ரி -மும்பை -7
5,அன்டோனியோ -கேரளம் -6

அதிக கோல்களை தடுத்த கீப்பர்கள்
1.ரெஹினேஷ் -வடகிழக்கு எஃப்சி-47
2.சான்டானா -தில்லி-45
3.சுப்ரதா பால் -மும்பை-40
4.அம்ரிந்தர் சிங் -கொல்கத்தா-40
5. லக்ஷ்மிகாந்த் -கோவா-39

அதிக கோல்கள் அடித்த அணி
1.கோவா-34
2.சென்னை-32
3.கொல்கத்தா-28
4.கேரளம்-22
5.தில்லி-19

விராட் கோலியை விமர்சிக்கும் ரசிகர்கள்

இறுதிப் போட்டியில் மோதிய சென்னை அணியின் உரிமையாளர்களில் ஒருவராக இந்திய ஒரு நாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியும், கோவா அணியின் உரிமையாளர்களில் ஒருவராக இந்திய டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன் விராட் கோலியும் உள்ளனர்.

இந்நிலையில் கோவா அணியை வீழ்த்தி சென்னையின் எஃப்சி சாம்பியன் மகுடத்தை சூடியதை அடுத்து, சுட்டுரை (டுவிட்டர்), முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தோனியை உயர்வாக வைத்து, கோலியை ரசிகர்கள் விமர்சித்துள்ளனர்.

Related Posts