Ad Widget

சுவிஸ்குமாரை காப்பாற்ற ஸ்ரீகஜன் முற்பட்டாரா?

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலைவழக்கின் பிரதான சந்தேகநபராக கருதப்படும் சுவிஸ்குமாரை கைதுசெய்து பொலிஸ் நிலையத்தில் முன்னிலைப்படுத்தவோ, நாட்டை விட்டு தப்பிச் செல்லாமல் இருப்பதற்கோ உப பொலிஸ் பரிசோதகர் சு.ஸ்ரீகஜன் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையென யாழ். பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரியான ரஞ்சித் பாலசூரிய குறிப்பிட்டுள்ளார்.

வித்தியா கொலை வழக்கின் இரண்டாம் கட்ட சாட்சியப்பதிவின் இரண்டாம் நாளான நேற்று (புதன்கிழமை) ட்ரயல் அட் பார் தீர்ப்பாயத்தின் முன்னிலையில் சாட்சியமளித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த சாட்சியப்பதிவில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது-

”சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில் நான் யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றி வந்தேன். மாணவி கொலை வழக்கு தொடர்பில் எமது பொலிஸ் நிலையத்தினால் எந்த விசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லை.

இருந்த போதிலும் எமது பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் ஸ்ரீகஜன் தலைமையில் விசேட பொலிஸ் குழு ஒன்றினை, மாணவி கொலை வழக்கு தொடர்பில் விசாரணை செய்ய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அமைத்திருந்தார்.

மாணவி கொலை வழக்கு தொடர்பில் ஸ்ரீகஜன் எந்தவொரு சந்தேக நபரையும் கைதுசெய்து எமது பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தவில்லை. பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி என்ற வகையில் எவரையாவது கைதுசெய்து பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தினால் எனக்கு அறிவிக்க வேண்டும்.

ஆனால் ஸ்ரீகஜன் மாணவி கொலை வழக்கு தொடர்பில் ஒருவரை கைது செய்து பின்னர் விடுவித்ததாக அறிந்து கொண்டேன்.

ஸ்ரீகஜன் புங்குடுதீவில் இருந்து மகாலிங்கம் சசிக்குமார் (சுவிஸ்குமார்) என்பவரை அழைத்து வந்து, அவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளார். அந்த முறைப்பாட்டின் பின்னர் சட்ட வைத்திய அதிகாரியிடம் சசிக்குமார் அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

மேலும், சுவிஸ் குமார் நாட்டை விட்டு தப்பிச் செல்லாமல் இருக்க கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய பொலிஸாருக்கு அறிவிக்க வேண்டுமென, வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் கூறியதாக ஸ்ரீகஜன் என்னிடம் கூறினார். அதன் பின்னர், நீதிமன்ற கட்டளையை பெற்று அதற்கு உடன் நடவடிக்கை எடுக்குமாறு நான் கூறினேன். ஆனால் ஸ்ரீகஜனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என்றார்.

இதேவேளை, ஸ்ரீகஜனை கைதுசெய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், அவர் தலைமறைவாக உள்ளதாக ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் நேற்று முன்தினம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts