Ad Widget

சுற்றுலா என்று கூறியே கொழும்பில் இருந்து அழைத்து வரப்பட்டோம் ; கச்சேரி ஆர்ப்பாட்டத்தில் மக்கள் குமுறல்

arpaddam-27-8சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்வதாக கொழும்பில் இருந்து அழைத்து வரப்பட்ட மக்களை கொண்டு காணாமல் போனோர் தொடர்பிலான ஆர்ப்பாட்டம் என்ற போர்வையில் நவிப்பிள்ளைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் , தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நேற்று காலை 8.30 மணியளவில் யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்னால் இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது. யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட நவநீதம்பிள்ளை நேற்று வடமாகாண ஆளுநரை அவரது இல்லத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார் .அதனை தருணமாக பயன்படுத்தியே இந்த ஆர்ப்பாட்டம் மாவட்டச் செயலகத்திற்கு முன்னால் இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்டவர்கள் 30 வருடத்தில் நடைபெற்ற யுத்தத்தில் காணாமல் போனவர்கள் குறித்து பேசாமல் இறுதி 3மாதத்தில் மட்டும் காணாமல் போனவர்கள் பற்றிப் பேசுவது ஏன்? புலிகள் சிறுவர்களைக் கடத்திச் சென்ற போது சிறிதரன், சுமந்திரன், சம்பந்தன், மாவை ,சுரேஸ்பிரேமச்சந்திரன் போன்றவர்கள் எங்கு இருந்தார்கள், காணாமல் போன படையினருக்கு விசாரணை இல்லையா, புலிகளது ஆதரவாளர்களது கருத்துக்களுக்காகவா ஐ.நா செயற்படுகின்றது, சுரேஸ்பிரேமச்சந்திரனின் மண்டையன் குழுவில் கொல்லப்பட்டவர்களுக்கு விசாரணை வேண்டாமா? போன்ற வாசங்களைத் தாங்கியிருந்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கொழும்பு , வத்தளை, மட்டக்களப்பு, கிரான் , திருகோணமலை , யாழ்ப்பாணம் ஆகிய இடங்களைச் சேர்ந்த மக்களை புலனாய்வுப் பிரிவினர் மற்றும் அவர்களுடன் இணைந்த அரச குழுக்களும் ஏமாற்றி அழைத்து வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுத்தினர்.

அதன்படி ‘நாங்கள் கொழும்பில் இருக்கிறம் எங்களை நல்லூர் திருவிழாவுக்கும் யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா ஒன்றுக்கும் கூட்டிச் செல்வதாக கூறி அழைத்து வந்தனர். எங்களுக்கு இப்படி ஆர்ப்பாட்டம் எண்டு தெரியாது. கோயிலுக்கு போகலாம் எண்டு வந்த இப்ப கால்வலிக்க நிற்கவைச்சிட்டாங்கள்’ என எதுவும் அறியாது ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஒரு தாய் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

மேலும் ஒருவர் தெரிவிக்கையில், ‘நாங்கள் மட்டக்களப்பில இருந்து வந்திருக்கிறம் உண்மையாக என் தம்பி காணாமல் போயிட்டார். யாழ்ப்பாணத்தில நவநீதம்பிள்ளை மக்களை சந்திப்பா எண்டு சொல்லி கூட்டி வந்தினம். நானும் தம்பி பற்றிக் கதைக்க வந்தன். ஆனால் இங்க வந்தபிறகு தான் தெரியும் அவா எங்களை சந்திக்க மாட்டா எண்டும் இது எதிரான ஆர்ப்பாட்டம் எண்டும் ஏமாற்றிட்டாங்கள்’ என கண்ணீருடன் கூறினார்.

இதேவேளை , சிங்கள மொழி பேசுபவர்களே அதிகமான இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts