Ad Widget

சுமந்திரனுடன் தமிழ்மாறனும் யாழ். தேர்தல் களத்தில் குதிப்பு!

கடந்த தடவை பொதுத் தேர்தலை அடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தேசியப் பட்டியல் எம்.பியாக நியமனம் பெற்ற எம்.ஏ.சுமந்திரன் விரைவில் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் யாழ். தேர்தல் மாவட்டத்திலிருந்து களமிறங்க இருக்கின்றார்.

sumantheran-thamil-maran

அதற்கான முன்னேற்பாடு, முஸ்தீபுகளில் அவர் ஈடுபட்டு வருகின்றார். இதேவேளை, சட்டத்துறை விடயங்களில் அதிக பரிச்சயம் மிக்கவரும் கொழும்புப் பல்கலைக்கழக சட்ட விரிவுரையாளருமான வி.ரி.தமிழ்மாறனையும் இந்தத் தடவை யாழ். மாவட்டத்தில் களத்தில் இறக்குவது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை தீவிரமாக சிந்தித்து வருகின்றது எனத் தெரிகின்றது.

கடந்த தடவை தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பட்டியலில் தீவுப் பகுதி சார்பில் இரா.சிவச்சந்திரன் போட்டியிட்டார். அவர் தேர்தலில் தெரிவாகவில்லை. அவர் வேலணைப் பகுதியைச் சேர்ந்தவர். அவரது இடத்துக்கே இம்முறை புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட வி.ரி.தமிழ்மாறனைக் களமிறக்குவதற்கு ஆலோசிக்கப்படுகின்றது.

இதற்கு முன்னேற்பாடாக, தீவுப் பகுதியின் ஊர்காவற்றுறை தேர்தல் தொகுதியின் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கிளை ஊடாக ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒரு கோரிக்கை கட்சித் தலைமைப் பீடத்திடம் முன்வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிகின்றது.

தீவுப் பகுதியின் சார்பில் இம்முறை வி.ரி.தமிழ்மாறனை களமிறக்கக் கோரும் இக்கடிதத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஊர்காவற்றுறைக் கிளைத் தலைவர் பேராசிரியர் இரா.சிவச்சந்திரனே ஒப்பமிட்டுள்ளார் எனவும் தெரிகின்றது.

வி.ரி.தமிழ்மாறனின் மூத்த சகோதரர் அமரர் நாவேந்தன் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முக்கிய பிரமுகராக விளங்கியவர். உச்ச நெருக்கடி காலத்தில் கட்சியை விட்டுக் கொடுக்காது பணியாற்றியவர் நாவேந்தன். பல தரப்பினாலும் உயிர் அச்சுறுத்தல் விடப்பட்ட சமயத்திலும் கட்சியின் சார்பில் யாழ். பிரதி மேயராகப் பணியாற்றியவர். அரசமைப்புச் சட்ட விடயங்களில் வி.ரி.தமிழ்மாறன் நன்கு பரிச்சயம் உள்ளவர் என்பதால் அவரது பங்களிப்பு நன்கு உதவும் என இரா.சம்பந்தன் கருதுகின்றார் எனத் தெரிகின்றது.

இதேவேளை எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. வடமராட்சி கிழக்கை மையமாக வைத்து தேர்தலில் களமிறங்கும் ஏற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றார். அப்பகுதியைச் சேர்ந்த கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் அவருக்கான களப்பணியை முன்னெடுத்து வருகின்றனர். என்றும் தெரிகின்றது.

இதேசமயம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் இப்போது நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் யாழ். மாவட்ட எம்.பி.க்கள் அனைவருக்குமே அடுத்த தேர்தலில் இடம் கொடுக்கப்பட வேண்டும் என்று கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தன் கருதுகின்றார்.

இவர்களுள் விநாயகமூர்த்தி எம்.பி. சற்று நோய் வாய்ப்பட்டுள்ளார். எனினும் அடுத்த தேர்தலிலும் தமக்கு இடமளிக்கப்பட வேண்டும் என்று அவர் விரும்புகின்றார் எனவும், அந்த விருப்பம் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் அழுத்தம் திருத்தமாகத் தெரிவிக்கப்பட்டிருகின்றது என்றும் அறிய வருகின்றது.

இதேசமயம், கடந்த முறை யாழ். தேர்தலில் போட்டியிட்ட சீ.வி.கே.சிவஞானம் இப்போது வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவராக உள்ளார். அதேபோல பொ.ஐங்கரநேசன் மாகாண அமைச்சராகவுள்ளார். இவர்களுக்கு இடமளிப்பதில் கூட்டமைப்புத் தலைமை அதிக விருப்பம் காட்டவில்லை எனத் தெரிகின்றது.

இதேசமயம், ஒன்றரை வருடங்களுக்கு முன்னர்தான் நடந்து முடிந்த வடக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பொதுத் தேர்தலில் இடமளிப்பதிலும் கூட்டமைப்புத் தலைமைக்கு அதிக விருப்பம் இல்லை என்று தெரிகின்றது.

புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தனும் வடக்கு மாகாண சபை உறுப்பினராக உள்ளார். அவரும் மற்றொரு மாகாண சபை உறுப்பினரான திருமதி அனந்தி சசிதரனும் இம்முறை பொதுத் தேர்தலில் யாழ். மாவட்டத்தில் களமிறங்கும் இலக்கைக் கொண்டுள்ளனர் எனத் தெரிகின்றது.

இவர்களுள் சித்தார்த்தன், கூட்டமைப்பில் தமது புளொட் கட்சிக்கு உரிய ‘கோட்டா’ மூலம் வேட்பாளர் பட்டியலில் இடம்பெற முயலக்கூடும். ஆனால் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்குத் பொதுத் தேர்தலில் இடமளிப்பதில்லை, அந்தப் பதவியில் அவர்களின் சேவை தொடரட்டும் என்ற காரணத்தைக் காட்டி அனந்திக்கு இடமளிக்காமல் இலங்கைத் தமிழரசுக் கட்சி அவரை வெட்டிவிடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆனால், அப்படி ஒரு தீர்மானத்தை இலங்கைத் தமிழரசுக் கட்சி எடுக்குமானால் வன்னி மாவட்டத்தில் பொதுத் தேர்தலில் போட்டியிடும் இலக்கை வைத்து காய் நகர்த்தி வரும் வடக்கு மாகாண சபையின் சுகாதார அமைச்சர் டாக்டர் ப.சத்தியலிங்கத்துக்கு அது பெரும் இக்கட்டாய்ப் போய்விடும். “அவரைப் பொதுத் தேர்தலில் களமிறக்கினால் நல்ல ஒரு சுகாதார அமைச்சரை வடக்கு மாகாண சபை இழந்துவிடுமே…!” – என்று கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தன் தமக்கு நெருக்கமானவர்களிடம் கூறினார் எனவும் அறியவந்தது.

Related Posts