Ad Widget

சுமந்திரனுக்கு வழங்கிய பாதுகாப்பு நீக்கப்பட்ட விவகாரம் -பொலிஸ் மா அதிபரிடம் அறிக்கை கோரும் சபாநாயகர்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு வழங்கப்பட்டிருந்த விசேட அதிரடிப்படை பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ள நிலையில், இது குறித்த அறிக்கை ஒன்றினை தனக்கு தருமாறு சபாநாயகர் பொலிஸ்மா அதிபருக்கு எழுத்துமூல கோரிக்கை ஒன்றினை முன்வைத்துள்ளார்.

எம்.ஏ.சுமந்திரனுக்கு வழங்கப்பட்டிருந்த விசேட அதிரடிப்படை பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ள நிலையில் நாடாளுமன்றத்திலும் கட்சித் தலைவர் கூட்டத்திலும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ச்சியாக கேள்வி எழுப்பினர்.

கடந்த வியாழக்கிழமை கட்சி தலைவர்கள் கூட்டம் இடம்பெற்ற நிலையில், கட்சி தலைவர்கள் கூட்டத்திலும் சுமந்திரனுக்கு வழங்கப்பட்டிருத்த விசேட அதிரடிப்படையினரை நீக்கியது ஏன் என்ற கேள்வி எதிர்க்கட்சி உறுப்பினர்களினால் எழுப்பப்பட்டிருந்தது.

இதற்கு முபதிலளித்திருந்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, “முன்னர் நாடாளுமன்றதத்திலும் தொடர்ச்சியாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இது குறித்து கேள்வி எழுப்பிய வேளையில், சுமந்திரன் விடுதலைப்புலிகளின் நினைவேந்தளில் கலந்து கொள்கின்றார். பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான பேரணியில் கலந்துகொண்டார்.

இவ்வாறான செயற்பாடுகள் தேசிய பாதுகாப்பு விடயங்களை கேள்விக்கு உற்படுத்தும் விடயமாகின்ற காரணத்தினாலும் இலங்கையின் பாதுகாப்பு படைகளை குற்றம் சுமத்திக்கொண்டு அவர்களின் பாதுகாப்பை கேட்பது என்ன நியாயம் என்ற கேள்வி எம்மத்தியில் உள்ளதால் நானே சுமந்திரனுக்கான பாதுகாப்பை நீக்க நடவடிக்கை எடுத்தேன்” என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் எதிர்க்கட்சியினரின் தொடர்ச்சியான கோரிக்கையை அடுத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் விசேட பாதுகாப்பை நீக்கியமை குறித்து பொலிஸ்மா அதிபர் அறிக்கை ஒன்றினை தருமாறு சபாநாயகர் கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளார்.

இது குறித்து பொலிஸ்மா அதிபரின் பதில் நாளை நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Related Posts