Ad Widget

சுதந்திர தினத்தை கறுப்பு தினமாக அனுஷ்டிக்க வேண்டும்: சிவாஜிலிங்கம்

Sivaji-lingamஇலங்கையின் 66ஆவது சுதந்திர தினத்தினை வட மாகாணத்தில் கறுப்பு தினமாக அனுஷ்டிக்க மக்களிடம் கோரிக்கை முன்வைக்க வேண்டும்’ என வடமாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம், வடமாகாண சபையிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இந்த வேண்டுகோளை முன்வைத்தார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த சிவாஜிலிங்கம், ‘எதிர்வரும் பெப்ரவரி மாதம் 04ஆம் திகதி இலங்கையின் சுதந்திர தினம் அனுஷ்டிக்கப்பட உள்ளது. அதன்போது, வடமாகாண சபையில் ஒரு தீர்மானத்தினை எடுக்க வேண்டும்.

அதாவது, எதிர்வரும் சுதந்திர தினத்தினை கறுப்பு தினமாக வடமாகாணத்தில் அனுஷ்டிப்பதற்கு மக்களிடம் கோரிக்கை விடுக்க வேண்டுமென்ற தீர்மானத்தினை நான் முன்வைக்கின்றேன’ என்றார்.

‘அவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டு, வடமாகாணத்தில் சுதந்திர தினத்தினை கறுப்பு தினமாக அனுஷ்டித்தால், அது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும், சிங்கள ஆட்சியாளர்களுக்கும் மரண அடியாக இருக்கும்’ என்றும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், ‘இவ்வாறான துணிச்சல் மிக்க நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் எமது கோரிக்கைகளை நாம் நிறைவேற்ற முடியும் அதேவேளை, பேரம் பேசுவதற்கு செல்லும் போது பேரம் பேச வேண்டும் என்பதனை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் வடமாகாண அமைச்சர்கள், மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்கள் புரிந்துகொள்ள வேண்டும்’ என்று சிவாஜிலிங்கம் கேட்டுக்கொண்டார்.

‘வட மாகாண மக்கள் மிகவும் நொந்து போய் இருக்கின்றார்கள். அவர்களுக்கு என்ன பதில் சொல்வது என்ற நிலைமை தற்போது ஏற்பட்டுவிட்டது என்று நான் கருதுகின்றேன்’ என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts