Ad Widget

சுதந்திர தினத்தையிட்டு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்கட்சி தலைவரின் வாழ்த்துச் செய்தி

சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட புதியதோர் தேசத்தில் சமாதானமும் சுபீட்சத்துடனும் வாழும் பாக்கியம் எமக்கு கிட்ட வேண்டும் – ஜனாதிபதி

நீதி மற்றும் சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட புதியதோர் தேசத்தில் சமாதானமும் சுபீட்சமும் கிடைக்கப்பெற்ற மக்களாக வாழும் பாக்கியம் எமக்கு கிட்ட வேண்டும் என்று 69ஆவது சுதந்திர தினத்தையிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது:
மனிதர்கள் தமது சுதந்திரத்திற்காக மேற்கொண்ட போராட்டங்களினால் மானுட வரலாறு அழகு பெற்றுள்ளது. இலங்கையரான நாமும் அவ்வாறான பெருமைமிகு சுதந்திரப் போராட்ட வரலாற்றுக்கு உரித்துடையவர்களே.

பல நூற்றாண்டுகளாக நீடித்த மன்னராட்சிக் காலத்திலிருந்து நவீன ஜனநாயகம் வரை நாம் கடந்து வந்த பயணத்தில் அவ்வாறான போராட்டங்கள் பற்றிய இதமான நினைவுகளுடன்இ கசப்பான நினைவுகளும் பதிவாகி இருக்கின்றன.
சுதந்திரத்துக்காக பாடுபட்ட எம் முன்னோர்களினதும் மக்களினதும் தியாகத்துக்கு நாம் என்றும் கடமைப்பட்டுள்ளோம். உண்மையிலேயே அவர்கள் சிந்திய வியர்வையும் இரத்தமும் சுவாசமும் கலந்த தியாகத்தையே வரலாறு எமக்கு உணர்த்துகின்றது.

69 ஆவது சுதந்திரத்தின விழா நடைபெறும் இவ்வேளையானது எமது நாட்டிற்கு மிகவும் தீர்க்கமான சவால்மிக்கதொரு சந்தர்ப்பமாகும். அண்மைய வரலாற்றில் நாம் அடைந்த ஜனநாயக சுதந்திரத்தைப் பாதுகாத்து தேசிய சிந்தனையின் ஊடாக அனைத்து இனங்களும் சமாதானத்துடன் வாழக்கூடிய நாட்டை கட்டியெழுப்பும் பொறுப்பு எமது தோள் மீது சுமத்தப்பட்டுள்ளது. ஜனநாயகம் சுதந்திரம் போன்ற வார்த்தைகளைக் கொண்டு வர்ணிக்கப்பட்ட இருண்ட யுகத்திலிருந்து நாம் விடுதலை பெற்றுள்ளோம்.

இருளில் மூழ்கிக் கொண்டிருந்த ஜனநாயகத்தையும் மனிதாபிமானத்தையும் மீண்டும் சுடர்விட வைப்பதிலும் நாம் வெற்றி பெற்றுள்ளோம். ஆயினும் சுதந்திரத்தை மேலும் அர்த்தமுள்ளதாக்க வேண்டுமாயின் வறுமையிலிருந்தும் நோய்களிலிருந்தும் விடுபடுவது மட்டுமின்றி இன மத சாதி பேதம் போன்ற வரையறைக்குள் சிறைப்பட்டுள்ள மக்களையும் சமூகத்தையும் அவற்றிலிருந்து விடுவித்து மனித உரிமைகள் மற்றும் நீதிநெறிகளை மதிக்கும் தேசத்தை உருவாக்க வேண்டும்.
நீதி மற்றும் சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட புதியதோர் தேசத்தில் சமாதானமும் சுபீட்சமும் கிடைக்கப்பெற்ற மக்களாக வாழும் பாக்கியம் எமக்கு கிட்ட வேண்டும்.

அறியாமையை அறிவினாலும் பொய்மையை வாய்மையினாலும் பழிதீர்க்கும் எண்ணத்தை கருணையினாலும் இம்சையை அகிம்சையினாலும் வெற்றிகொள்ளக் கூடிய மனிதத்தை மதிக்கும் சுதந்திரத்தின் சுவர்ண பூமியாக எமது தாய்நாடு உருவாக வேண்டுமெனப் பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்

சவால்களை வெற்றிக் கொள்வதற்கு உறுதி பூணுவோம் – பிரதமர்

மிகவும் மோசமான ஓர் ஆட்சிக் காலத்தைத் தோற்கடித்து, நல்லாட்சி அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்து இரண்டு வருடங்கள் பூர்த்தியான நிலைமையில், காலனித்துவ ஆட்சியிலிருந்து விடுபட்ட சுதந்திரத்தின் 69 ஆவது வருடப் பூர்த்தியைக் கொண்டாடுகின்றமை தனிச்சிறப்பு மிக்க சந்தர்ப்பம் என்று நான் நினைக்கிறேன்.

69 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் ரணில்விக்கிரமசிங்க வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

வாழ்த்துச் செய்தியில் பிரதமர் ரணில்விக்கிரமசிங்க மேலும் தெரிவித்துள்ளதாவது:

கடந்த இரண்டு வருட காலப்பகுதியினுள் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தல், நட்புறவான சர்வதேசத் தொடர்புகளை மேம்படுத்தி, பரஸ்பர நம்பிக்கையை வெற்றி கொள்ளுதல், இன, சமய பேதங்களைத் தாண்டிய மனித நேயமிக்க அமைதியான நாடொன்றைக் கட்டியெழுப்புவதற்கான அடிப்படையை உருவாக்கல், நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கான முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் போன்ற பல வெற்றிகளை எம்மால் பெற்றுக் கொள்ள முடிந்தது.

அபிமானம் மிக்க ஓர் தேசமாக, ஒன்றிணைந்த இலங்கை மக்களாக எதிர்காலத்தில் முன்னோக்கிச் செல்வதற்காக சுயநலத்தை ஒதுக்கி விட்டு, நாட்டிற்காகப் பாடுபட்டு உழைப்பதே எமக்குள்ள சவாலாகும்.

அந்த சவாலை வெற்றி கொள்ள துணிச்சலுடனும், நேர்மையாகவும், அர்ப்பணிப்புடனும் செயற்பட இந்த சுதந்திர தினத்தில் விசேடமாக உறுதி பூணுவோம் என்று தெரிவித்துள்ளார்.

வன்முறைகளுக்கான காரணங்களுக்கு இன்னும் தீர்வு காணப்படவேண்டியுள்ளது – எதிர்க் கட்சித் தலைவர் இரா. சம்பந்தன்

வன்முறை முரண்பாடு ஒரு முடிவிற்கு வந்துவிட்டதாயினும், அந்த வன்முறைகளுக்கான காரணங்களுக்கு இன்னும் தீர்வு காணப்படவேண்டியுள்ளது என்று எதிர்க் கட்சித் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் விடுத்துள்ள சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

எதிர்க் கட்சித் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் விடுத்துள்ள சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் :

எமது 69 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இவ்வாழ்த்துச் செய்தியை வழங்கக் கிடைத்துள்ளமையையிட்டு நான் பெரு மகிழ்ச்சி அடைகின்றேன்.

கருத்தொருமைப்பாட்டின் அடிப்படையில் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதிலேயே நாட்டின் எதிர்காலம் தங்கியுள்ளது. எமது நாட்டின் நலனைக் கருத்திற்கொண்டு இந்தக் கூட்டு முயற்சிக்கு நாம் அனைவரும் முழுமையான ஒத்துழைப்பு வழங்க முன்வரவேண்டும்

மக்கள் சனநாயகத்தின் உண்மையான பயனாளிகளாக இருப்பதற்கு உதவும் சமத்துவம் மற்றும் கண்ணியம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த நாட்டின் சகல மக்கள் மத்தியிலும் இந்த ஆண்டு நல்லிணக்கததைக் கொண்டு வரும் என்ற பெரும் எதிர்பார்ப்பு நிலவுகின்றது. இது எமது நாட்டில் வாழும் அனைத்து மக்களதும் நன்மைக்கு மிக இன்றியமையாததாகும்.
அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியும் சுபீட்சமும் ஏற்பட வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்

Related Posts