Ad Widget

சுதந்திரக் கட்சி வேட்பு மனுவிலும், தேசியப்பட்டியலிலும் மஹிந்தவின் பெயர் இல்லை! ஜனாதிபதி மைத்திரி உறுதி!!

விரைவில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் வேட்பு மனு வழங்கப்படமாட்டாது. அத்துடன் தேர்தலின் பின்னரும் தேசியப்பட்டியல் மூலம் கூட எம்.பி. நியமனமும் இல்லை. – இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார் என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ ஆகியோரிடையே இணக்கத்தை ஏற்படுத்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் 6 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு பேச்சுக்கள் நடைபெற்றாலும் பொதுத் தேர்தலில் பிரதம வேட்பாளராக மஹிந்த ராஜபக்‌ஷ நியமிக்கப்படமாட்டார் என்ற நிலைப்பாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால என்றும் அமைச்சர் ராஜித மேலும் கூறினார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று வியாழக்கிழமை பிற்பகல் கொழும்பில் நடைபெற்றபோது அமைச்சர் ராஜித சேனாரட்ன மேற்படி விடயங்களைக் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு எதிர்வரும் பொதுத் தேர்தலில் தேசியப்பட்டியலில் கூட இடமளிக்கப்போதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினர்களிடம் உறுதியளித்தார். நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும்போது பிரதமர் வேட்பாளர் என்ற நியமனம் யாருக்கும் வழங்கப்படமாட்டாது. தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை ஜனாதிபதி மைத்திரிபால தீர்மானிப்பார்” – என்றார்.

Related Posts