Ad Widget

சுகாதார பரிசோதகர்கள் விடுவிக்கவும் – ஆளுநர்

யாழ். மாவட்டத்திலுள்ள நான்கு பிரதேச சபைகளின் கீழுள்ள பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களில் 3 பிரதேச சபைகளின் பொதுச் சுகாதார பரிசோதகர்களை சுகாதாரத் திணைக்களத்தின் கீழ் இடமாற்றம் செய்யுமாறு வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி குறித்த பிரதேச சபைகளின் தவிசாளர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

PHI

அனுமதியுள்ள வலி.தெற்கு பிரதேச சபையின் பொதுச் சுகாதார பரிசோகர் மட்டும் அவரது சேவைக்காலம் முடியும் வரையிலும் பிரதேச சபையின் கீழ் இருக்கலாம் எனவும், இருந்தும் அவர் ஓய்வு பெற்ற பின்னர் புதிதாக நியமனம் பெறும் பொதுச் சுகாதார பரிசோதகர் சுகாதாரத் திணைக்களத்தின் கீழே கடமையாற்றுவார் என ஆளுநர் தெரிவித்தார்.

யாழ்.மாவட்டத்தின் நல்லூர், சங்கானை (வலி.தென்மேற்கு), உடுவில் (வலிதெற்கு), தெல்லிப்பளை (வலி.வடக்கு) ஆகிய 4 பிரதேச சபைகளின் கீழ் கடமையாற்றி வரும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களினால் தமக்கு இடையூறுகள் ஏற்படுவதாகவும், அவர் தங்களுக்கு அச்சுறுத்தல்கள் விடுப்பதாகவும் கூறி அவர்களை சுகாதாரத் திணைக்களங்களின் கீழ் மாற்றும் படி யாழ். மாவட்டத்திலுள்ள 12 சுகாதார வைத்தியதிகாரி பிரிவுகளையும் சேர்ந்த சுகாதார வைத்தி அதிகாரிகள் நேற்று பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

8 மணிக்கு ஆரம்பமாகிய இந்தப் பணிப்புறக்கணிப்புப் போராட்டம் நண்பகல் 12 மணி வரையும் நீடிக்கப்படுமெனத் தெரிவித்த நிலையில், இது தொடர்பான முடிவினை எடுக்கும் பொருட்டு வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி அவசர கலந்துரையாடலொன்றை தனது அலுவலகத்தில் மேற்கொண்டார்.

இந்தக் கலந்துரையாடலில், அரச வைத்தியதிகாரிகள் சங்கத்தின் யாழ்.பிராந்திய கிளையின் தலைவர் செயலாளர், வடமாகாண சுகாதாரப் பணிப்பாளர், சுகாதார அமைச்சின் செயலாளர், பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர், உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதன்போது, பிரதேச சபைகளின் கீழ் பணியாற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்களை சுகாதாரத் திணைக்களத்திற்கு மாற்றுவதற்கு உள்ளுராட்சி அமைச்சின் செயலாளரும் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, இன்று நடைமுறைக்கு வரும் வகையில் பிரதேச செயலகங்களில் கீழுள்ள பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களை சுகாதாரத் திணைக்களத்தின் கீழ் மாறி, அங்கு தங்கள் கையொப்பங்களை இட்டு பணிகளைத் தொடரும் படி ஆளுநர் உத்தரவிட்டார்.

அத்துடன், பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கு இதுவரையிலும் பிரதேச சபையினால் வழங்கப்பட்டு வந்த சம்பளக் கொடுப்பனவை இன்றுடன் நிறுத்துமாறு குறித்த 3 பிரதேச சபைகளின் தவிசாளர்களுக்கும் ஆளுநர் உத்தரவிட்டார்.

இவ்வாறு இடமாற்றம் செய்வதற்கு குறித்த பிரதேச சபைகளின் தவிசாளர்கள் தங்கள் எதிர்ப்புக்களைக் வெளிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts