Ad Widget

சீரற்ற காலநிலை: 28 பேர் உயிரிழப்பு : 41 பேரை காணவில்லை

சீரற்ற காலநிலை இதுவரையில் 28 பேரின் உயிர்களை பறித்துள்ளது. கடும் மழைக் காரணமாக ஏற்பட்டுள்ள வரும் வெள்ள மற்றும் மண்சரிவு அனர்த்தங்களில் சிக்கி இதுவரை 28 பேர் பலியாகியுள்ளதுடன், 41 பேர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக இரத்தினபுரி, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலே இந்த உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

புளத்சிங்கள போகஹாவத்த பகுதியில் ஆறு பேர் பலியானதுடன் நான்கு பேர் காணாமல் போயுள்ளனர்.

மேலும், தீவலகட பகுதியில் ஏற்பட்ட மண்சரிவினால் எட்டுப் பேரைக் காணவில்லை.

களுத்துறை, பதுரெலிய பகுதியில் நிகழ்ந்த மண்சரிவில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் பலியாகியுள்ளனர்.

அதேபோல் ஹெய்யந்துடுவை, சப்புகஸ்கந்தையில் மதில் சுவரொன்று சரிந்து விழுந்ததில் இரண்டு பெண்கள் கொல்லப்பட்டனர்.

தொடரும் இந்த அசாதாரண காலநிலையால் இரத்தினபுரியில்; மாத்தரம் பத்துப் பேர் பலியாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

மேலும் பெலியத்தை – கஹாவத்தையில் ஒருவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.

இந்த அசாதாரணச் சூழலால் தெனியாய, மொரவக்க கந்தையில் மண்சரிவு ஏற்படும் அபாயம் அதிகரித்திருப்பதாக எமது செய்தியாளர் கூறினார்.

மலையகத்திலும் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மலையகப் பகுதிகளில் ஆங்காங்கே மண்சரிவுகள் இடம்பெற்று வருவதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் ஹட்டன், பொகவந்தலாவ போன்ற பகுதிகளில் கடுமையான பனி மூட்டம் நிலவுவதாகவும், இதனால் வாகன சாரதிகள் பல அசெகரியங்களுக்கு உள்ளாகிவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதேபோல் தற்போது மகாவலி ஆறு பெருக்கெடுத்துள்ளதால் ஆற்றின் அருகில் வசிக்கும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளபட்டுள்ளனர்.

சீரற்ற காலநிலை: 28 பேர் உயிரிழப்பு- 30 பேரை காணவில்லை

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சீரற்ற காலநிலை நிலவிவருகின்ற நிலையில், இந்த காலநிலை மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் பெய்துவரும் கடும் மழை காரணமாக பல்வேறு அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ளன. மழையினால் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக இதுவரை 28 பேர் உயிரிழந்ததுடன், 30 பேர்வரை காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அந்தவகையில் மலைநாட்டுப் பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதுடன் தாழ் நிலப்பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டிருப்பதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இரத்தினபுரி, கேகாலை, காலி, மாத்தறை மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களிலும் கடும் மழை பெய்து வரும் அதேவேளை, மேற்கு, சப்ரகமுவ, தெற்கு, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்து வருவதாக குறிப்பிடப்படுகின்றது.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மாலை வேளைகளில் புயல் காற்று வீசும் எனவும் வளிமண்டலவியல் திணைக்கம் எதிர்வு கூறியுள்ளது.

நெலுவையில் தேயிலை தொழிற்சாலை ஒன்றின் மீது மண் மேடு சரிந்து வீழ்ந்ததில் ஐவர் உயிரிழப்பு

நெலுவ பிரதேசத்தில் தேயிலை தொழிற்சாலை ஒன்றின் மீது மண் மேடு சரிந்து வீழ்ந்ததில் சுமார் ஐவர் உயிரிழந்துள்ளனர். இந்த அனர்த்தத்தில் சிக்கிய மேலும் பலரை தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இரத்தினபுரியில் மண் சரிவு 10 பேர் உயிரிழப்பு

இரத்தினபுரியில் இடம்பெற்ற மண்சரிவில் சிக்கி 10 பேர் வரையில் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளனர். அனர்த்தத்தினால் பல சொத்துக்களும் கடுமையாக சேதமடைந்துள்ளன.

அத்துடன் களுகங்கை பெருக்கெடுத்துள்ளதன் காரணமாக இரத்தினபுரி நகர் வெள்ளத்தில் முழ்கியுள்ளதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

நெடுஞ்சாலையிலும் வெள்ளம்

தெற்கு அதிவேக வீதியின் கொக்மாதுவ மற்றும் வெலிப்பன்ன ஆகிய இடங்களின் நுழை வாயில்கள் மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அந்த பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளநிலை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக குறித்த பகுதிகள் ஊடாக உள் செல்லவோ அல்லது வெளி செல்லவோ முடியாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

களுத்துறையில் மண்சரிவில் சிக்கிய அறுவர் உயிரிழப்பு

களுத்துறை புளத்சிங்கள போகாவத்தை, தெல்பவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற மண்சரிவில் சிக்கி ஆறு பேர் உயிரிழந்துள்ளதுடன், நால்வர் காணாமல் போயுள்ளனர்.

இதேவேளை புளத்சிங்கள கொபவக திவலகந்த பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கிய எட்டு பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

குறித்த பிரதேசங்களில் தொடரும் அடை மழை காரணமாக பல வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related Posts