Ad Widget

சீனி, பருப்பு உள்ளிட்ட 17 அத்தியாவசிய பொருள்கள் மீதான கட்டுப்பாட்டு விலை நீக்கம்!!

சீனி உள்ளிட்ட 17 அத்தியாவசியப் பொருள்கள் மீதான கட்டுப்பாட்டு விலையை நீக்கி அதிசிறப்பு அரசிதழ் அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சாந்த திஸாநாயக்கவின் கையொப்பத்துடன் அரசிதழ் அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

சந்தையில் சீனியின் விலை கடுமையாக உயர்ந்து வருவதைக் கட்டுப்படுத்த அரசு செப்டம்பர் 2ஆம் திகதி கட்டுப்பாட்டு விலையை நிர்ணயித்தது.

ஒரு கிலோ வெள்ளை சீனியின் மொத்த விலை 116 ரூபாயாகவும், அதிகபட்ச சில்லறை விலை 122 ரூபாயாகவும், ஒரு கிலோ சிவப்பு சீனியின் அதிகபட்ச சில்லறை விலை 125 ரூபாயாகவும், பொதி செய்யப்பட்ட சிவப்பு சீனியின் அதிகபட்ச சில்லறை விலை 128 ரூபாயாகவும் இருந்தது.

சீனி இறக்குமதியாளர்களுக்கும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து சீனிக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, இறக்குமதியாளர்கள் சீனியை அதிகபட்சமாக 150 ரூபாய்க்கு விற்பனை செய்ய ஒப்புக்கொண்டுள்ளனர்.

அத்துடன், பருப்பு, பெரிய வெங்காயம், ரின் மீன், சோளம், கோழி இறைச்சி, நெத்தலி, கருவாடு, பயறு, உருளைக்கிழங்கு, கடலை, கோதுமை மா மற்றும் பால்மா உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் மீதான கட்டுப்பாட்டு விலைகளை நிர்ணயித்த அரசிதழ்களை இரத்துச் செய்தும் அரசிதழ் வெளியிடப்பட்டுள்ளது.

Related Posts