Ad Widget

சிவில் நடவடிக்கைகளில் இராணுவம் தலையிடக்கூடாது!

வட மாகாணத்தில் நடைபெறும் சிவில் நடவடிக்கைகளில் இராணுவம் தலையிடக்கூடாதென வட மாகாணசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் பிரச்சனை தொடர்பில் ஆராய்வதற்கு மத்திய அரசினால் நியமிக்கப்பட்ட குழுவிற்கு முப்படைகளின் கட்டளைத் தளபதியையும், கடற்படையின் அதிகாரிகளையும் நீக்குமாறு கோரி வடமாகாண சபையின் பிரேரணைக்கு அமையவே இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வடமாகாண சபையின் 56ஆவது அமர்வு நேற்று முன்தினம்(செவ்வாய்க்கிழமை) கைதடியிலுள்ள வடமாகாண சபைக் கட்டடத்தில் நடைபெற்றது.

இதன்போது, முல்லைத்தீவு மாவட்ட வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரனால் முல்லைத்தீவு மாவட்ட மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காணும் குழுவிலிருந்து இராணுவ அதிகாரிகள் நீக்கப்படவேண்டுமென்ற பிரேரணை ஒன்று முன்வைக்கப்பட்டது.

முல்லைத்தீவு கடற்றொழிலாளர் பிரச்சனைகளை தீர்ப்பது தொடர்பாக கடந்த ஜூன் மாதம் 10ஆம் திகதி மத்திய கடற்றொழில் அமைச்சில் கூட்டமொன்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட முல்லைத்தீவு மாவட்ட கட்டளைத் தளபதி 1965ஆம் ஆண்டு முல்லைத்தீவின் கரைவலைப்பாடுகள் அனைத்தும் சிங்கள மீனவர்கள் வசமே இருந்ததெனவும் அவர்களின் கூலிகளாகவே தமிழ் மீனவர்கள் வேலை செய்தார்கள் எனவும் தெரிவித்திருந்தார்.

இந்த பிரேரணையை வழிமொழிந்த சர்வேஸ்வரன் முல்லைத்தீவு மாத்திரமின்றி வடக்கு மாகாணத்தின் சிவில் நடவடிக்கைகளில் இராணுவத்தினர் தலையிடக்கூடாது என்ற கோரிக்கை இணைக்கப்படவேண்டுமெனவும் தெரிவித்தார்.

இதனையடுத்து எதிர்க்கட்சித் தலைவர் எஸ்.தவராசா ரவிகரனின் பிரேரணைக்கு தனது முழுமையான ஆதரவை வழங்கியதுடன் பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

Related Posts