Ad Widget

சிவாஜிலிங்கத்திற்கு பேசியது தொடர்பில் அலட்டிக்கொள்ளாத மாகாண சபை

வடமாகாண சபை ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்திற்கு கடந்த 4ஆம் திகதி யாழ்.மாவட்ட சிரேஸ்ட காவல் துறை அத்தியட்சகர் மிகவும் மோசமான சொற்களால் பேசி இருந்தமை தொடர்பில் வடமாகாண சபை உறுப்பினர்கள் சபையில் கண்டனம் எதுவும் தெரிவிக்கவில்லை.

கடந்த 4ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதியின் கவனத்தை ஈர்க்கும் முகமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அதன் போது வடமாகாண சபை ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் யாழ்- கண்டி நெடுஞ்சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன் போது காவல்துறை சீருடையுடன் அங்கு வந்த யாழ்.மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் கஸ்ரன் ஸ்ரனிஸ்லஸ், மாகாண சபை உறுப்பினரான எம்.கே. சிவாஜிங்கத்தை ‘ எழும்பி போடா நாயே என மிக மோசமாக பேசி திட்டினார்.

அத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை நோக்கி ‘எருமை மாடு மாதிரி கதைக்கிறாய் , படிச்சு இருக்கிறியா ? மண்டைக்குள் சரக்கு இல்லையா ? என பேசினார். குறித்த சம்பவம் தொடர்பில் இன்றைய தினம் வடமாகாண சபை அமர்வில் எந்தவொரு உறுப்பினரும் தமது கண்டனங்களை பதிவு செய்யவில்லை.

அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் , இந்த சபை கௌரவமான சபை , சபை உறுப்பினர்களுக்கு உரிய மரியாதைகள் கொடுக்கப்பட வேண்டும் அவர்கள் கௌரவ உறுப்பினர்கள் அவர்களுக்கு சிறப்புரிமை இருக்கின்றது என சபை அமர்வுகளின் போது பல தடவைகள் சுட்டி காட்டி பேசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts