சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளில் இருந்து பாதுகாக்க நடவடிக்கை!!

சிறுவர்களுக்கு எதிரான அனைத்து வகையான வன்முறைகள் மற்றும் பாரபட்சங்களில் இருந்து அவர்களைப் பாதுகாப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி விடுத்துள்ள சிறுவர் தின வாழ்த்துச் செய்தியில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், சிறுவர்கள் என்பவர்கள் நாட்டின் பெறுமதியான பொக்கிஷம். அவர்களின் உடல் மற்றும் உள நல்வாழ்வைப் பாதுகாத்து, முறையான வளர்ச்சிக்குத் தேவையான சூழலை உருவாக்குவது ஒரு அரசாங்கத்தின் முதன்மையான பொறுப்பாகும்.

சிறுவர்களின் கற்பனைத் திறன், எதிர்பார்ப்புகள் மற்றும் படைப்பாற்றல் ஆகியவை நாளைய நாட்டின் போக்கை தீர்மானிக்கின்றது.

சிறுவர்களுக்காக நாம் கட்டியெழுப்பும் நாடானது, நாளைய தினம் அவர்களிடம் கையளிக்க இருக்கும் நாடு மட்டுமன்றி, இன்று அவர்களின் கனவுகளுக்கு இடமளிக்கும், அவர்களின் குரலை செவிமடுக்கும் மற்றும் அவர்களின் திறமைகளுக்கு வாய்ப்புகளை வழங்கும் நாடாகும்.

சிறுவர்களின் நலன்களை உறுதி செய்வதற்காக, அவர்களுக்குக் கல்விக்கான சம வாய்ப்பு, வழிகாட்டல், சமூகப் பாதுகாப்பு, விளையாட்டு, ஓய்வு மற்றும் பொழுதுபோக்கு சார்ந்த விடயங்களில் வாய்ப்புகளை வழங்குதல், முறையான போஷாக்கு, சுகாதார சேவை வசதிகள், சிறுவர்களுக்கு எதிரான அனைத்து வகையான வன்முறைகள் மற்றும் பாரபட்சங்களில் இருந்து அவர்களைப் பாதுகாப்பதற்கும் சிறுவர்களுக்குரிய உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.

சாதி, மதம், பொருளாதார நிலை, புவியியல் பின்னணி அல்லது வேறு எந்தவொரு காரணமும் எந்தவொரு சிறுவரின் கல்விக்கும் அல்லது சீரான வளர்ச்சிக்கும் தடையாக இருக்கக்கூடாது.

ஒவ்வொரு பிள்ளையும் தனது திறமைகளை வெளிக்கொணர்ந்து, தனது கனவுகளை அடைந்து, தான் விரும்பும் எதிர்காலத்தை உருவாக்கிக் கொள்வதற்கு சமமான மற்றும் நியாயமான வாய்ப்புகள் கிடைக்க வேண்டும்.

அதற்காக, இந்நாட்டின் கல்வியை ஒரு புதிய மாற்றத்திற்கு உட்படுத்தி, பெற்றோருக்குச் சுமையாகவும் பிள்ளைகளுக்குத் துன்பமாகவும் இல்லாத, நவீன உலகிற்குப் பொருத்தமான திறன் அடிப்படையிலான கல்வி முறைக்கான மறுசீரமைப்புச் செயற்பாட்டை நாம் ஏற்கனவே தொடங்கியுள்ளோம்.

நாம் கட்டியெழுப்பும் புதிய இலங்கையில் எந்தவொரு பிள்ளையையும் கைவிடாமல், அனைத்துப் பிள்ளைகளுக்கும் பாதுகாப்பான சூழலில் வளர்ச்சிக்கான வாய்ப்புகளை உறுதி செய்வதே எமது நோக்கமாகும்.

கல்விக்கான புலமைப்பரிசில்களை விரிவுபடுத்துவது முதல், சிறுவர் அபிவிருத்தி நிலையங்களில் வளரும் மற்றும் பராமரிப்புத் தேவைப்படும் பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பாதுகாப்பது வரை செயற்படுத்தப்படும் அனைத்துத் திட்டங்களினதும் அடிப்படை நோக்கம், நாட்டின் அனைத்துப் பிள்ளைகளுக்கும் பெருமைமிக்க மற்றும் பாதுகாப்பான நாளைய தினத்தை உருவாக்குவதாகும் என்பதை இங்கு நினைவுபடுத்த விரும்புகிறோம்.

தான் முகங்கொடுத்த வாழ்க்கையை விடச் சிறந்ததொரு வாழ்க்கை நிலையைத் தமது பிள்ளைகளுக்கு உரித்தாக்கிக் கொடுப்பது அனைத்துப் பெற்றோரினதும் எதிர்பார்ப்பாகும்.

நிலையற்ற பொருளாதாரத்தின் பாதிப்புக்களற்ற, பாதுகாப்பான மற்றும் அழகான சிறுவர் பருவத்தை அவர்களுக்குப் பெற்றுக்கொடுப்பதற்காக, நாம் தற்போது நாட்டின் பொருளாதாரத்தைச் சரியான மற்றும் நிலையான திசையை நோக்கி கொண்டு செல்கிறோம்.

அதேபோல், போதைப்பொருட்களில் இருந்து இளம் சந்ததியைப் பாதுகாப்பதற்காக அனைவரையும் ஒன்றிணைத்து “முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாட்டை நடைமுறைப்படுத்தியுள்ளோம்.

தேசிய சிறுவர்கள் தின வாரத்தைப் பிரகடனப்படுத்தி, மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சினால் சிறுவர்களின் உரிமைகள், நல்வாழ்வு, பாதுகாப்பு, கல்வி மற்றும் சுதந்திரத்தை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட பல அர்த்தமுள்ள நிகழ்ச்சிகளுடன் இம்முறை உலக சிறுவர் தினக் கொண்டாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமையையும் ஜனாதிபதி பாராட்டியுள்ளார்.

Related Posts