Ad Widget

சிறுமியை வன்புணர்விற்குட்படுத்த முயற்சித்ததாகவும் முயற்சி கைகூடாத நிலையில் சேற்றில் அமிழ்த்தி கொலை செய்ததாகவும் கைதான “கொத்து பாஸ்” பரபரப்பு தகவல்

பண்டாரகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டுலுகம பெரிய பள்ளிவாசல் அருகே வசித்த 9 வயதான பாத்திமா ஆய்ஷா அக்ரம் எனும் சிறுமியின் படுகொலை தொடர்பில் பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

‘பல்லி குட்டி’ என்ற புனை பெயரால் அறியப்படும் சிறுமியின் தாய் வழி உறவுக்காரரான 28 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தையொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

உணவகம் ஒன்றில் கொத்து தயாரிப்பாளராக (கொத்து பாஸ்) பணிபுரியும் குறித்த சந்தேக நபரை 48 மணிநேர தடுப்பு காவலில் வைத்து விசாரணைகளை முன்னெடுக்க பாணந்துறை நீதிவான் நீதிமன்றம் திங்கட்கிழமை (30) விசாரணையாளர்களுக்கு அனுமதித்த நிலையில் மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

கடந்த 27ஆம் திகதி தனது வீட்டில் இருந்து கோழி இறைச்சி கொள்வனவு செய்வதற்காக சுமார் 200 மீற்றர் தூரத்தில் உள்ள இறைச்சி கடைக்கு சென்றிருந்த போது பாத்திமா ஆய்ஷா எனும் சிறுமி காணாமல் போயிருந்தார்.

இதனையடுத்து பண்டாரகம பொலிஸ் நிலையத்திற்கு அன்றைய தினம் மாலை 04.16 மணிக்கு பெற்றோர் செய்த முறைப்பாட்டிற்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

அதன்படி சிறுமியை தேடும் நடவடிக்கைகள் 24 மணிநேரத்தை கடந்த நிலையில் கடந்த 28 ஆம் திகதி மாலை வேளையில் சிறுமியின் சடலம் சதுப்பு நில பகுதியில் இருந்து கண்டுப்பிடிக்கப்பட்டது.

சி.சி.டி.வியின் காட்சிகளை மையப்படுத்திய பகுப்பாய்வுகளை தொடர்ந்து சிறுமியின் வீட்டை அண்மித்த சதுப்பு நிலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட தேடுதலின் போது இவ்வாறு சடலம் கண்டுப்பிடிக்கப்பட்டது.

இந்நிலையில் ஸ்தலத்திற்கு வருகை தந்த பாணந்துறை மேலதிக நீதிவானின் உத்தரவிற்கமைய நேற்று (30) சிறுமியின் சடலம் மீதான பிரேத பரிசோதனைகள் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்றது.

நீதிமன்ற உத்தரவிற்கமைய சட்டவைத்திய நிபுணர்கள் மூவரை உள்ளடக்கிய சிறப்பு குழுவால் இந்த பிரேத பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.

முற்பகல் 09.30 மணிக்கு ஆரம்பித்த பிரேத பரிசோதனை நடவடிக்கைகள் சுமார் 04 மணிநேரம் நீடித்து பிற்பகல் 01.30 மணியளவில் நிறைவுற்றிருந்தது.

பிரேத பரிசோதனை பிரகாரம் சிறுமியின் மரணத்திற்கு வாய்,மூக்கு வழியே சேறு,நீர் என்பன உட்சென்று நுரையீரல் மற்றும் உடல் உள்ளுறுப்புக்களில் கலந்தமை பிரதான காரணம் என சட்ட வைத்திய அதிகாரிகள் குழாம் தீர்மானித்துள்ளது.

அது தொடர்பிலான அறிக்கையை சமர்ப்பித்துள்ள அந்த குழாம் சிறுமி பாலியல் வன்புணர்விற்கு உள்ளாகவில்லை என்பதை உறுதி செய்துள்ளதுடன்,சிறுமியின் உடலில் ஒரேயொரு காயத்தை மட்டும் அடையாளமிட்டுள்ளனர்.அது சிறுமியின் வாய் பகுதியில் அடையாளம் காணப்பட்ட காயம் என அறிக்கை ஊடாக அறிய முடிகிறது.

கடந்த 28 ஆம் திகதி சிறுமி ஆய்ஷாவின் சடலம் மீட்கப்பட்ட பின்னர் விசாரணைகள் மேலும் விரிவுப்படுத்தப்பட்டன.

அதன்படி பண்டாரகம பொலிஸ் நிலைய குழு களுத்துறை மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு,பாணந்துறை வலய குற்றத்தடுப்பு பிரிவு குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் மனித படுகொலைகள் தொடர்பிலான விசாரணை பிரிவு உள்ளிட்டவை இணைந்து இந்த விசாரணைகளை விரிவுப்படுத்தின. அதன்படி சுமார் 50 இற்கும் மேற்பட்ட வாக்குமூலங்கள் பதிவு செய்யபட்டன.

இந்நிலையில் சிறுமி கொலை செய்யப்பட்டதாக நம்பப்படும் இடத்தில் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகளை வெளிப்படுத்திய சிறுமியின் உறவினர் ஒருவர் தொடர்பில் களுத்துறை மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் பணிப்பாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் ரொஹான் ஒலுகல உள்ளிட்ட குழுவினர் விசேட அவதானத்தினை செலுத்தினர்.

அதன்படி குறித்த நபரை பொலிஸ் பொறுப்பில் எடுத்த அவர்கள் நீண்ட விசாரணைகளை முன்னெடுத்த போது சம்பவம் தொடர்பிலான பல விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

சிறுமியை தான் வன்புணர்விற்குட்படுத்த முயற்சித்ததாகவும், அந்த முயற்சி கைகூடவில்லை எனவும் சிறுமி விடயத்தை வெளியே கூறலாம் என்பதால் அவரை சதுப்பு நில சேற்றில் முகத்தை அமிழ்த்தி சிறுமியின் உடலின் முதுகுப்பகுதியில் தன் முழங்காலினால் ஊன்றி குறித்த குற்றத்தை தான் செய்ததாக சந்தேக நபர் பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் அதன் பின்னர் சதுப்பு நில பகுதியில் பதிவாகியிருந்த தனது காலடி தடங்களை அழித்து விட்டு சென்றதாகவும் சந்தேக நபர் பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 27ஆம் திகதி சிறுமி கோழி இறைச்சி வாங்குவதற்காக கடைக்கு சென்ற போது அவரை பள்ளிவாசல் அருகில் இருந்து சந்தேக நபர் பின்தொடர்ந்தமை தொடர்பிலும் விசாரணைகளில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

பின்னர் சிறுமி திரும்பும் வரை வீதியில் காத்திருந்து அவரை வன்புணர்விற்கு உட்படுத்தும் நோக்குடன் சதுப்பு நிலத்துடன் கூடிய காட்டுப்பகுதிக்கு இழுத்துச் சென்றமை குறித்தும் சந்தேக நபர் பொலிஸ் விசாரணைகளில் தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்நிலையிலேயே குறித்த கொலையை தான் செய்ததாகவும்,அவர் ஒப்புக் கொண்டதாக விசாரணையாளர்கள் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும் குறித்த சந்தேக நபர் சிறுமி திரும்பும் வரை காத்திருந்ததை உறுதி செய்யும் வகையில் சில வாக்குமூலங்கள் பொலிஸாரால் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது.

இதனையடுத்து சந்தேக நபரை கைது செய்த களுத்துறை மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் பிரேத பரிசோதனை அறிக்கையின் விடயங்களுடன் சந்தேக நபரின் வாக்குமூலம் ஒத்துபோவதை அவதானித்து மேலதிக விசாரணைக்காக அவரை தடுப்பு காவலில் வைக்க நீதிமன்றிடம் குற்றவியல் சட்ட நடைமுறையின் பிரகாரம் அனுமதி கோரினர்.

அதற்கு பாணந்துறை நீதிமன்றம் அனுமதியளித்த நிலையில் சந்தேக நபரிடம் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில் பிரேத பரிசோதனையின் பின்னர் சிறுமியின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் அவரது ஜனாஸா நல்லடக்கம் அட்டுலுகம பெரிய பள்ளிவாசல் மையவாடியில் 30 ஆம் திகதி இரவு நல்லடக்கம் செய்யப்பட்டது.

இதன்போது முழு ஊர் மக்களும் அங்கு திரண்டிருந்ததுடன், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் செயலாளர் ஜனாஸா தொழுகை,பிரார்த்தனையை நடத்தினார்.

Related Posts