Ad Widget

சிறுநீரக நோய்க்கெதிராக முற்கூட்டியே செயற்படுங்கள் – மருத்துவ நிபுணர் த.பேரானந்தராஜா

வடக்கில் ஆயிரம் பேர் வரையில் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிறுநீரக பாதிப்புக்குள்ளாகி சுமார் 600 பேர் வரையில் சிகிச்சை பெறுகின்றனர். அவர்களில் 120 பேர் வரையில் ரத்த சுத்திகரிப்புச் செய்யப்படுகின்றனர்.

வாரத்தில் 2 தடவைகள் ஒவ்வொரு வருக்கும் ரத்தச் சுத்திகரிப்புச் செய்ய வேண்டும். தவறின் ரத்தத்தில் கிருமித் தொற்று ஏற்பட்டு நோய் தீவிரமாகிவிடும் இவ்வாறு யாழ்.போதனா வைத்தியசாலைப் பொது மருத்துவ நிபுணர் த.பேரானந்தராஜா தெரிவித்தார்.

சிறுநீரகம் பாதிப்பு மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புக்கள், இறப்புக்களைத் தடுத்தல் தொடர்பான விழிப்பூட்டும் செயலமர்வு ஒன்று யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்று நடத்தப்பட்டது. அதில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“சிறுநீரை அடக்கி வைத்திருப்பதால் கிருமித் தொற்று ஏற்பட வாய்ப்பு அதிகம். எனவே சிறுநீர் வருவதனை உணர்ந்தால் உடனே கழித்து விடவேண்டும். பெண்கள் உள்ளிட்ட பலர் செல்லும் இடங்களில் சிறுநீர் கழிக்க வேண்டும் என்பதனால் தண்ணீர் குடிப்பது குறைவு.

நகர் உட்பட வைத்தியசாலையில் கூட மலசல வசதிகள் போதியதாக, உரிய சுகாதாரமாக இல்லாததே அதற்குக் காரணம். மலசல கூடங்கள் சுத்தமாக இருக்க வேண்டும்.

பாடசாலைகளில்கூட ஆசிரியர்களின் மலசலகூடம் தவிர மாணவர்களின் மலசல கூடங்கள் சுகாதார சீர்கேடாகவே உள்ளன. அந்த நிலை மாறவேண்டும்.” என்று தெரிவித்தார்.

“ரத்த சுத்திகரிப்புக்கு கிளிநொச்சி உள்ளிட்ட பல இடங்களிலிருந்தும் பலர் போதனா வைத்தியசாலைக்கு வந்து செல்கின்றனர். அதனால் போக்குவரத்துக்கு அதிக பணம் செலவழிக்க வேண்டியுள்ளது. ரத்தம் சுத்திகரிக்கும் இயந்திரம் ஒன்றின் பெறுமதி 22 லட்சம் ரூபா.

அவ்வாறு 10 இயந்திரங்கள் போதனாவில் உள்ளன. வவுனியாவில் 4 இயந்திரங்கள் உள்ளன. ஒருவருக்கு ரத்த சத்திகரிப்புச் செய்ய 4 மணித்தியாலங்கள் தேவைப்படுகிறது.

நாளாந்தம் அது நடந்து கொண்டிருக்கிறது. அதனைச் செய் வதற்குக்கூட போதனாவில் தாதியருக்குப் பற்றாக்குறை நிலவுகிறது. எனவே இயன்றளவு சிறுநீரக நோய் ஏற்படாமல் இருப்பதற்கான அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றுங்கள்.

முக்கியமாக உப்பு, சீனி என்பனவற்றின் பாவனையைக் குறையுங்கள். நாளாந்தம் உடற்பயிற்சி செய்யுங்கள்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts