Ad Widget

சிம்பாபே அணியை இலகுவாக வீழ்த்திய இலங்கை

சிம்பாபேவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி ஏழு விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

காலி சர்வதேச விளையாட்டரங்கில் இடம்பெற்ற இந்தப் போட்டியில், நாணய சுழற்சியை வசப்படுத்திய இலங்கை அணி, சிம்பாபேவை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.

இதற்கமைய, களமிறங்கிய அந்த அணி 33.4 ஓவர்களுக்கு மட்டுமே தாக்குப் பிடித்து, 155 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்தது.

மேலும், சிம்பாபே அணிக்காக ஆரம்ப துடுப்பாட்ட வீரர் Hamilton Masakadza அதிகபட்சமாக 41 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.

இதேவேளை, இலங்கை அணி சார்பாக அபாரமாக பந்து வீசிய லக்‌ஷான் சன்டகன் நான்கு விக்கெட்டுக்களை சாய்த்ததோடு, வனிது ஹஸரங்கா மூன்று விக்கெட்டுக்களை ஹெட்ரிக் முறையில் வரிசையாக வீழ்த்தினார்.

இதனையடுத்து, 156 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற இலகுவான இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணிக்கு, ஆரம்ப வீரரான நிரோஷன் திக்வெல்ல 35 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.

அத்துடன் மற்றுமொரு ஆரம்ப வீரரான தனுஷ்க குணதிலக்க 8 ஓட்டங்களுடனும் குஷல் மென்டிஸ் ஓட்டம் எதுவும் பெறாத நிலையிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.

எனினும், அடுத்ததாக களமிறங்கிய உப்புல் தரங்க மற்றும் மெத்தியூஸ் ஆகிய இருவரும் நிதானமாக ஆடினர்.

குறிப்பாக தரங்க 75 ஓட்டங்களை விளாசி அணியை வெற்றிப் பாதைக்கு இட்டுச் சென்றார்.

இதன்படி 30.1 ஓவர்களை மட்டுமே எதிர்கொண்டு 3 விக்கெட் இழப்பிற்கு 158 ஓட்டங்களை விளாசிய இலங்கை அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றிவாகை சூடியுள்ளது.

எனவே ஐந்து போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடர் 1-1 என தற்போது சமநிலையில் உள்ளது.

Related Posts