Ad Widget

சிங்கள ஆட்சியாளர்கள் சீனர்களை நம்பும் அளவிற்கு தமிழர்களை நம்புவதில்லை -சி.வி.விக்னேஸ்வரன்

பொருளாதார நெருக்கடி நிலையில் இருந்து நாடு மீளவேண்டும் என்றால் சிங்களவர்களும் தமிழர்களும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

நாடாளுமன்றில் நேற்று (செவ்வாய்க்கிழமை) உரையாற்றிய அவர், சிங்கள மக்கள் தமிழ், முஸ்லிம் மக்களுடன் ஒன்றிணைந்து நாட்டை மீட்டெடுக்க இதுவே சரியான நேரம் எனக் கூறினார்.

ஆனால் சிங்கள ஆட்சியாளர்கள் சீனர்களை நம்பும் அளவிற்கு தமிழர்களையும் முஸ்லிம்களையும் நம்பவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த நடவடிக்கையே இன்று நாடு நெருக்கடிக்குள் தள்ளப்பட பிரதான காரணமாக அமைந்தது என்றும் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்த்து, முதலீடுகளை நாட்டுக்குள் கொண்டுவந்து புலம்பெயர் மக்களின் ஒத்துழைப்புகளை பெற்றுக்கொள்ள சிங்கள மக்கள் முன்வர வேண்டும் என கூறினார்.

நெருக்கடி நிலைமையில் இருந்து மீள்வதற்கு கைகொடுக்க தமிழர்கள் தயாராகவே உள்ளனர் என்பதை அரசாங்கத்திற்கும் சிங்கள மக்களுக்கும் கூறிக்கொள்ள விரும்புவதாக சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.

Related Posts