Ad Widget

சாவகச்சேரி மேதினத்தில் ஒன்றுகூட அவைத் தலைவர் சிவஞானம் அழைப்பு

சாவகச்சேரி மேதின நிகழ்வில் பங்குகொண்டு ஒற்றுமையை மீளவும் வலியுறுத்துமாறு வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் தனது மேதினச் செய்தி மூலம் அழைப்பு விடுத்திருக்கின்றார்.

அச்செய்தியில் அவர் குறிப்பிட்டுள்ளவை வருமாறு:-

உலகெங்கிலும் வாழும் உழைக்கும் மக்கள் யாவரும் தத்தமது உரிமைகளை வென்றெடுக்கவும் நிலைநாட்டவும் கூட்டாகத் தீர்மானிக்கும் நாளாகவே ஒவ்வொரு வருடமும் மே முதல் நாளை உழைப்பாளர் தினமாகக் கைக்கொண்டு வருகிறார்கள். முதலாளித்துவ நாடான அமெரிக்காவில் உருவாக்கப்பட்டாலும் உலகின் சமதர்மநாடுகள் பலவற்றிலும் பின்பற்றப்படும் தொழிலாளர் தினமாக இத்தினம் திகழ்கிறது. திறந்த உலகப் பொருளாதார அமைப்புக் காரணமாக தொழிற்சங்கங்களின் முக்கியத்துவம் சற்றுக் குறைவடைந்து காணப்பட்டாலும் உழைப்பாளர் தினத்தின் முக்கியத்துவம் குறைவடையவேயில்லை.

வடக்கு மாகாண சபையைப் பொறுத்தவரை இது நாம் பதவிக்கு வந்தபின்பு நிகழும் முதலாவது மே முதல் நாளாகும். அரசியல் ரீதியாக ஒடுக்கப்பட்டதும் மற்றும் எல்லா உரிமைகளும் மறுக்கப்பட்டதுமான தமிழ்த்தேசிய இனத்துக்காகக் குரல் கொடுக்கும் தளமாக எமது மாகாண சபை உள்ளது. தமிழினத்தைப் பொறுத்தவரை எமது சனத்தொகையில் தொண்ணூற்றொன்பது வீதமான மக்கள் உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்தவர்களே. ஆகவே உழைக்கும் வர்க்கத்தினராகிய நாம் எம் மீது திணிக்கப்பட்டிருக்கும் பாரபட்சம், பாகுபாடு, அடக்குமுறை என்பவற்றிற்கு எதிராகக் குரல் கொடுக்கவேண்டிய கட்டாயத் தேவையிலுள்ளோம். எனவே மேதின நாளில் சாவகச்சேரியில் நடைபெறவுள்ள மேதினப் பேரணியிலும் கூட்டத்திலும் எல்லோரும் கலந்துகொண்டு எமது உரிமைப் போராட்டத்திற்கான ஒற்றுமையை மீளவும் வலியுறுத்த ஒன்று சேரும்படி எல்லோரையும் வேண்டுகிறோம்.

– என்று அவ்செய்திக்குறிப்பில் உள்ளது.

Related Posts