Ad Widget

சர்வாதிகாரச் சட்டமே திவிநெகும – தமிழ்க் கூட்டமைப்பு கண்டணம்

tna-e-jaffnaமாகாணசபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள பிரதான 15 அதிகாரங்கள் “திவிநெகும’ சட்டத்தின் மூலம் பலவந்தமாகப் பறிக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்த தமிழ்க் கூட்டமைப்பு, தமிழர்களை அடிமைப்படுத்தும் சர்வாதிகாரச் சட்டமே இது என்றும் மாகாண அதிகாரங்களை பறித்தெடுக்கின்ற இந்தச் சட்டவரைவின் மூலம் தமிழ் மக்களை வாழ்நாள் முழுவதும் ஏமாற்றி அவர்களை அழித்துவிட அரசு திட்டம் தீட்டி விட்டது என்றும் தெரிவித்தது.

நாடாளுமன்றில் நேற்று நடைபெற்ற “திவிநெகும’ திருத்தச்சட்டவரைவின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் போதே தமிழ்க் கூட்டமைப்பு மேற்கண்டவாறு தெரிவித்தது.
அதிகூடிய அதிகாரப் பகிர்வை அளிப்போம். 13 ஆவது திருத்தச் சட்டத்துக்கும் அப்பால்சென்று அதிகாரப்பகிர்வை அர்த்தபுஷ்டியாக்குவோம் என்று கூறிய ஜனாதிபதியின் கொள்கைகளுக்கு எதிராகவே இந்த “திவிநெகும சட்டவரைவு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றும் கூட்டமைப்பு தெரிவித்தது.
இதன்போது கூட்டமைப்பு உறுப்பினர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன், எம்.சுமந்திரன் ஆகியோர் கடும் குற்றச்சாட்டுக்களை அள்ளி வீசினர்.
சுமந்திரன் தெரிவித்தவை வருமாறு
இன்று சமுர்த்தி உத்தியோகத்தர்களை சபைக்கு அழைத்துவந்து நாம் அவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படுவதை எதிர்ப்பதுபோல் காட்ட முனைகின்றனர்.
சமுர்த்தி உத்தியோகத்தர்களை ஓய்வூதியம் பெறக்கூடிய அரச ஊழியர்களாக உள்வாங்கப்படுவதை நாங்கள் ஆதரிக்கின்றோம். இதனை ஒரு சாதாரண சட்டத்தின் மூலம் செய்திருக்க முடியும்தானே. ஏன் அதை இனிப்பை பூசிய கசப்பான திவிநெகும சட்டத்தின் மூலம் செய்யவேண்டும்.
13ஆவது திருத்தச் சட்டம் வெறும் எழுத்திலான அரைகுறைச்சட்டம். அச் சட்டம்  அரைகுறையாகவேனும் மாகாணசபைகளுக்கு அதிகாரங்களை வழங்கியுள்ளது. அப்படி வழங்கியுள்ள அதிகாரங்களில் 15 விடயங்களை திவிநெகும சட்டம் பலவந்தமாகப் பறித்துள்ளது.
நாட்டின் அபிவிருத்தியினையையும், வறுமை ஒழிப்பினையும் மாகாணசபைகள் மூலம் செய்யக்கூடாதா? அதற்கு ஏன் தடைபோடுகின்றீர்கள்?
திவிநெகும சட்ட வரைவு தொடர்பாக உயர்நீதிமன்றம் இரண்டு தீர்வுகளை வழங்கியுள்ளது. அமைச்சர் டக்ளஸ் இரண்டு நாட்களும் கோர்ட்டில் வந்து அமர்ந்திருந்தார்.
அவருக்கு என்ன விளங்கியதோ தெரியவில்லை. இங்கு வந்து யாரோ எழுதிக்கொடுத்ததை அப்படியே வாசிக்கின்றார். சட்டம் தொடர்பாக பேசாமல் தமிழ்க் கூட்டமைப்பின் மீது வசைப்பாடுகிறார்.
நாம் எமது அபிலாஷைகள் தொடர்பாக பேசுகின்றோம். அரசியல் அதிகாரம் பகிரப்படவேண்டும். நாமும் எமது பிரதேசங்களில் ஏனைய சமூகங்களைப் போன்று சமனான அரசியல் அதிகாரங்களுடன் வாழ விரும்புகின்றோம். இது தவறில்லையே.
நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் 18ஆவது அரசமைப்புக்கு ஆரதவளித்து அமைச்சரான போது இந்தச் சபையில் கூறியதை நினைவுபடுத்த விரும்புகின்றேன்.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அரசுக்கு வெளியே இருந்தும் முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் இருந்தும் அதிகாரப் பகிர்வை பெற முயற்சிப்போம் என்று கூறினார். இன்று இவருடைய நிலைப்பாடு என்ன என்பதை அறிய விரும்புகின்றேன்.
திவிநெகும சட்டமூலத்தை தனிப்பட்ட முறையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டும் எதிர்க்கவில்லை. பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த பல புத்திஜீவிகள் கையெழுத்திட்டு அனுப்பியுள்ள கடிதம் ஆங்கிலப் பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன.
எம்மை விமர்சிக்கும் அமைச்சர், யாரைக் கொண்டாவது அதனை வாசித்து தெளிவுபெற வேண்டும் என்றார் சுமந்திரன்.
அப்போது பிரதியமைச்சர் முரளிதரன் ஏதோ கூறினார்.
உங்களுக்கு எதுவுமே தெரியாது அமைச்சர் பதவியை காப்பாற்றிக் கொள்வதற்கு சும்மா கொக்கரிக்க வேண்டாம் என்று பதிலடிகொடுத்தார் சுமந்திரன்.
இதுதொடர்பில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச் சந்திரன் தெரிவித்தவை வருமாறு:
15 இற்கு மேற்பட்ட மாகாண அதிகாரங்களை இந்த “திவிநெகும’ அபிவிருத்திச் சட்டமூலமானது பறித்தெடுக்கின்றது. ஆகவேதான் இச்சட்டமூலம் தவறானது என்று கூறுகின்றோம். மாகாண அதிகாரங்களைப் பறித்தெடுக்கின்றதென்ற அடிப்படையில், உயர் நீதிமன்றில் இச்சட்டமூலத்துக்கெதிரான வழக்கொன்றை நாங்கள் தாக்கல் செய்தோம். உயர் நீதிமன்றமும் இதனை ஏற்றுக்கொண்டது.
எனவே, இதனை சட்டமாக்கவேண்டுமென்றால், சகல மாகாண சபைகளதும் ஒப்புதலைப் பெறவேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது. அரசின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள 8 மாகாண சபைகள் இதனை ஆதரித்தன. வட மாகாணத்தில் மாகாண சபை இன்மையால் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆளுநர் ஒப்புதல் வழங்கமுடியாது என்பதையும் உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.
இதன்பிரகாரம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் இதனை நிறைவேற்றி, வட மாகாணத்திலும் இதனைத் திணிக்க நீங்கள் விரும்புகின்றீர்கள் என்பதுதான் உண்மை.
தென்பகுதியில் என்ன சட்டத்தையும் கொண்டுவந்து என்னவாவது செய்து கொள்ளுங்கள்.
ஆனால் வடக்கு, கிழக்கில் தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசத்தில் அவர்களது அபிவிருத்தியை அவர்கள் தீர்மானிக்க, அவர்கள் செயற்பட அனுமதியுங்கள்.
இறுதியாக இச்சட்ட மூலங்களை இந்த நாட்டின் ஒட்டு மொத்த மக்களையும் அடிமைப்படுத்தும் சர்வாதிகாரத் தனமான சட்டம் என்பதுடன், மிகப் பெரியளவில் அதிக துஷ்பிரயோகங்களையும், ஊழல், மோசடிகளையும் உருவாக்கக் கூடிய சட்டம் என்பதால், ஜனநாயக பூர்வமாகச் சிந்திக்கக் கூடியோர் இதனை எதிர்க்க வேண்டும்  என்றார்.

Related Posts