Ad Widget

சர்வதேச விசாரணையென்பது ஜெனீவா கூட்டத்தொடரில் இல்லை – குருபரன்

geneva-human-rights-council1ஜெனிவா கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை வேண்டுமென்ற நிலைப்பாட்டினை எடுக்கவில்லை என சட்டத்தரணியும் தமிழ் சிவில் அவையத்தின் உறுப்பினருமான கு.குருபரன் நேற்று (04) தெரிவித்தார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று (04) ஜெனிவா கூட்டத் தொடர் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது. இதன்போது, ஜெனிவா கூட்டத் தொடரில் வெளியிடப்பட்ட நகல் தீர்மானம் குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

‘தமிழர்களைப் பொறுத்தவரையில் இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை நடக்குமென்ற எதிர்பார்ப்புடன் இருக்கின்றார்கள். ஆனால், நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஜெனீவா கூட்டத் தொடரில் வெளியிடப்பட்ட ‘தீர்மான நகல் வரைபில்’ இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை வேண்டுமென்ற தீர்மானம் எள்ளளவு கூட இடம்பெறவில்லையெனச் சுட்டிக்காட்டினார்.

இங்கு நடைபெற்ற போர்க்குற்றங்களை விசாரணை மேற்கொள்வதற்கான பொறிமுறையானது இலங்கை அரசாங்கத்திடம் இல்லை. அத்துடன், அதற்கான ஏதுநிலை கூட இல்லை.

கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த ஜெனீவா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை, வன்னி மக்களை சந்தித்த போது, மக்களுக்கான பொறுப்புக்கூறல் நடைபெறாவிட்டால் அரசின் மீதான நம்பிக்கைத் தன்மை தொடர்ச்சியாக குறைந்து விடுமென்று சுட்டிக்காட்டியிருந்தார்.

அந்தவகையில், தமிழ் மக்களின் சார்பாக ஜெனீவாவிற்கு பயணம் செய்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள், தமிழ் மக்களின் பிரச்சினைகளை எடுத்துக் கூற வேண்டும்.

சர்வதேச விசாரணை வேண்டுமென்று மக்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றார்கள். அதனால், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணைகள் இலங்கையில் இடம்பெறவேண்டுமென்றே வலியுறுத்துவதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.

இலங்கை அரசாங்கம் தன்னைத் தானே விசாரணை மேற்கொள்வதற்கான நிலைமையினையே உருவாக்கியுள்ளதாகவும், அந்த விசாரணை நடக்குமென்பதில் சமூகம் நம்பிக்கை இழந்துள்ளதாகவும் குறிப்பிட்டதுடன், ஜெனீவா கூட்டத் தொடரில் என்ன நடக்கின்றது? என மக்களுக்கு சொல்ல வேண்டுமென்றும் அவர் கூறினார்.

சர்வதேச விசாரணை நடக்க வேண்டுமென்றால் சில விடயங்களை நகர்த்தி ஆக வேண்டும். ஜெனீவா கூட்டத் தொடரில் சர்வதேச விசாரணை வேண்டுமென்ற நிலைப்பாட்டினை எடுக்கவில்லை.

அரசு தன்னைத் தானே விசாரணை என்ற நிலையினை எடுத்துள்ளதாகவும், அத்துடன், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணை வேண்டுமென்பதுடன், ஒருமித்த நாட்டிற்குள் நிலைமாறும் நிலைப்பாட்டினை ஜெனீவா கூட்டத் தொடரில் கதைக்கவில்லை. தமிழ் மக்களின் சார்பாக சென்றுள்ளவர்கள் தமிழ் தரப்பு எண்ணத்தினை வெளிப்படுத்த வேண்டுமென்று தீர்மானிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Related Posts