Ad Widget

சர்வதேச நீதித்துறையின் பங்களிப்புக்கு இலங்கையில் இடமேயில்லை! ஐ.நா. ஆணையாளரின் அறிக்கைக்கு அரசு பதில்

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணையில் சர்வதேசத்தின் பங்களிப்பை நிராகரிக்கும் அரசு, உள்நாட்டு நீதிக் கட்டமைப்பின் அடிப்படையிலேயே விசாரணைகளை முன்னெடுக்கும் என்றும், இது தொடர்பான தமது முன்னைய நிலைப்பாட்டில் மாற்றமில்லை என்றும் உறுதியாகக் குறிப்பிட்டது.

இலங்கை மீது குற்றச்சாட்டுக்களைச் முன்வைக்கலாம். ஆனால், இலங்கையின் நீதித்துறையை சவாலுக்குட்படுத்தும் சட்டரீதியான முறைமை சர்வதேசத்திற்கு இல்லை என்றும் அரசு தெரிவித்தது.

அரச தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போதே பிரதி அமைச்சர் கருணாரட்ன பரணவிதாரண, இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க ஆகியோர் மேற்படிக் கருத்துக்களை முன்வைத்தனர்.

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து பொறுப்புக்கூறும் பொறிமுறையில் சர்வதேசத்தின் பங்களிப்பு உள்வாங்கப்படவேண்டும் என ஐ.நா. மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் செயிட் அல் – ஹுசைன், இலங்கை தொர்பான தனது வாய்மூல அறிக்கையில் வலியுத்தியுள்ளார். இதுகுறித்து அரசின் நிலைப்பாடு என்ன? என்ற கேள்விக்கு பிரதி அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன பதிலளிக்கும்போது,

“ஏன் எமது நீதித்துறைக் கட்டமைப்பில் பிரச்சினை இல்லையே? இலங்கையின் நீதித்துறை சுயாதீனமானதில்லை என எவரும் கூறமுடியாது” – என்றார்.

இதனிடையே குறுக்கிட்டு பதிலளித்த பிரதி அமைச்சர் கருணாரட்ன பரணவிதாரண,

“இலங்கையின் நீதித்துறை சுயாதீனம் குறித்து கடந்த காலங்களில் கேள்வி எழுப்பப்பட்டது. இதன்போதுதான் குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது. இப்போது அவ்வாறான நிலைமை இல்லை. நீதித்துறை சுயாதீனமாக உள்ளது. இவ்வாறான நிலையில் புலம்பெயர் தமிழர்கள்தான் இலங்கையின் நீதித்துறை சுயாதீனமில்லை எனக் கூறி வருகின்றனர். அவர்களின் கருத்துடன் நாம் இணங்க முடியாது. எமது நீதித்துறையின் கீழ் விசாரணைகளை முன்னெடுப்பதே அரசின் நிலைப்பாடாகும். நாட்டின் மனித உரிமை நிலைமைகள் குறித்து தற்போது வெளியாகிவரும் அறிக்கைகள் சாதகமானதாகவே காணப்படுகின்றது” – என்றார்.

கேள்வி:- குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தரப்பினரே விசாரணை மேற்கொள்ளக்கூடாது என்ற காரணத்தின் அடிப்படையிலும்தானே சர்வதேசத்தின் பங்களிப்பு வலியுறுத்தப்படுகின்றது?

பதில்:- இலங்கை சுயாதீன இராஜ்ஜியம். இங்கு அரசியல் பிரச்சினை உருவாகியுள்ளது. அன்று இருந்த அரசு இன்று இல்லை. இலங்கை அரசு ஜனநாயகமானது. ஜனநாயக அரசின் அடிப்படைத்தன்மைதான், தவறைத் திருத்திக் கொண்டு முன்னோக்கிச் செல்வதற்கு இடமளிப்பது. இலங்கையின் நீதித்துறை தொடர்பில் பிரச்சினை இருக்குமாயின், இலங்கையின் நீதித்துறை சுயாதீனமாக்கப்பட்டுள்ளது. அந்த நிலைப்பாட்டில் இருந்துகொண்டு நாம் முன்னோக்கிச் செல்லவேண்டும் என்பதே தற்போதைய அரசின் நிலைப்பாடாகும். ஆணையாளரின் அறிவிப்பு தொடர்பான விடயங்கள் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு முன்வைக்கப்படும். அதற்கிடையில், வெளிநாட்டு நீதிமன்றம் கொண்டுவரப்படும். அது, இது என்று இங்கிருந்து என்னால் குறிப்பிட முடியாது. இதற்கு முன்னர் எவ்வாறான நிலைப்பாட்டில் இருந்ததோ அந்த நிலைப்பாட்டிலேயே அரசு தற்போதும் இருக்கின்றது.

கேள்வி:- முன்னாள் ஜனாதிபதியையும், பாதுகாப்புத் தரப்பினரையும், சர்வதேச நீதிமன்றம், மின்சாரக் கதிரை போன்றவற்றிலிருந்து பாதுகாத்துவிட்டதாக ஜனாதிபதியும், அரசும் கூறுகின்றது. குற்றச்சாட்டு இருப்பதனால்தானே இவ்வாறான கருத்து முன்வைக்கப்படுகின்றது?

பதில்:- அப்படி இல்லையே. அது அவர்கள் நெஞ்சில் அடித்துக் கொண்டு கூறிய விடயம்தானே. என்னை (ஜனாதிபதியாக) நியமியுங்கள். இல்லாவிட்டால் மின்சாரக் கதிரைக்கு கொண்டுசெல்வார்கள் எனக் கூறினர். மின்சாரக் கதிரை இல்லையே.

கேள்வி:- குற்றச்சாட்டு இருப்பதன் காரணமாகத்தானே அவர்களும் (முன்னைய அரசு) மின்சாரக் கதிரை என்ற பேச்சை ஆரம்பித்தனர்?

இதற்கு இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க பதிலளிக்கும்போது,

“குற்றச்சாட்டு இருக்கலாம். ஆனால், சர்வதேசம் எமது நீதித்துறையை சவாலுக்குட்படுத்தும் வகையில் சட்டரீதியான முறைமை இல்லை. எவருக்கு எதிராகவும் குற்றம் சுமத்தலாம். ரணில் விக்கிரமசிங்க ரோம் உடன்படிக்கையில் கைச்சாத்திடாததன் காரணமாக விசாரணைகளை நடத்த முடியாது. கைச்சாத்திட்டிருந்தால் குற்றச்சாட்டல்ல. எந்த விடயம் தொடர்பிலும் சட்டரீதியிலான விடயங்களை ஆரம்பிக்க வாய்ப்பிருந்தது.

Related Posts