Ad Widget

சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்கள் 10 நாட்களுக்கு முன்னர் வரவழைக்கப்படுவர்

elections-secretariatநடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தலை முன்னிட்டு சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்கள் 10 நாட்களுக்கு முன்னர் வரவழைக்கப்படுவர் என தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தேர்தல்கள் திணைக்களத்தின் நேரடி அழைப்பின் பேரில் தெற்காசிய தேர்தல் முகாமைத்துவ அமைப்பிலிருந்து 17 பேரும் பொதுநலவாய அமைப்பிலிருந்து விசேட பிரதிநிதிகள் குழுவொன்றுமாக தேர்தல் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடவுள்ளனர்.

தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய ஏற்கனவே தெற்காசிய தேர்தல் முகாமைத்துவ அமைப்பு மற்றும் பொதுநலவாய அமைப்புகளிடம் விடுத்த வேண்டுகோளுக்கமைய அதன் பிரதிநிதிகள் உரிய நேரத்தில் இலங்கை வருவதனை உறுதி செய்திருப்பதாகவும் அதன் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

அதன்படி தெற்காசிய தேர்தல் முகாமைத்துவ அமைப்பிலிருந்து விசேட பிரதிநிதியொருவரின் தலைமையின் கீழ் இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து மூன்று கண்காணிப்பாளர்கள் வீதமும் பூட்டான், மாலைதீவு, நேபாளம் ஆகிய நாடுகளிலிருந்து தலா இரு கண்காணிப்பாளர்களும் ஆப்கானிஸ்தானிலிருந்து ஒருவருமாக 17 பேர் இலங்கை வரவிருப்பதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, பெப்ரல் அமைப்பின் அழைப்பின் பேரில் நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான தெற்காசிய வலையமைப்பிலிருந்து எட்டு சர்வதேச கண்காணிப்பாளர்கள் இலங்கை வருவது உறுதியெனவும் தேவையேற்படின் இதன் எண்ணிக்கை பின்னர் அதிகரிக்கப்படுமெனவும் அதன் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

இவர்கள் தாய்லாந்து, ஜப்பான், பங்களாதேஷ், பிலிப்பைன்ஸ், நேபாளம் மற்றும் இந்தோனேஷியா ஆகிய நாடுகளிலிருந்து இலங்கை வரவுள்ளனர்.

சுமார் 25 வருடங்களுக்குப் பிறகு நடைபெறவுள்ள வட மாகாண சபைத் தேர்தலே சர்வதேசத்தினரின் ஒரே குறியாக இருப்பதனால் வேட்பாளர்களினதும் வாக்காளர்களினதும் நம்பிக்கையை உறுதிப்படுத்தும் வகையில் தாங்கள் வரவழைக்கும் சர்வதேச கண்காணிப்பாளர்கள் அனைவரையும் வட மாகாணத்திலேயே கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்படுவரெனவும் ரோஹண தெரிவித்துள்ளார்.

பொதுவாக மாகாண சபைத் தேர்தலுக்காக சர்வதேச கண்காணிப்பாளர்களை நாம் வரவழைப்பது இல்லை. இருப்பினும் வடமாகாண சபைத் தேர்தல் இலங்கை அரசியல் வரலாற்றில் ஒரு திருப்பு முனையென்பதனால் இதனை நீதியாகவும் சுதந்திரமாகவும் நடத்த கூடுதல் முயற்சிகளை முன்னெடுக்கிறோமெனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Related Posts