Ad Widget

சர்ச்சைக்குரிய மே தின உரை, முதலமைச்சர் விளக்கம்

Vickசாவகச்சேரியில் வியாழக்கிழமை நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் தான் ஆற்றிய உரை தொடர்பில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் விளக்கமளித்துள்ளார்.

மே தினக் கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர், ‘எமது ஜனாதிபதியின் ஜனாதிபதி வாழ்க்கை எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது ஒரு கேள்விக்குறி. இரண்டாவது அவரின் எண்ணங்களைக் கொண்டவர்களே இனிவரும் அரசாங்கத்தில் தொடர்ந்தும் பதவியில் இருப்பார்கள் என்பது என்ன நிச்சயம்.

ஒரு காலத்தில் பிரபாகரனும் கேட்பார் இன்றி அதிகாரத்தில் இருந்தார். அதை ஜனாதிபதி அறியாதவர் அல்ல. அப்படியாயிருந்தும் இப்பேர்ப்பட்ட சவாலான கருத்துக்களை ஏன் அவர் முன் மொழிகின்றார் என்று எண்ணிப் பரிதாபப்பட்டேன்’ என்று கூறியிருந்தார்.

இந்த உரை தொடர்பில் தற்போது சர்ச்சை எழுந்துள்ள நிலையில், அவர் தனது உரை தொடர்பான விளக்கத்தினை அறிக்கையாக வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

‘அலெக்சாண்டர் ஒரு மகாவீரன். அதற்காக அவன் அதிகாரங்கள் அனைத்தையும் தன்வசம் வைத்திருக்கவில்லை என்று கூற முடியாது. பிரபாகரன் ஒரு மகாவீரன் என்று முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா கூட அண்மையில் கூறியிருந்தார். அதற்காக அவர் அதிகாரங்கள் அனைத்தையும் தன்வசம் வைத்திருக்கவில்லை என்று கூற முடியாது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அரசியலமைப்பின் 18ஆவது திருத்தச் சட்டத்தின் பின் அதிகாரங்கள் அனைத்தையும் தன்வசமே வைத்திருக்கின்றார். இன்று கேட்பாரின்றி அதிகாரத்தில் இருக்கின்றார். இவை எவ்வளவு காலத்திற்கு என்பதைப் பற்றி ஜனாதிபதி சிந்திக்க வேண்டும் என்றே எனது உரையில் கூறினேன்.

தங்கை அனந்தி சசிதரன் (வடமாகாண சபை உறுப்பினர்), நான் கூறியதன் அர்த்தம் புரியவில்லை என்றும் ஆனால் முதலமைச்சர் காரணமில்லாமல் எதுவும் கூறியிருக்கமாட்டார் என்றும் கூறியதாக அறிந்தேன். அப்படி அவர் கூறியிருந்தால் அவருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

மேலும் நான் பேச்சு முடிந்து மண்டபத்தில் இருந்து வெளியே வந்தபோது எவருமே என்னை அணுகி எதுவும் கேட்கவில்லை, கேட்க எத்தணிக்கவும் இல்லை. எல்லோரும் வழக்கம் போல் கைகூப்பி வணக்கம் தெரிவித்தே என்னை வழியனுப்பினார்கள்’ என முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டிருந்தது.

மே தின உரையை முடித்துக்கொண்டு வெளியேறிய முதலமைச்சரிடம், ‘தேர்தலுக்கு முன் மாவீரன், தேர்தலுக்கு பின் சர்வாதிகாரியா?’ என பொதுமகன் ஒருவர் முதலமைச்சரினைப் பார்த்து கேள்வி எழுப்பியதாக யாழிலிருந்து வெளியாகின்ற ஊடகமொன்றில் செய்தி வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி

ஒரு காலத்தில் பிரபாகரனும் கேட்பார் இன்றிக் கோலோச்சினார். அதை ஜனாதிபதி அறியாதவர் அல்ல! – மே தினப் பேரணியில் முதல்வர்

Related Posts