Ad Widget

சர்ச்சைக்குரிய கட்டுவன் – மயிலிட்டி வீதி – கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ள இராணுவம்!

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு செல்லும் வீதியில் இராணுவத்தினரின் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் இருக்கும் 400 மீற்றர் நீளமான வீதிவிடுவிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் , குறித்த பகுதியில் இராணுவத்தினரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு , கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

விமான நிலையத்திற்கு செல்லும் கட்டுவன் – மயிலிட்டி வீதியில் 400 மீற்றர் நீளமான வீதி இராணுவத்தினரின் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் கடந்த 32 வருடங்களுக்கு மேலாக காணப்படுகிறது.

குறித்த 400 மீற்றர் நீளமான வீதியினை விடுவிக்க பல்வேறு கால கட்டங்களில் , பல்வேறு தரப்பினரும் முயற்சிகளை முன்னெடுத்து வந்திருந்தனர்.

அந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 7ஆம் திகதி ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற பாதுகாப்பு ஆலோசனை கூட்டத்தில் , குறித்த வீதி விடுவிப்பு விடயம் தொடர்பில் ஆராயுமாறு இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாக்கு உத்தரவிட்டு இருந்தார்.

அதனை குறித்த வீதியினை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறி , தனியார் காணிகளை ஆக்கிரமித்து அதனூடாக வீதி அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. அது தொடர்பில் அரசியல்வாதிகள் பலரும் கருத்து தெரிவித்து உள்ளனர்.

இதேவேளை “1990 ஆம் ஆண்டு இடம்பெயர்வுக்கு முன்னர் இருந்த வீதியை போல தற்போது முழுமையாக விடுவிப்பதுக்கு 25 மீற்றர் பின்நகர்த்தவேண்டும் என ஒருசிலர் கூறுகின்றனர்.

ஆனால் தேசிய பாதுகாப்பை கருத்தில் கொண்டால் தற்போதைய நிலையில் இதற்கு சாத்தியமில்லாத தன்மையே அங்கு காணப்படுகின்றது.

அதாவது, கட்டுவன் – மயிலிட்டி வீதியின் 400 மீற்றர் சர்ச்சைக்குள்ள பகுதியின் கிழக்கு புறமாக இராணுவ உயர் பாதுகாப்பு வலய முட்கம்பி வேலி உள்ளது.

அதற்கு பின்புறமாக விமானப்படையின் முட்கம்பி வேலி உள்ளது. அதற்கு பின்னால் விமான நிலையத்தின் சுற்று மண் அணை உள்ளது. இவ்வாறான நிலையில் 25 மீற்றர் தூரத்துக்கு வேலியை பின்நகர்த்துவதாயின் விமான நிலைய மண் அணை உள்ள பகுதியிலேயே வேலி நகர்த்த வேண்டும்.

தேசிய பாதுகாப்பு தொடர்பான கரிசனையின் அடிப்படையில் இவ்விடயம் சாத்தியப்படாத நிலையில், தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் 6 மீற்றர் வரை பாதுகாப்பு வேலியை பின்நகர்த்த முடிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது ” என யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தனது உத்தியோகபூர்வ முகநூலில் பதிவிட்டுள்ளார்.

அந்நிலையில் விடுவிக்கப்படுவதாக கூறப்படும் 400 மீற்றர் நீளமான வீதி தொடர்பில் சர்ச்சைகள் கிளம்பியுள்ள நிலையில் , குறித்த பகுதியில் வீதி அமைக்கும் பணிகளுக்கான செப்பனிடல் பணிகளை இராணுவத்தினரின் பொறியியல் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த பகுதியின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ள நிலையில் அப்பகுதிக்கு செல்வோரை இராணுவத்தினர் ,இராணுவ புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொள்கின்றனர்.

அத்துடன் புலனாய்வு பிரிவினர் அங்கு செல்வோரின் வாகன இலக்கங்கள் , உள்ளிட்டவற்றை பதிவு செய்து வருகின்றனர்.

அதேவேளை , வீதி செப்பனிடல் பணிகள் உள்ளிட்டவற்றை புகைப்படங்கள் எடுப்பதற்கு ஊடகவியலாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு இராணுவத்தினர் தடை விதித்துள்ளனர்.

பலத்த பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புக்களுக்கு மத்தியிலையே சர்ச்சைக்கு உரிய 400 மீற்றர் தூரமான வீதி விடுவிக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

Related Posts