Ad Widget

சரணடைந்தவர்களின் விபரங்களை வழங்க அரசாங்கம் மறுப்பு!

இறுதிப் போரின்போது காணாமல் போனோரின் விபரங்களைத் தருமாறு பாதுகாப்பு அமைச்சிடம் கோரியிருந்தபோதிலும், இதுவரை அவர்கள் அதனை வழங்குவதற்கு எந்தவொரு அக்கறையும் செலுத்தவில்லையென ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார்.

இந்த விபரங்கள் அனைத்தும் கிடைக்கப்பெற்றிருந்தால் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் ஓரளவுக்கு நிறைவுபெற்றிருக்கும்.

ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிடும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,

இறுதிப்போரில் சரணடைந்தவர்கள் அனைவரதும் விபரங்களை ஒப்படைக்குமாறு பாதுகாப்பு அமைச்சைக் கோரியிருந்தோம். இதுவரை தரவில்லை. அத்துடன் முறைப்பாட்டாளர்களின் முறைப்பாடுகளை விசாரணை செய்தபின்னர் இரண்டாந்தரப்பினரை விசாரணை செய்யும்போது எப்படியாவது குறித்த விபரங்களைப் பெறுவதாக தீர்மானித்திருந்தோம்.

இதேபோல் ஐரோப்பா, இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளில் அகதி முகாம்களில் வசிக்கும் மக்களின் விபரங்களையும் கோரியிருந்தோம். எனினும் பாதுகாப்பு மற்றும் சட்டதிட்டங்களை மேற்கோள்காட்டி அதனைத் தர மறுத்துவிட்டனர்.

அந்த விபரங்கள் கிடைத்திருந்தால் விசாரணைக்கு மிகவும் பேருதவியாக இருந்திருக்கும். அத்துடன் சிறைச்சாலைகள் திணைக்களம், புனர்வாழ்வு நிலையங்கள், வைத்தியசாலைகள் ஆகியவற்றில் விபரங்களைக் கோரியிருந்தோம். ஆனால் வைத்தியசாலைகளிலிருந்து மாத்திரமே இந்த விபரங்கள் கிடைக்கப்பெற்றன. அதில் 15ஆயிரம் வரையானவர்களின் பெயர் விபரங்கள் வெளியாகியிருந்தன. அவற்றில் பல புனைபெயரில் இருப்பதால் தேடிக்கண்டுபிடிப்பதற்கு சிரமமாகவுள்ளது.

அதேவேளை ஒரேயொரு விசாரணைக் குழுவே எங்களுக்கு அரசாங்கம் வழங்கியிருந்தது. அதில் நால்வரே உள்ளனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆட்சியிருந்த காலத்திலிருந்து விசாரணைக் குழுவொன்றை அமைக்கும்படி கோரிக்கை விடுத்திருந்த போதிலும்இ, அக்கோரிக்கையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கமே நிறைவேற்றியது.

எப்படியிருப்பினும் முறைப்பாட்டாளர்களின் விசாரணைகளை மேற்கொள்வதற்கு நாம் பாரிய சிரமங்களை எதிர்கொண்டோம். குறித்த சாட்சியாளர் ஒருவர் முறைப்பாடு செய்யும்போது அதற்குரிய மற்றய முறைப்பாட்டாளர் பிறிதொரு இடத்தில் இருப்பார்கள். இதன்காரணமாகவே விசாரணையில் தாமதம் ஏற்பட்டது எனவும் தெரிவித்தார்.

Related Posts