Ad Widget

சம்பவ இடத்தை அடையாளம் காட்டினர் சிறுமிகள், கடற்படைச் சிப்பாய்களை கைது செய்யுமாறு உத்தரவு

judgement_court_pinaiகாரைநகரில், கடற்படையினரால் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டனர் என்று கூறப்படும் சிறுமிகள் இருவரும், சம்பவ இடத்தைப் பொலிஸாருக்கு நேரில் சென்று அடையாளப்படுத்தியுள்ளனர் என்று தெரியவருகின்றது.

அதையடுத்து குறித்த முகாமில் பணியாற்றி தற்போது விடுமுறையில் சென்றுள்ள இரு கடற்படைச் சிப்பாய்களை எதிர்வரும் 25ஆம் திகதி நீதிமன்றில் முற்படுத்துமாறு சிறுவர் நீதி மன்ற நீதிபதி பணித்துள்ளார்.

காரைநகரில் 11 மற்றும் 9 வயதான இரு சிறுமிகள் வன்கொடுமைக்கு உள்ளாக்கப் பட்டிருந்தனர். குறித்த இரு சிறுமிகளும் யாழ்.போதனா வைத்தியசாலையில் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இந்தச் சம்பவம் தொடர் பில் 7 கடற்படையினரை ஊர் காவற்றுறைப் பொலிஸார்
கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்திருந்தனர்.

இவர்கள் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர். இதன் போது, குறித்த இரு சிறுமிகளும் வன்கொடுமைக்கு உள்ளாக்கியவர்கள் அந்த அணி வகுப்பில் இல்லை என்று தெரிவித்திருந்தனர். அதையடுத்து அவர்கள் 7 பேரும் தலா 50 ஆயிரம் ரூபா ஆள் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர். ஆனாலும் பிணைப் பத்திரம் அன்றைய தினம் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படவில்லை.

இந்த நிலையில் நேற்றைய தினம் வழக்கு சிறுவர் நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்டது. அதன்போது, குறித்த 7 பேருக்கும் உரிய பிணைப் பத்திரங்கள் சமர்பிக்கப்பட்டிருந்தன. அதனையடுத்து அவர்கள் 7 பேரையும் நீதிவான் விடுவித்தார்.

மேலும், இந்தச் சம்பவம் வெளிவருவதற்கு முன்னதாக, விடுமுறையில் சென்ற குறித்த முகாமைச் சேர்ந்த 2 கடற்படைச் சிப்பாய்களையும் எதிர்வரும் 25 ஆம் திகதி நீதிமன்றில் முற்படுத்துமாறு ஊர்காவற்றுறைப் பொலிஸாருக்கு நீதிபதி பணித்தார்.

ஊர்காவற்றுறைப் பொலிஸார் நீதிமன்ற அனுமதியுடன், குறித்த இரு சிறுமிகளையும், காரைநகருக்கு அழைத்துச் சென்றனர். சம்பவம் இடம்பெற்ற இடத்தை குறித்த சிறுமிகள் அடையாளம் காட்டியுள்ளனர். கடற்படை முகாமிலிருந்து சிறிது தூரத்திலுள்ள இடத்தில் வைத்தே வன்கொடுமை மேற்கொள்ளப்பட்டது என்று சிறுமிகள் அந்த இடத்தை அடையாளம் காட்டியுள்ளனர். அது தொடர்பான அறிக்கை வழக்கின் அடுத்த தவணையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. வழக்கு எதிர்வரும் 25 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

Related Posts