Ad Widget

சம்பந்தர்தான் தலைவர் அதில் மாற்றம் ஏதுமில்லை – வடமாகாண முதலமைச்சர்

வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராகத் தேர்வானது முதல் சர்ச்சைகளுக்குக் குறைவில்லாதவர் நீதியரசர் ச.வி.விக்னேஸ்வரன். அண்மைக் காலமாக அவரது கருத்துக்கள் தென்னிலங்கையையும் இந்தியாவையும்கூட ஆட்டம் காண வைத்திருக்கின்றன.

vicky0vickneswaran

கூட்டமைப்பிலிருந்து ஒரு சில கட்சிகள் பிரிந்து சென்று வேறு கட்சிகள் மற்றும் உதிரிகளுடன் சேர்ந்து மாற்று அணி ஒன்றை உருவாக்கும் முயற்சிகளின் பக்கம் சாய்கிறார் என்பது அவரைச் சுற்றி வட்டமிடும் மிக அண்மைய அரசியல் கிசுகிசு. ஆனால் முதலமைச்சர் அதனை அடியோடு மறுக்கிறார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனே தனது தலைவர் என்று அடித்துக்கூறுகின்றார். அவரை மீறி எதுவும் செய்யப் போவதில்லை என்றும் அப்படி ஒரு நிலை வந்தால் பதவியைக்கூடத் தூக்கி எறிந்துவிடுவேன் என்றும் தெரிவிக்கின்றார்.

தற்போதைய அரசியல் கள நிலைவரம் குறித்து  உதயன் பத்திரிகையுடன் அவர் மனம்விட்டுப் பேசிய உரையாடலை இனிப் பாருங்கள்…

கேள்வி: வடக்கு, கிழக்கு முன்னாள் முதலமைச்சர் அ.வரதராஜப் பெருமாள் தீடீரென ஏன் உங்களைச் சந்தித்தார் ?
பதில்: வரதராஜப்பெருமாள் என்னைச் சந்திக்க விரும்புகிறார் என்று வடக்கு மாகாண சபை எதிர்கட்சித் தலைவர் தவராசா, தொலைபேசியூடாகத் தெரிவித்தார். சரி எதற்காக என்று பார்ப்போமே என்று அவரைச் சந்திக்க சம்மதித்தேன். இதில் வேறு எதுவுமில்லை.

கேள்வி : சந்திப்பில் என்ன விடயங்கள் பேசப்பட்டன ?
பதில்: இந்தச் சந்திப்பின்போது பேராசிரியர் சிற்றம்பலமும் என்னுடன் இருந்தார். பல விடயங்களைப் பற்றிப் பேசினோம்.

கேள்வி: வரதராஜப்பெருமாள் எந்த விடயங்களில் அதிக கவனம் செலுத்தினார்?
பதில்: தனது அனுபவங்கள் சிலவற்றைச் தெரிவித்தார். மாகாண சபைக்கு இருக்கின்ற அதிகாரங்களைப் பயன்படுத்தி பல விடயங்களை சாதிக்க முடியும் என்றார். 13ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் ஆளுநரை விட மாகாண அமைச்சரவைக்கே அதிகளவு அதிகாரங்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டார். அது அப்படியில்லை, 13ஆவது திருத்தச் சட்டத்தில் அவ்வாறு சொல்லப்பட்டாலும், மாகாண சபைச் சட்டங்களின் பிரகாரம் எல்லா அதிகாரங்களும் ஆளுநர் வசமே என்பதை அவருக்கு விளக்கினேன். இதன் தாற்பரியத்தை நீதிமன்றங்கள் எமக்குச் சார்பாக வழங்கியதாகத் தெரியவில்லை என்றும் கூறினேன்.

கேள்வி: தமிழர்களுக்கான தீர்வு 13ஆவது திருத்தத்துக்குள்ளேயே முழுமையாக இருக்கின்றது என்பதாக அவர் கூறினார் என்று அறிந்தோம். அது உண்மையா?
பதில்: அவரது பேச்சின் சாராம்சம் எல்லாம், இருக்கின்ற இந்த அதிகாரங்களை வைத்து அதிகமானவற்றைப் பெற முடியும் என்பதாகவே இருந்தது.

கேள்வி: வரதராஜப் பெருமாளது கருத்தை ஏற்றுக் கொள்கின்றீர்களா ?
பதில்: ஒற்றையாட்சிக்குள் அதிகாரப் பகிர்வு என்பது நடைமுறைக்கு ஒத்துவராத ஒன்று. இதனை ஏற்கனவே பல தடவைகள் வெளிப்படையாகச் சொல்லிவிட்டேன். 13இற்குள் எல்லாமே இருக்கிறது என்றால், எமக்கு இதற்கு மேல் எதுவும் தேவையில்லை என்று சொல்லுவார்கள்.
மத்தியும், மாகாணமும் மனம் ஒத்து இருக்கையில் அது சரிபோல் படலாம். ஆனால் நீண்ட கால நடைமுறையில் அது சரிவராத ஒன்று. எனவே எமது மக்களுக்கு எதை நிரந்தரமாகப் பெற்றுக்கொடுக்கப் போகின்றோம், எதிர்கால சந்ததியினருக்கு எதை நிரந்தரமாக வழங்கப் போகின்றோம் என்பவற்றைப் பார்க்கவேண்டும். குறுகிய கால நலன்கள் இதில் முக்கியமில்லை. எனவேதான் ஒற்றையாட்சிக்குள் எந்தத் தீர்வும் அமைய முடியாது எனத் திரும்பத் திரும்பச் சொல்கின்றேன். அரசமைப்பு மாற்றப்படவேண்டும்.

கேள்வி: அப்படியானால் ஒரு தடவை நீங்கள் சொன்னதுபோல இரு தேசங்கள் ஒரு நாடு என்ற அடிப்படையிலான தீர்வுதான் இலங்கைக்குப் பொருத்தமானது என்று சொல்வீர்களா?
பதில்:இரு தேசங்கள் என்ற சொற்றொடர் பிரச்சினையை எழுப்பி விட்டுள்ளது. இரு தேசங்கள் என்று கூறும்போது சட்ட ரீதியிலான இரு வேறு மக்கள் கூட்டத்தினர் என்று பொருள்படும். நேசன் என்ற சொல்லை டாக்டர் கொல்வின் ஆர். டி சில்வா, சிங்களம் மட்டும் சட்டம் கொண்டு வரப்பட்டபோது பாவித்தார். அவர் அதனை நாடுகள் என்ற ரீதியில் பாவித்தார் போல் தெரிகிறது. ஆனால் இருவேறு மனிதப் பிரிவினர் என்ற ரீதியில் ஆள்களின் தனித்துவத்தை ஏற்றுக்கொள்ளும் ஒரு தீர்வுதான் நிரந்தரத் தீர்வாக அமைய முடியும் என்று கூறுகின்றேன்.

கேள்வி: இரு தேசம் ஒரு நாடு என்பதை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஏற்கனவே வலியுறுத்தி வருகின்றது. அதே விடயத்தை நீங்களும் எடுத்தாண்டபோது நீங்கள் அவர்களது கருத்தியலை ஏற்றுக்கொண்டுவிட்டீர்கள் போல உள்ளது என்ற விமர்சனம் உங்கள் கட்சிக்குள்ளேயே எழுந்தது. அது உண்மையா என்ன?
பதில்:இந்தச் சொற்றொடர் திம்புவில் பயன்படுத்தப்பட்டபோது இந்த முன்னணி உருவாகியிருந்ததோ நான் அறியேன். ஐக்கிய தேசியக் கட்சயின் நிறம் பச்சை. ஆகவே பச்சை நிறம் ஐக்கிய தேசியக் கட்சிக்கு மட்டுமே உரியது என்று கூறுவது போல் இருக்கின்றது மேற்படி விமர்சனங்கள்.

கேள்வி : இந்தியாவினால் கொண்டு வரப்பட்ட மாகாணசபை முறை மற்றும் 13ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடான அதிகாரப் பகிர்விற்கோ அல்லது, தமிழர்களுக்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்படவேண்டும் என்பதற்கோ, இந்திய மத்திய அரசு இனி எதுவும் செய்யாது என்று வரதராஜப்பெருமாள் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வில் குறிப்பிட்டிருக்கின்றார். இதனை நீங்கள் எவ்வாறு பார்கின்றீர்கள்?
பதில்: இந்திய அரசுதான் இங்கு மாகாணசபை முறைமையைக் கொண்டு வந்தது. எனவே அவர்கள்தான் இதனை வலுவுள்ளதாக்க வேண்டும் என்பதை நான் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றேன். இந்தியப் பிரதமர் மோடி இங்கு வந்த போது கூட நான் அதனை அவர் முன்பாகவே வலியுறுத்தியிருந்தேன்.

கேள்வி: நீங்கள் இந்தியப் பிரதமரைச் சந்தித்த பின்னர்தான் வரதராஜப் பெருமாள், இந்தியா தலையிடாது என்ற கருத்தைச் சொல்லியிருக்கிறார். வடக்கு, கிழக்கு மாகாணத்திற்கு முதலமைச்சரான காலத்தில் இருந்து இந்தியாவின் செல்லப் பிள்ளை அவர். இப்போதும் அவரையும் அவரது குடும்பத்தையும் இந்திய மத்திய அரசே ஒரிஸாவில் வைத்துப் பேணிப் பாதுகாத்து வருகிறது என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில் அவரது கருத்து உங்களது கோரிக்கைகளுக்கான இந்தியாவின் பதிலாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கவில்லையா?
பதில்: நான் இதனை நான்கு விதங்களில் பார்க்கின்றேன். மாகாணசபை முறைமையிலுள்ள குறைகளை இந்தியாவுக்கு நான் சுட்டிக்காட்டியமை, உண்மையான அதிகாரப் பகிர்வு வேண்டும் என நான் இந்தியாவிடம் வலியுறுத்தியமை, இந்தியா கொண்டு வந்த மாகாணசபை முறைமையை இந்தியாவே தலையிட்டு அதனை வலுப்படுத்த வேண்டும் என்று கேட்டமை ஆகியன தொடர்பில் தனது பதிலை இந்திய மத்திய அரசு, வரதராஜப்பெருமாள் ஊடாக எனக்குச் சொல்லியிருக்கக்கூடும் என்றும் இதை எடுத்துக் கொள்ளலாம்.
நாம் இந்தியாவுடன் நெருங்கிச் செயற்பட்டுவிடக்கூடாது அல்லது அதிகாரப் பகிர்வுக்கு அழுத்தம் கொடுக்குமாறு இந்தியாவிடம் நாம் கோரக்கூடாது என்று நிர்பந்திப்பதற்காக இலங்கை அரசு வரதராஜப்பெருமாளைப் பயன்படுத்தியிருக்கலாம் என்று கருதவும் இடமுண்டு.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக இந்திய மத்திய அரசுடன் இந்தியப் பிரதமருடன், நான் வடக்கு மாகாணசபை – நேரடியாகத் தொடர்பு வைப்பதை விரும்பாத எம்மவர்கள் சிலர், வரதராஜப் பெருமாள் ஊடாக இதனை எனக்குச் சொல்லுவித்திருக்கவுங் கூடும்.
நான்காவதாக இவை வரதராஜப் பெருமாளின தனிப்பட்ட கருத்துக்களாக, எந்த அரசியல் கலப்புமற்றதாகவும் இருந்திருக்கக்கூடும்.
வரதராஜப்பெருமாள் இவ்வாறு பேசுவதற்கு மேற்படி நான்கு விடயங்களில் ஏதாவது ஒன்று காரணமாக இருந்திருக்கும் என்றே நான் நம்புகின்றேன். அதேநேரம் இந்திய அரசு அவர் ஊடாகத்தான் இதனை எமக்குத் தெரிவிக்க வேண்டும் என்ற அவசியம் எதனையும் அது கொண்டிருக்கவில்லை என்பதையும் கருத்துக்கு எடுக்கவேண்டும்.

கேள்வி: கட்சிக்காரர்களே வரதர் ஊடாக இதனை உங்களுக்குச் சொல்லும் அளவிற்கு உங்களுக்கும் கட்சிக்கும் இடையில் என்னதான் விரிசல்? உங்கள் தலைமைத்துவத்தைக் கண்டு அவர்கள் பயப்படுகின்றார்களா?
பதில்: நான் கட்சிக்காரர்கள் என்று கூறவில்லை. அந்தச் சொல்லை நீங்கள்தான் பயன்படுத்துகிறீர்கள்.

கேள்வி: இலங்கையில் நடந்தது தமிழ் இனப்படுகொலைதான் என்கிற தீர்மானத்தை அண்மையில் நீங்கள் முன்னின்று நிறைவேற்றியிருந்தீர்கள். அது இலங்கை அரசு உள்ளிட்ட பல தரப்புக்களையும் சங்கடப்படுத்தியமை தெளிவாகத் தெரிந்தது. இந்த விடயத்தில் கட்சித் தலைமையின் கட்டுப்பாடுகளைக்கூட நீங்கள் மீறிச் சென்றுவிட்டீர்கள் என்றும் சொல்லப்பட்டது. நீங்கள் தீர்மானம் நிறைவேற்றியமை குறித்து தமக்கு எதுவும் தெரியாது என்று கூட்டமைப்பின் தலைவர்கள் சில இடங்களில் வெளிப்படையாகவே பேசியிருக்கிறார்கள். உண்மையில் நீங்கள் கட்சியை மீறித்தான் செயற்பட்டீர்களா? இப்படிப்பட்ட ஒரு தீர்மானம் நிறைவேற்றப்படுகின்றமையை கூட்டமைப்பின் தலைமை விரும்பவில்லையா?
பதில்: எங்கள் தலைவர் இரா.சம்பந்தன் மிகச் சிறந்த ஜனநாயகவாதி. அவருடன் கருத்து வேறுபாடுகள் வரலாம். அவை வழக்கமானவை. அவற்றைப் பேசித் தீர்த்துக் கொள்ளலாம். பேசித் தீர்த்துக் கொள்வோம். இதனை முரண்பாடு என்று சொல்ல முடியாது. தீர்மானம் சர்வதேச மட்டத்தில் பலத்த சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது எனக்குத் தெரியும். என்னைச் சந்தித்த, சகல இராஜதந்திரிகளுமே, ஏன் இந்தத் தீர்மானத்தை இப்போது நிறைவேற்றினீர்கள் என்ற கேள்வியைத் தவறாமல் கேட்டார்கள். அவர்கள் எல்லோருக்கும் தகுந்த சரியான பதிலை வழங்கியிருக்கின்றேன்.
நான் எந்த மக்களின் பிரதிநிதியாகத் தேர்வு செய்யப்பட்டேனோ, அந்த மக்களின் பிரச்சினைகளை தேவைகளை எடுத்தியம்புவது எனது கடமை. மேலும், இந்த நாட்டில் நல்லிணக்கம் ஏற்பட வேண்டுமாக இருந்தால் உண்மை கண்டறியப்படவேண்டும். உண்மை கண்டறியப்பட வேண்டுமாக இருந்தால், கடந்த காலங்களில் என்ன நடந்தது என்பது அறியப்பட வேண்டும்.
தமிழ் மக்களுக்கு கடந்த காலங்களில் இவ்வளவும் நடந்திருக்கின்றதே என்பதைச் சிங்கள மக்கள் உணரவேண்டும். சர்வதேச சமூகமும் எமது விடயத்தில் தலையிடும்போது, தனித்து 2009ஆம் ஆண்டில் நடைபெற்ற விடயங்களை மாத்திரம் ஆராயக் கூடாது. 1948ஆம் ஆண்டிலிருந்து தமிழர்களுக்கு என்ன நடந்தது என்பதை அவர்களும் அறிந்து கொள்ளவேண்டும். அதற்காகவே வடக்கு மாகாணசபையில் இனப்படுகொலைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. உண்மையைத் தெரிந்துணுகாண்டல்த்தான் உகந்த நல்லிணக்கம் ஏற்பட முடியும்.

கேள்வி: புதிய அரசு பதவியேற்ற உடனேயே அந்தத் தீர்மானத்தை நீங்கள் நிறைவேற்றியமைக்கு ஏதாவது பின்னணிகள் உண்டா?
பதில்: கடந்த வருடம் அந்தத் தீர்மானத்தைப் போன்ற ஒரு முன்வரைவை உறுப்பினர் சிவாஜிலிங்கம் சபையில் சமர்பித்திருந்தார். அது 6 மாதங்களுக்கு மேலாக நிறைவேற்றப்படாமல் இழுபறிப்பட்டது. ஜனாதிபதித் தேர்தல் நேரத்தில் அதனை நிறைவேற்றினால், மஹிந்த அரசுக்கு அது சாதகமாகிவிடும் என்று அஞ்சினோம். எனவே தேர்தல் முடிந்த பின்னர் அதனை நானே சபையில் நிறைவேற்றுகின்றேன் என்று வாக்குறுதியளித்தேன். கொடுத்த வாக்குறுதிக்கு அமைய, தீர்மானத்தை மாகாண சபையில் நிறைவேற்றினேன்.
இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வருவதற்கு முன்னர் பல விடயங்களையும் நான் ஆறஅமர யோசித்தேன். நான் சரியாகச் செயற்படுகின்றேனா? இதனைக் கொண்டு வருவது சரியா? கொண்டு வந்தால் என்ன நடக்கும்? கொண்டுவராவிட்டால் என்ன நடக்கும்? என்ற பலவாறான கேள்விகளுக்குக் குடைந்து பதில்தேடி இறுதியிலேயே, தீர்மானத்தைச் சமர்பித்தேன். அதற்கு உறுதுணையாக இருந்தது “”வடமகாணத்தில் இருந்து எந்த ஒரு இராணுவ முகாமையும் அப்புறப்படுத்தமாட்டோம்” என்ற, அமைச்சர் ஒருவரின் திடமான கூற்று.
இந்தத் தீர்மானத்தை வரைபு செய்து தருமாறு எனது மாணவனான அரசியல்வாதி ஒருவரிடம் கேட்டேன். அவர் சம்மதித்து விட்டுப் பின்னர் வெளிநாடு சென்றுவிட்டார். அதனைச் செய்து தரமுடியவில்லை. இறுதியில் நானே, அதனைப் பலரின் உதவியுடன் தயார் செய்து சபையில் சமர்பித்தேன்.

கேள்வி: இந்தத் தீர்மானத்தின் பிரதி, ஐ.நா. சபை உள்ளிட்ட பல்வேறு இராஜதந்திரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. அவர்கள், இந்தத் தீர்மானம் தொடர்பில் ஏதாவது பதிலை வழங்கியுள்ளனரா ?
பதில்: எழுத்து மூலமாக எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. இராஜதந்திர மட்டங்கள் ஊடாக, எமது தீர்மானம் கிடைக்கப் பெற்றதையும், எமது பிரச்சினையை அறிந்து கொண்டதையும் தெரியப்படுத்தியுள்ளனர்.

கேள்வி: நீங்கள் வடக்கு மாகாண சபைக்குக் கொண்டு வரப்பட்டபோது, தெற்குடன் நல்லிணக்கத்தைப் பேணக்கூடிய மென்போக்குவாதி என்றே அடையாளப்படுத்தப்பட்டீர்கள். கூட்டமைப்பினரின் விருப்பத்துக்கு மாறாக மஹிந்தவிற்கு முன்னால் பதவியேற்பு போன்ற சில சமிக்ஞைகள் ஊடாக நீங்களும் அவ்வாறேதான் காட்டிக் கொண்டீர்கள். ஆனால் அண்மைக் காலமாக உங்கள் போக்கில் பெரும் மாற்றம் தெரிகிறது. இருக்கும் எல்லாத் தமிழ்த் தலைவர்களையும்விட தீவிரம் மிக்கவராக உங்களை எடைபோடக்கூடிய கருத்துக்களை சொல்லியும் செயல்களைப் புரிந்தும் வருகிறீர்கள். ஏன் இந்த மாற்றம்?

பதில்: சிங்கள மக்கள் மத்தியில் வாழும் தமிழ் மக்களிடத்தில் இயற்கையாகவே ஒருவிதமான எண்ணம் இருக்கும். அதாவது, தமிழ் மக்களின் பிரச்சினைகள் பற்றி அவர்களுக்கு எவ்வளவுதான் தெரிந்திருந்தாலும், அதனை உணர்ந்திருந்தாலும், சிங்கள மக்களின் மனம்கோணாமல் செயற்பட வேண்டும் என்றே அவர்கள் எண்ணுவார்கள். சிங்களவர்களைப் பகைத்துக் கொள்ளக்கூடாது என்ற எண்ணம் இருக்கும்.
ஆனால் இங்கு நிலைமை நேர்மாறானது. நான் வடக்கு மாகாண முதலமைச்சராக இங்கு வந்து, ஒன்றரை வருடங்களுக்கு மேலாகின்றது. நான் பொதுவாக இங்குதான் வாழ்ந்து வருகின்றேன் மக்களோடு மக்களாக. இங்கு தினமும் பல விதமான மக்களைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றேன். பலவிதமான இடங்களுக்குச் சென்று வருகிறேன். அந்த மக்கள் ஒவ்வொருவரும் சொல்லும் விடயங்கள் என் மனதில் ஆழப்பதிந்துள்ளன. அவர்களது துன்பங்கள், வேதனைகளை நான் தினம் தினம் கேட்கின்றேன். சிங்கள மக்களின் மனம் கோணாமல் கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டும் என்ற கடப்பாடு எதுவும் எனக்கில்லை.
எமது மக்களின் உண்மை நிலை எனது மனதில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனாலேயே, இந்த மக்களின் எண்ணம் எதுவோ அதனைச் செயற்படுத்துகின்றேன். கொழும்பில் பிறந்து வளர்ந்த எனக்கே இந்த மக்களின் குறைகளை தொடர்ச்சியாக கேட்கும்போது இவ்வாறான மனமாற்றம் ஏற்படுகின்றது என்றால், இங்கு பிறந்து வளர்ந்த எமது தலைவர்கள், எமது மக்களுடன் தொடர்ந்திருந்து அவர்களின் குறைகளைக் கேட்டால் என்னைவிட அதிகமாக முழுமும்முரத்துடன் செயலாற்றுவார்கள் என்றே நான் நினைக்கிறேன். எனவே எங்களது தமிழ்த் தலைவர்கள் கொழும்பிலிருப்பதை விட, இங்குள்ள மக்களுடன் தொடர்ந்து இருக்க வேண்டும். அப்போது அவர்களும் என்னைப் போல் செயற்படுவார்கள்.

கேள்வி: தமிழ்த் தலைமைகள் தமது மக்களுடன் செலவிடும் நேரகாலம் போதாது என்றா சொல்ல வருகிறீர்கள்? அல்லது மக்களின் துன்பங்களை உணரும் திறன் அவர்களிடம் மழுங்கிப்போய்விட்டது என்று சொல்கிறீர்களா?
பதில்: பார்த்தீர்களா! பத்திரிகைக்காரர்கள் என்பதைக் காட்டிவிட்டீர்கள். மக்கள் தலைவர்கள் தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின் மனம் அறிந்து அவர்கள் சார்பில் செயலாற்ற வேண்டும் என்று கூறுகின்றேன்.

கேள்வி: தற்போது நீங்கள் மிகத் தீவிரமான கருத்துக்களை வெளியிட்டு வருவது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றான அணி ஒன்றைத் தலைமை தாங்குவதற்கான முன்னாயத்தங்களில் ஒன்று என்ற பேச்சும் இருக்கிறதே, அது உண்மையா?
பதில்: நான் தீவிரமான கருத்துக்கள் எதனையும் வெளியிடவில்லை. உண்மையை உணர்த்தவிழைகின்றேன். உண்மையைக் கூறுவது தீவிரம் என்றால் பொய் கூறுவதுதான் நியமம் என்றாகிவிடும். எமது தலைவர் இரா. சம்பந்தன் அவர்களே! அவரை மிஞ்சி எந்தத் தீர்மானமும் நான் எடுக்கமாட்டேன். அவ்வாறான ஒரு நிலை ஏற்பட்டால் நான் என் பதவியில் இருந்து ஒதுங்கிக்கொள்வேன்.

கேள்வி: புலம்பெயர் நாடுகளில் உள்ள சிலரின் ஆதரவுடன் ஈழத் தமிழ்த் தலைமைத்துவத்தில் கூட்டமைப்புக்கு – குறிப்பாக தமிழரசுக் கட்சியின் ஆதிக்கம் அதிகம் உள்ள கூட்டமைப்புக்கு – மாற்றான அணி ஒன்றை உருவாக்கி அதற்கு மக்களின் ஆதரவைப் பெறும் முயற்சிக்குத் தலைமைதாங்கச் சொல்லி நீங்கள் கேட்கப்பட்டுள்ளீர்கள் என்று தகவல்கள் வருகின்றன. இதிலுள்ள உண்மை என்ன?
பதில்: இவ்வாறான பல கதைகளைக் கேள்விப்பட்டுள்ளேன். என்னுடன் இது பற்றி யாரும் நேரடியாகப் பேசவில்லை. இருப்பினும், நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மூன்று, நான்கு வாரங்களுக்கு முன்னர் என்னைச் சந்தித்தார். அந்தச் சந்திப்பில் பல விடயங்கள் பேசப்பட்டன. எல்லாவற்றையும் வெளிப்படுத்த முடியாது. இருப்பினும் அவரிடம் தெளிவாக ஒரு பதிலைத் தெரிவித்தேன். நான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும், எத்தகைய கருத்து முரண்பாடுகள் ஏற்படினும் இரா.சம்பந்தனை விட்டு விலகப் போவதில்லை என்பதுதான் அந்தத் தெளிவான பதில்.
என்னைத் தங்கள் தலைவராகத் தெரிந்தெடுத்த மக்களுக்கு எதைப் பெற்றுக் கொடுக்கப் போகின்றோம் என்பதே எனது சிந்தனை. அதற்காகத் தொடர்ந்தும் பணியாற்றுவேன். பதவி ஒரு பொருட்டல்ல. உண்மையில் இது ஒரு சுமை. என்னை இந்தப் பதவியிலிருந்து வெளியே போகச் சொன்னாலும் உடனேயே சென்று விடுவேன். இருக்கும் மட்டிலும் என் கடமையை முடியுமான மட்டில் செய்தே தீருவேன்.

நன்றி: உதயன்

Related Posts