Ad Widget

சமஷ்டிக் கோரிக்கையால் தீர்வு விடயத்தில் இழுபறி வராது! – ஐக்கிய இலங்கை – ஒற்றையாட்சிக்கிடையில் வித்தியாசமில்லை என்கிறார் ரணில்

நாம் ஒருபோதும் ஐக்கியத்தைக் கைவிடவில்லை. ஐக்கிய இலங்கை என்பது ஒரே இலங்கையைத்தான் (ஒற்றை ஆட்சி). ஐக்கியத்திற்கும், ஒரே இலங்கைக்கும் (ஒற்றை ஆட்சி) இடையில் வித்தியாசமில்லை. ஐக்கியப்படுத்துதல் என்பது அனைவரையும் ஒன்றிணைக்கும் அரசியல், கலாசார வேலைத்திட்டமாகும். ஒற்றையாட்சி என்பது நீதிமன்ற நடவடிக்கையாகும். – இவ்வாறு பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் மாறுபட்ட நிலைப்பாட்டில் இருப்பதனூடாக தேசிய பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதை காலந்தாழ்த்தாது என்றும், பேச்சினூடாக தீர்வைப் பெற்றுக்கொள்வதற்கு இது எவ்விதத் தடையும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

பி.பி.சி. சிங்கள இணையத்தளத்துக்கு வழங்கிய செவ்வியிலேயே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இவற்றைத் தெரிவித்துள்ளார்.

தேசிய பிரச்சினைக்குத் தீர்வாக ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரத்தைப் பகிர்வதாக கூறிவந்த ஐக்கிய தேசியக் கட்சி, இனவாதமின்றி தேர்தலில் வெற்றிபெற முடியாது என்பதனாலா இம்முறை ‘ஒரே இலங்கை’ (ஒற்றையாட்சி) என்ற நிலைப்பாட்டுக்கு மாற்றமடைந்தது என எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த பிரதமர் ரணில் விகிரமசிங்க, ஐக்கிய இலங்கை என்பது ஒரே இலங்கையைத்தான். நாம் ஒருபோதும் ஐக்கியத்தைக் கைவிடவில்லை. ஐக்கியத்திற்கும், ஒற்றையாட்சிக்கும் இடையில் வித்தியாசமில்லை. ஆங்கிலத்தில் வேறுபாடு இருக்கிறது. ஆனால், சிங்களத்தில் இல்லை. ஐக்கியப்படுத்துதல் என்பது சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் வேலைத்திட்டம். அரசியல் வேலைத்திட்டம். கலாசார வேலைத்திட்டம். ஒற்றையாட்சி என்பது நீதிமன்ற நடவடிக்கையாகும் – என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஐக்கிய தேசியக் கட்சி ஒற்றையாட்சி தொடர்பில் அவதானம் செலுத்தும்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சமஷ்டி ஆட்சி முறைமையைக் கோரி நிற்பதனூடாக தேசிய பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதை மீண்டும் காலம் தாழ்த்துவதாக அமையாதா என எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, “பேச்சினூடாக தீர்வைப் பெற்றுக்கொள்வதற்கு இது எவ்விதத் தடையும் இல்லை” – என்று கூறியுள்ளார்.

Related Posts