Ad Widget

சன்மாஸ்டருடன் த.தே.கூட்டமைப்பினர் புகைப்படங்கள் எடுத்தமை பயங்கரமான பிரச்சினை – அரசாங்கம்

வன்னியில் கைது செய்யப்பட்ட கிருஷ்ணராஜாவின் நண்பரான சன்மாஸ்டருடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சில முக்கியஸ்தர்கள் புகைப்படங்களை எடுத்துள்ளனர். விடுதலைப் புலிகளை நாட்டில் இல்லாதொழித்துள்ள போதும் சர்வதேச மட்டத்தில் ஈழத்தினை ஏற்படுத்த தலைமறைவாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது நாட்டிற்கு பயங்கரமான பிரச்சினையாகும் என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

gl peris

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

விடுதலைப் புலிகளுடன் தொடர்புபட்ட கிருஷ்ணராஜா வன்னியில் வைத்து கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்ட போது பலரின் யையொப்பம் இடப்பட்ட வெற்றுத்தாள்கள் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டன. ஐக்கிய நாடுகள் சபையிடம் இருந்து நஷ்டஈடு பெறுவதற்காக இந்த வெற்றுத் தாள்கள் தன்னத்தேகொண்டிருந்ததாக தெரிவித்துள்ளார். மேலும் பல பேரின் விபரங்களை உள்ளடக்கிய டயரி ஒன்றும் கைப்பற்றப்பட்டது. அதில் பெயர், வயது, தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் வாகன அனுமதிப்பத்திர விபரங்கள் என்பன கணப்பட்டன. இந்த ஆவணங்களை வைத்து பார்க்கும் போது குறித்த நபர், ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு போலியான சாட்சியங்களை வழங்க இந்த தகவல்களை வைத்திருக்கலாம் என எண்ணத்தோன்றுகின்றது.

கைது செய்யப்பட்ட கிருஷ்ணராஜா என்பவருக்கு நிதி உதவி வழங்கியவரே சன்மாஸ்டர். சன்மாஸ்டருக்கும் கிருஷ்ணராஜாவுக்கும் இடையில் இரு மாதங்களில் 67 தொலைபேசி உரையாடல்கள் பதிவாகியுள்ளன. குறித்த நபர்கள் ஐக்கிய நாடுகள் சபைக்கு போலியான சாட்சியங்களை ஆவணங்கள் வழங்க முற்பட்டுள்ளனர்.

சன்மாஸ்டர் என்பவர் தற்போது நாட்டில் இல்லை. ஆனால் அவருடைய முக்கிய புகைப்படங்கள் சில எமக்கு கிடைத்தன. அப் புகைப்படங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சில முக்கியஸ்தர்களும் வெளிநாட்டு தூதரக அதிகாரிகள் பலரும் ஒன்றாக இருக்கின்றனர்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு சாட்சியங்கள் தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்கும் இறுதி திகதி ஒக்டோபர் 30 ஆம் திகதி என அறிவிக்கப்பட்டது. ஆனால் இதற்கு பின்னர் சாட்சியங்கள் ஏற்று கொள்ளப்பட்டன. இவ்விடயம் தொடர்பாக சன்டே லீடர் பத்திரிகையில் தலைப்புச் செய்தி ஒன்றும் பிரசுரமாகியிருந்து.

இதனையடுத்து இதற்கு பதிலளிக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் பேச்சாளர் கொல்வின், சாட்சியங்கள் தொடர்பான ஆவணங்களை ஒக்டோபர் 30 ஆம் திகதிக்கு முன்னர் பெற்றுகொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டாலும் முக்கியமான சாட்சியங்கள் அடங்கிய ஆவணங்கள் குறிப்பிட்ட திகதிக்கு பின்னர் ஏற்றுகொள்ளப்படும் என குறிப்பிட்டிருந்தார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையானது உலகளாவிய ஒரு அமைப்பாகும். அவ்வாறு இருக்கையில் எவ்வாறு கால வரையறைகளை மாற்ற முடியும். மேற்கூறிய விடயங்களை வைத்து பார்க்கும் போது நாட்டுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் அதன் ஆதரவுடன் இலங்கைக்கு எதிராக பாரிய திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நாட்டில் பயங்கரவாதத்தை இல்லாதொழித்திருந்தாலும் சர்வதேச மட்டத்தில் தமிழ் ஈழத்தை உருவாக்க பாரிய செயற் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இது நாட்டுக்கு பயங்கரமான விடயமாகும்.

Related Posts